Published:Updated:

`கட்சியைக் கைப்பற்றுவதற்காக அன்றாடம் நாடகம் நடத்துகிறார்!’ - சசிகலாவைச் சாடும் புதுச்சேரி அதிமுக

சசிகலா
சசிகலா

”கேள்வியும் நானே… பதிலும் நானே… என்ற விதத்தில் தினந்தோறும் தொண்டர்களிடம் பேசுவதாக வீண் விளம்பரம் செய்து கழகத்தில் குழப்பம் ஏற்படுத்துகிறார் சசிகலா” என்று புதுச்சேரி அ.தி.மு.க-வின் கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன் தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம், உப்பளத்திலுள்ள தலைமைக் கழகத்தில் இன்று நடைபெற்றது. கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், சசிகலாவைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில், “நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கப்போவதாக அறிவித்தார் சசிகலா.

புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம்
புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம்

இந்தத் தேர்தலில் குறைவான வாக்கு சதவிகித அளவில் கழகம் ஆட்சியை இழந்திருந்தாலும், அ.தி.மு.க-வின் அசுர வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. அதைக் கருத்தில் கொண்டு மீண்டும் கழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி அ.தி.மு.க-வைக் கைப்பற்றுவதுடன், அதைத் தனது குடும்பச் சொத்தாக மாற்ற வேண்டும் என்ற குறுகிய எண்ணத்தில் இருக்கிறார் சசிகலா. அதனால்தான் அவர் தினந்தோறும் நாடகத்தனமான செயலில் ஈடுபட்டுவருகிறார். அதை புதுச்சேரி அ.தி.மு.க வன்மையாக கண்டிக்கிறது.

அதேபோல கேள்வியும் நானே... பதிலும் நானே! என்ற விதத்தில் தினந்தோறும் தொண்டர்களிடம் பேசுவதாக வீண் விளம்பரம் செய்து கழகத்தில் குழப்பம் ஏற்படுத்த நினைக்கிறார் சசிகலா. அவரின் தீய முயற்சியை முறியடித்து, கழகத்தை இரும்புக் கோட்டையாக மாற்ற அயராது பாடுபடும் கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு புதுச்சேரி மாநிலக் கழகம் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கொந்தளிக்கும் பி.ஜே.பி… போர்க்கொடி தூக்கும் அ.தி.மு.க… புதுச்சேரி இடைத்தேர்தல் லைவ் ரிப்போர்ட்!

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க-வின் கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் தலைமையில் கட்டுப்பாடான இயக்கமாக அ.தி.மு.க செயல்பட்டுவருகிறது. அரசியலிலிருந்து விலகுவதாகக் கூறிய சசிகலா, தேர்தலுக்குப் பின் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார். புதுச்சேரி அ.தி.மு.க அதைக் கண்டிப்பதுடன், அந்தத் தவறான போக்கை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பையும் அளிப்போம். இந்தத் தேர்தலோடு அ.தி.மு.க அழிந்துவிடும் என்று நினைத்தார் சசிகலா. ஆனால் தேர்தலுக்குப் பிறகும் கட்சி வளர்ச்சி பெற்றிருப்பதால் அதைக் கைப்பற்ற நினைக்கிறார்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு