Published:Updated:

`அம்மா இருசக்கர வாகனத் திட்டம் ரத்து' - கொதிக்கும் அதிமுக... திமுக-வின் பதில் என்ன?!

அம்மா இருசக்கர வாகனத் திட்டம் ரத்து

``அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தினை ரத்து செய்யும் முடிவினை கைவிட வேண்டுமென்று முதல்-அமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்'' என்று ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

`அம்மா இருசக்கர வாகனத் திட்டம் ரத்து' - கொதிக்கும் அதிமுக... திமுக-வின் பதில் என்ன?!

``அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தினை ரத்து செய்யும் முடிவினை கைவிட வேண்டுமென்று முதல்-அமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்'' என்று ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Published:Updated:
அம்மா இருசக்கர வாகனத் திட்டம் ரத்து

தமிழ்நாட்டில் கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட, அம்மா இருசக்கர வாகனத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது, அ.தி.மு.க தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. ''ஏற்கெனவே அம்மாவால் கொண்டு வரப்பட்ட தாலிக்குத் தங்கம், அம்மா மினி க்ளினிக் உள்ளிட்ட திட்டங்களைக் கைவிட்டார்கள். இப்போது இந்தத் திட்டம்... அம்மாவின் பெயரும் புகழும் நிலைத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் தொடர்ந்து இப்படிச் செய்து வருகிறார்கள்'' என தங்களின் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்கிறார்கள் அ.தி.மு.க-வினர். ஆனால், ``தி.மு.க ஆட்சியில் பேருந்தில் மகளிருக்கு இலவச பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், இரு சக்கர வாகத்திட்டத்திற்கான தேவை குறைந்துள்ளது'' என விளக்கமளித்துள்ளார் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன்.

பெரியகருப்பன்
பெரியகருப்பன்

ஆனால், அமைச்சரின் விளக்கத்துக்கு அ.தி.மு.க-வினர் சமாதானமடையவில்லை. இதுகுறித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

``அம்மா இருசக்கர வாகனத் திட்டத்திற்கு மாற்றாக மகளிர் இலவசப் பேருந்து திட்டத்தை ஒப்பிடுவது நியாயமற்ற செயல். ஒரு திட்டத்துக்கு மாற்றாக இன்னொரு திட்டத்தைக் கூறுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இன்னும் சொல்லப் போனால், இலவசப் பேருந்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும், நாள்கள் செல்லச் செல்ல மகளிர் இலவசப் பேருந்து திட்டம் நீர்த்துப் போய்விடுமோ என்ற அச்சத்தில் மகளிர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தத் திட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது என்பதாலும், 'அம்மா' என்கிற அடைமொழியுடன் கூடியத் திட்டம் என்பதாலும், இத்திட்டத்தை தி.மு.க. அரசு முடக்கியுள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட ஒவ்வொரு திட்டத்துக்கும் மூடுவிழா நடத்தும் வேலையைத்தான் தி.மு.க. அரசு செய்து கொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

'சொன்னதைச் செய்வோம்' என்பதைவிட 'சொல்லாததையும் செய்வோம்' என்பதுதான் கடந்த பதினோறு மாத கால தி.மு.க. ஆட்சியின் சாதனை. கொடியவன் என்று மக்களிடம் கெட்ட பெயர் வாங்கும் அரசனின் ஆட்சி விரைவில் வீழ்ந்து விடும் என்று வள்ளுவரின் வாக்கினை மனதில் நிலை நிறுத்தி, அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தினை ரத்து செய்யும் முடிவினை கைவிட வேண்டுமென்று முதல்-அமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓ. பன்னீர்செல்வம்
ஓ. பன்னீர்செல்வம்

இந்தநிலையில், அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர், சிவசங்கரி இதுகுறித்துப் பேசும்போது,

