Published:Updated:

ஒன் பை டூ: தை 1 - சித்திரை 1... எது தமிழ்ப் புத்தாண்டு?

ஒன் பை டூ
பிரீமியம் ஸ்டோரி
ஒன் பை டூ

தை முதல் நாள்தான் தமிழர்களின் புத்தாண்டு. அதில் எள்ளளவும் மாற்றுக்கருத்து இல்லை. தி.மு.க மற்றும் தமிழறிஞர்களின் கருத்து மட்டுமல்ல... அறிவியல்பூர்வமான உண்மையும்கூட

ஒன் பை டூ: தை 1 - சித்திரை 1... எது தமிழ்ப் புத்தாண்டு?

தை முதல் நாள்தான் தமிழர்களின் புத்தாண்டு. அதில் எள்ளளவும் மாற்றுக்கருத்து இல்லை. தி.மு.க மற்றும் தமிழறிஞர்களின் கருத்து மட்டுமல்ல... அறிவியல்பூர்வமான உண்மையும்கூட

Published:Updated:
ஒன் பை டூ
பிரீமியம் ஸ்டோரி
ஒன் பை டூ

தமிழ்நாடு அரசின் மானியக் கோரிக்கை நிகழ்ச்சி நிரலில், `ஏப்ரல் 14 - தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை’ என்று அச்சிடப்பட்டுள்ளது. தை முதல் தேதியை, தமிழ்ப் புத்தாண்டு என்று தி.மு.க சொல்லிக்கொண்டிருக்கும்போது, அரசின் நிகழ்ச்சி நிரலில் ஏப்ரல் 14 அதாவது சித்திரை முதல் தேதியை, தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிட்டு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்படுகிறது!

சிவசங்கரி, அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர்

‘‘தமிழ்ப் புத்தாண்டு விவகாரத்திலும் தி.மு.க-வின் இரட்டை நிலைப்பாடு வெளிப்பட்டிருக்கிறது. `கோ பேக் மோடி’, `மத்திய அரசு, மாநில அரசை மதிப்பதில்லை’, ‘மாநில சுயாட்சி வேண்டும்’ என்று இங்கே மத்திய அரசுக்கு எதிராகவும், பா.ஜ.க-வுக்கு எதிராகவும் முழங்குவார்கள். ஆனால், டெல்லியில் தங்கள் கட்சியின் நிகழ்ச்சிக்கு பா.ஜ.க-வினரை அழைப்பது, ‘மோடியுடனான சந்திப்பு நிறைவாக இருந்தது’ என்று பேசுவது என முற்றிலும் முரணாக நடந்துகொள்வார்கள். ‘தமிழ்… தமிழ்’ என்று பேசுவார்கள். ஆனால், தமிழுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்க மாட்டார்கள். கச்சத்தீவு, காவிரிப் பிரச்னைகள், எழுவர் விடுதலை, ஈழத்தமிழர் பிரச்னை, நீட் தேர்வு விவகாரம் என்று அனைத்திலும் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு பேச்சு... ஆளும் அரசாக இருக்கும்போது மற்றொரு பேச்சு என்று நிறம் மாறிக்கொண்டிருப்பார்கள். அன்றிலிருந்து இன்று வரை சித்திரை ஒன்றைத்தான் நாம் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடிவருகிறோம். அ.தி.மு.க-வை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காகவே தை ஒன்றை, தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்தவர்களின் நிறம், அவர்களே வெளியிட்டுள்ள நிகழ்ச்சி நிரல் மூலம் இப்போது வெளுத்துவிட்டது. இப்படிச் சந்தர்ப்பவாத, நிறம் மாறும் அரசியல்தான் தி.மு.க-வுக்குத் தெரியும். அதைத்தான் அவர்கள் செய்துவருகிறார்கள்!”

சிவசங்கரி, தமிழ் கா.அமுதரசன்
சிவசங்கரி, தமிழ் கா.அமுதரசன்

தமிழ் கா.அமுதரசன், தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர்

‘‘தை முதல் நாள்தான் தமிழர்களின் புத்தாண்டு. அதில் எள்ளளவும் மாற்றுக்கருத்து இல்லை. தி.மு.க மற்றும் தமிழறிஞர்களின் கருத்து மட்டுமல்ல... அறிவியல்பூர்வமான உண்மையும்கூட. 2008-ம் ஆண்டு தை ஒன்றை, தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து ‘தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டு சட்ட முன்வடிவு’ அறிமுகப்படுத்தப்பட்டு, நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதன் பிறகு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான, ‘எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம்’ எனச் செய்யும் அ.தி.மு.க அரசு, சித்திரை ஒன்றைத் தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து, திராவிடத் தமிழர்களின் பண்பாட்டின்மீது திரிபை ஏற்படுத்தியது. ஆனால், மீண்டும் தி.மு.க ஆட்சி அமைத்ததன் பிறகான, பொங்கல் பரிசுத் தொகுப்பில்கூட ‘தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்’ என்றுதான் அச்சிடப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க அரசு சூறையாடிய தமிழ்நாட்டின் பொருளாதாரநிலை, பறிபோன இளைஞர் நலன், சிதைந்த நிலையிலுள்ள கல்வி, தொழில்துறை, நீர்த்துப்போன மாநில உரிமைகள் போன்றவற்றைச் சரிசெய்யும் முனைப்பில் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஈடுபட்டுள்ளது. தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தைச் சரிசெய்து வாழ வழிவகை செய்துவிட்டு, அ.தி.மு.க அரசால் சிதைக்கப்பட்ட தமிழர் பண்பாட்டை மீட்கும் நடவடிக்கையில் தலைவர் விரைவில் கவனம் செலுத்துவார். அதுவரை மக்கள் மனதில் தை ஒன்றும், ஏட்டில் சித்திரை ஒன்றும் தமிழ்ப் புத்தாண்டாக இருக்கும்!’’