Published:Updated:

``தலைமை யாராக இருந்தாலும் அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும்” - சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

``அதிமுக-வில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு. ஆனால் அங்கு நடக்கும் கோஷ்டிப்பூசல் விவகாரம் வருத்தம் அளிக்கிறது” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

``தலைமை யாராக இருந்தாலும் அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும்” - சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

``அதிமுக-வில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு. ஆனால் அங்கு நடக்கும் கோஷ்டிப்பூசல் விவகாரம் வருத்தம் அளிக்கிறது” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Published:Updated:
நயினார் நாகேந்திரன்

நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ராமையன்பட்டி, அரசுப் புது காலனி பகுதிகளில் ரூ.16,00,000 திட்ட மதிப்பீட்டில் புதிய நிழல் குடை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. நெல்லை சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவருமான நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு நிகழ்ச்சிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கிவைத்தார்.

அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி
அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி

நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த அவரிடம் ராமையன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனைப் பட்டா கோரியும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கோரியும் மனு அளித்தனர். விரைவில் அவர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்வதாக அவர் உறுதியளித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், ``நெல்லை சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று நான் அமைச்சராக இருந்த காலத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகளைச் செயல்படுத்தினேன். எனது காலத்திலேயே பாளையங்கோட்டை பல்நோக்கு மருத்துவமனை மற்றும் ராமையன்பட்டி கால்நடைக் கல்லூரி ஆகியவை கொண்டுவரப்பட்டன.

செய்தியாளர் சந்திப்பு
செய்தியாளர் சந்திப்பு

நெல்லை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மானூர் பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதற்கான அனுமதி வழங்கி கல்லூரியும் திறக்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு சுத்தமல்லிப் பகுதியில் கேந்திர வித்யாலயா பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மேலும் தொடர்ந்து அவர் பேசுகையில், ``அ.தி.மு.க-வில் இரு கோஷ்டிகளாக இருந்ததால்தான் அங்கிருந்து நான் வெளியே வந்தேன் அ.தி.மு.க-வில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு. ஆனால் அங்கு இப்போது வரை கோஷ்டிப்பூசல் இருப்பது வருத்தமளிக்கிறது. அதிமுக-வில் இருக்கும் இரு தரப்பினரில் யாருக்கும் பாரதிய ஜனதா கட்சி சாதகமாகச் செயல்படவில்லை. இந்த விவகாரத்தில் கட்சித் தலைமையே உரிய முடிவெடுக்கும்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

அ.தி.மு.க தலைமை அலுவலகம் அருகே சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தி.மு.க அரசு தடுத்திருக்க வேண்டும். அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கும் அளவுக்கு அரசு சென்றிருக்கக் கூடாது. நாங்கள்தான் சட்டமன்றத்தில் தி.மு.க-வுக்கு எதிர்க்கட்சியாகச் செயல்படுகிறோம். எதிர்ப்பைத் தெரிவிக்க எண்ணிக்கை முக்கியம் அல்ல.

அ.தி.மு.க வலுவாக இருக்க வேண்டுமென்றால் இணைந்த கைகளாக இருந்தால் மட்டுமே நல்லது. அ.தி.மு.க தலைமைப் பொறுப்புக்கு யார் வந்தாலும் பரவாயில்லை. ஆனால் அ.தி.மு.க ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து” என்று தெரிவித்தார்.

பேட்டியளிக்கும் நயினார் நாகேந்திரன்
பேட்டியளிக்கும் நயினார் நாகேந்திரன்

மனு அளிக்க வந்த பெண்ணை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலையில் தட்டிய விவகாரம் தொடர்பாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கெடு விதித்திருந்தார். இது பற்றிக் கேட்டதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், ``அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மனு அளிக்க வந்த பெண்ணிடம் இயல்பாக நடந்துகொண்டதைப் பெரிதாக்கவேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்தார்