அரசியல்
அலசல்
Published:Updated:

“அ.தி.மு.க-வில், நாட்டாமை செய்ய சீமானை நாங்கள் அழைக்கவில்லை!”

கல்யாணசுந்தரம்
பிரீமியம் ஸ்டோரி
News
கல்யாணசுந்தரம்

- கடுப்பாகும் கல்யாண சுந்தரம்

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்றதையொட்டி ‘வாரிசு அரசியலை தி.மு.க முன்னெடுக்கிறது’ என்று தொடர்ச்சியாக விமர்சித்துவருகிறது அ.தி.மு.க. இது தொடர்பாக அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரத்திடம் சில கேள்விகளை முன்வைத்தேன்...

“அமைச்சரவை மாற்றம் தி.மு.க ஆட்சியில் மட்டுமே நடப்பதுபோல விமர்சனம் செய்வது சரியா?”

“ ‘எளியவர்களும் அதிகாரம் படைத்தவர்களாக மாற வேண்டும், கடைக்கோடியில் இருப்பவர்களுக்கும் ஜனநாயகம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்’ என்ற புரட்சிகரமான சிந்தனையை முன்வைத்து தி.மு.க-வைத் தொடங்கினார் அண்ணா. ஆனால், கரையான் புற்றில் கருநாகம் புகுந்ததுபோல தி.மு.க-வுக்குள் நுழைந்த கருணாநிதி, அந்தக் கட்சியையே அழித்துவிட்டார். ஸ்டாலின், உதயநிதி என இது தொடர்ந்து கொண்டிருக்கிறது. பிறப்பின் அடிப்படையில் ஒருவரைப் பார்க்கக் கூடாது எனச் சொன்ன தி.மு.க-வில், பிறப்பின் அடிப்படையிலேயே ஏன் பொறுப்பு வழங்குகிறார்கள்?”

“அ.தி.மு.க-வில், நாட்டாமை செய்ய சீமானை நாங்கள் அழைக்கவில்லை!”

“செயல்பாட்டைப் பார்க்காமல் பொறுப்பேற்றவுடனேயே விமர்சிப்பதென்பது அரசியல் காழ்ப்புணர்ச்சிதானே?”

“எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினின் செயல்பாட்டின்மீதே எங்களுக்குப் பல விமர்சனங்கள் இருக்கின்றன. ஏன் அவரது தந்தை ஸ்டாலினின் செயல்பாட்டிலும் ஆயிரத்தெட்டு விமர்சனங்கள் இருக்கின்றன. அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார். நிச்சயம் அதையும் கவனித்து விமர்சிப்போம். தந்தைக்குப் பிறகு மகன், தந்தைக்குப் பிறகு மகன் என இவர்கள் செய்திருப்பது ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு முரணானது. அதைத்தான் சுட்டிக்காட்டுகிறோம்.”

“ ‘நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு உதயநிதியின் பிரசாரம் உறுதுணையாக இருந்தது. அதற்கான வெகுமதிதான் இந்த அமைச்சர் பதவி’ என்கிறார்களே?”

“இப்படிச் சொல்வதற்காக தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்கள், மூத்த உறுப்பினர்கள், தொண்டர்கள் எல்லோரும் வெட்கித் தலைகுனிய வேண்டும். உண்மையில், தி.மு.க-வின் வெற்றி பொய்ப் பிரசாரத்தால் கிடைத்தது.”

“அ.தி.மு.க-வில் வாரிசு அரசியலே இல்லையா?”

“அ.தி.மு.க-வில் அம்மா இருக்கும்போது சிலருக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். இது எல்லாக் கட்சிகளிலும் நடப்பது. ஆனால், தி.மு.க-வின் தலைவர் ஸ்டாலின், தன்னுடைய மகனை அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுப்பதைத்தான் வாரிசு அரசியல் என்கிறோம். இப்போது வரை அ.தி.மு.க-வைப் பார்த்து இப்படி ஒருவரைச் சுட்டிக்காட்ட முடியுமா... கடைக்கோடி தொண்டர்களின் மகன் அரசியலுக்கு வருவது வாரிசு அரசியல் அல்ல.”

“ஆனால், இப்படி ஒரு நிரந்தரத் தலைமை இல்லாததால்தான் அ.தி.மு.க -வில் பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன என விமர்சிக்கிறார்களே?”

“நிரந்தரத் தலைமை இல்லாததால் என்று சொல்லும் வாதமே ஜனநாயகத்துக்கு எதிரானது. அ.தி.மு.க-வில் குழப்பம் இருக்கிறது... ஆனாலும் முடிவில் இங்கே ஜனநாயகமே வெற்றிபெறும். சாதாரணமானவரும் உயர் பதவிக்கு வரும் வாய்ப்பு உருவாகும். ஆனால், இப்படி ஒரு குழப்பம் வரும் என்பதற்காகவே ஜனநாயகத்தைக் கொலைசெய்ய அ.தி.மு.க ஒருபோதும் விரும்பாது.”

“ஸ்டாலினின் மகன் என்பதற்காகவே உதயநிதிக்குப் பொறுப்பு கொடுக்கக் கூடாது என்று சொல்வது எப்படிச் சரியாகும்?”

“ஸ்டாலின், கட்சியின் தலைவராக இருக்கும்போது தன்னுடைய மகனைக் கொண்டுவந்திருக்கக் கூடாது என்று சொல்கிறோம். கலைஞரும் இதைச் செய்திருக்கக் கூடாது. இதையெல்லாம் நியாயப்படுத்திப் பேசுவதுதான் கொடூரத்தின் உச்சம்.”

“உதயநிதி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராகியிருக்கிறார். ஆனால், எடப்பாடி துரோகத்தின் மூலமே இந்த இடத்தை அடைந்திருக்கிறார் என விமர்சிக்கிறார்களே?”

“எடப்பாடி தன்னிச்சையாக முடிவுசெய்து தலைவராகவில்லை. பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், தொண்டர்களின் ஆதரவோடு தலைவராகியிருக்கிறார். கட்சியில் சம்பாதித்துவிட்டு வெளியில் சென்று கட்சியையே உடைக்க, சின்னத்தை முடக்க முயல்வதுதான் துரோகம். அப்படி இந்தக் கட்சிக்குத் துரோகம் செய்தவர்களைத் துரத்தி அடித்தார் எடப்பாடி என்று வேண்டுமானால் சொல்லலாம். மற்றபடி பேயாட்டம் செய்யும் அரசை எதிர்த்து நின்று கட்சியைக் காப்பாற்ற நினைப்பது எந்த வகையில் துரோகமாகும்?”

“அ.தி.மு.க-வில், நாட்டாமை செய்ய சீமானை நாங்கள் அழைக்கவில்லை!”

“சசிகலா பொதுச்செயலாளராகவும், எடப்பாடி முதல்வர் வேட்பாளராகவும் இருந்து அ.தி.மு.க-வை வழிநடத்தலாமே என சீமான் கூறியிருக்கிறாரே?”

“அப்படியா சொல்லி யிருக்கிறார். அவர் சொன்னதை கவனிக்கவில்லை. எங்கள் பிரச்னையை நாங்கள் பார்த்துக்கொள்வோம். சீமானை நாட்டாமை செய்ய நாங்கள் அழைக்கவில்லை.”

“ `திராவிடக் கட்சியாக அ.தி.மு.க-வை ஒருபோதும் ஏற்க முடியாது’ என்று கனிமொழி விமர்சித்திருக்கிறாரே?”

“திராவிடக் கட்சி என்பது என்ன என்பதை கனிமொழி தெளிவாகச் சொல்ல வேண்டும். நல்ல நேரத்தில், சுப முகூர்த்தத்தில் உதயநிதி பதவியேற்றிருக்கிறார். இப்படி தி.மு.க-வைப்போல அ.தி.மு.க ஒருபோதும் திராவிட அடிப்படைவாதக் கட்சியாக இருந்ததில்லை.”

“அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் உதயநிதிக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?”

“ஜனநாயக அமைப்புக்கு உதயநிதியின் தாத்தா கட்டிய கல்லறையின்மீது இறுதி மலர் ஒன்றை வைக்கிறார் உதயநிதி. `ஜனநாயகப் படுகொலை’ என்று பேசப்படும்போதெல்லாம் உதயநிதி நினைவில் கொள்ளப்படுவார். நல்லவேளையாக உதயநிதிதான் அந்தக் குடும்பத்தின் கடைசி அமைச்சர்.”