``ஆட்சிக்கு வந்த இரண்டாவது நாளிலே அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கினார்கள். தொடர்ச்சியாக, அம்மா மினி கிளினிக்கை இழுத்து மூடினார்கள். அடுத்து மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் திருமண உதவித் திட்டத்தோடு, எட்டு கிராமம் தங்கத்தைச் சேர்த்து அம்மா (ஜெயலலிதா) கொடுத்தார்கள். தாலிக்குத் தங்கம் என்கிற அந்த திட்டம் மிகப்பெரியளவில் பெண்கள் மத்தியில் ரீச் ஆனது. ஆனால், அதையும் ரத்து செய்துவிட்டு உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக அறிவித்திருக்கிறார்கள். படிக்கும் பெண் குழந்தைகளுக்கு உதவி செய்வது நல்ல விஷயம்தான் ஆனால், தாலிக்குத் தங்கம் திட்டத்தை எடுத்தது ஏன்?...நாங்கள் மட்டுமல்ல, தி.மு.க-வின் தோழமைக் கட்சித் தலைவர்களே அந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், ஆளும் கட்சி அதைக் கண்டுகொள்ளவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்போது அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தைக் கைவிட்டிருக்கிறார்கள். பணத்தை சிக்கனம் செய்வதற்கான நடவடிக்கை என விளக்கம் தருகிறார்கள். ஆனால், அம்மா பெயரில் எந்தத் திட்டமும் இருக்கக்கூடாது, அம்மாவின் பெயரை மக்கள் மனதில் இருந்து எடுக்கவேண்டும் என்பதற்காகத்தான் தொடர்ச்சியாக இப்படிச் செய்துகொண்டிருக்கிறார்கள். புதிதாக ஒரு திட்டம் கொண்டு வருவதில் தவறில்லை, அதற்காக ஏற்கெனவே நன்றாகச் செயல்பட்டுக்கொன்டிருக்கிற ஒரு திட்டத்தை ஏன் கைவிட வேண்டும் என்பதுதான் எங்கள் கேள்வி. தி.மு.க-வினர் எப்போதும் பணக்காரர்களைப் பற்றித்தான் கவலைப்படுவார்களே தவிர, ஏழை எளிய மக்களைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். பேச்சுக்கு ஒருமுறை திராவிட மாடல், சமூக நீதி என்கிறார் முதல்வர். ஆனால், ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தை உருவாக்குவதுதான் சமூகநீதி. அதுமட்டுமல்ல, புரட்சித் தலைவருக்குப் பிறகு அம்மாவின் நல்ல திட்டங்களால் அ.தி.மு.க-வுக்கு பெண்களால் ஒரு வலுவான வாக்குவங்கி உருவாகியிருக்கிறது. அதை உடைக்கவேண்டும் என்பதுதான் இவர்களின் திட்டம். அ.தி.மு.க-வையே இல்லாமல் செய்வதற்கான முயற்சியைத்தான் இவர்கள் எடுத்து வருகிறார்கள்'' என்கிறார் அவர்.

சிவசங்கரி
சிவசங்கரி

ஆளும் தி.மு.க அரசின் மீதான விமர்சனங்களை, தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் முன்வைத்தோம்,

``கோயம்பேடு பேருந்து நிலைத்தில் தொடங்கி மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் வரைக்கும் பல்வேறு விஷயங்களில் கலைஞர் பெயரை நீக்கினார்கள். அதனால், கலைஞர் பெயர் மக்கள் மனதில் மறைந்துவிட்டதா என்ன?... திட்டத்துக்கு பெயர் வைப்பதாலோ, பெயரை எடுப்பதாலோ ஒரு தலைவரின் பெயர் மறையும் என்றால் அவரின் புகழை அழித்துவிடும் முடியும் என்றால் அந்தத் தலைவன் பொய்யான தலைவனாக இருந்திருக்க வேண்டும். அடையாளங்களால் மட்டுமே ஒரு தலைவரை அடையாளப்படுத்த முடியும் என்றால், அவர் வெறும் பிம்பத் தலைவனாகத்தான் இருந்திருக்கமுடியும். தலைவர்கள் குறியீடுகளால் வாழ்வதில்லை. சாதனைகளால் வாழ்கிறார்கள். பெருந்தலைவர் காமராஜர் பெயர் இவ்வளவு காலம் நீடிக்க அவர் செய்த சாதனைகள்தான் காரணமே தவிர அவர் பெயரை சாலைகளுக்கோ, திட்டங்களுக்கோ வைத்ததால் அல்ல. ஜெயலலிதாவை இதைவிட யாரும் கேவலப்படுத்த முடியாது. அவரின் பெயரை மறைக்கவேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டத்துக்கு கிராமப்புறங்களில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. இலவசம் என அறிவிக்கப்பட்ட பிறகு பெண்களுடைய பேருந்துப் பயணம் 42 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இரு சக்கர வாகனங்கள் கொடுத்தால், நாளுக்கு நாள் உயரும் பெட்ரோல் விலையை அவர்கள் எப்படிச் சமாளிப்பார்கள். இல்லை பெட்ரோல் விலை உயர்வது குறித்து அ.தி.மு.க-வினர் பா.ஜ.க-வை எதிர்த்து போராட்டம் எதுவும் நடத்துவார்களா?...மொத்தமாகவே, 2018-ல் இருந்து முப்பதுக்கும் குறைவான நபர்களுக்குத்தான் இருசக்கர வாகனத்துக்கு மானியம் கொடுத்திருக்கிறார்கள். அந்தத் திட்டம் ஒரு ஹம்பக். ஆனால், நாங்கள் தாலிக்குத் தங்கம் திட்ட நிதியை பெண்களின் கல்விக்குத்தானே செலவு செய்கிறோம். அதில் எந்தத் தவறும் இல்லை. எங்களைப் பற்றிப் பேசுவதற்கு அ.தி.மு.க தலைவர்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism