
- சமாளிக்கிறார் கோவை செல்வராஜ்...
அன்வர் ராஜா நீக்கம், புதிய அவைத்தலைவர் நியமனம், செல்லூர் ராஜூ ஆடியோ லீக், விருப்ப மனு தாக்கல் செய்ய வந்தவர்மீது தாக்குதல் என அ.தி.மு.க முகாம் பிஸியோ பிஸி! டிசம்பர் 7-ம் தேதி உட்கட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜை நேரில் சந்தித்துப் பேசினோம்...
“சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த தமிழ்மகன் உசேனுக்கு, அ.தி.மு.க அவைத்தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இது அன்வர் ராஜா நீக்கத்தைச் சமன் செய்யும்விதமாக எடுக்கப்பட்ட முடிவா?
“கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பொது வெளியில் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தான் 50 ஆண்டுக்கால அ.தி.மு.க வரலாறு. இதில் சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது.’’
“எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் விமர்சித்துவிட்டார் என்பதற்காகத்தான் அன்வர் ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டாரா?”
“அ.தி.மு.க-வில் தனிப்பட்ட மனிதருடைய செல்வாக்கு என்று எதுவும் கிடையாது. எல்லா முடிவுகளையுமே கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் சேர்ந்துதான் எடுக்கிறார்கள். எனவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களை மட்டுமல்ல... கட்சியிலுள்ள யாரையும் பொதுவெளியில் அவமரியாதையாகப் பேசக் கூடாது. அப்படிப் பேசினால், அது கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கிற செயல்தான். அதனாலேயே, அன்வர் ராஜாமீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.’’
“ஆனால், அன்வர் ராஜா கட்சிக்கு விரோதமாகப் பேசிவிட்டார் என்பது, செயற்குழுக் கூட்டம் நடப்பதற்கு முந்தைய நாள் இரவுதான் தெரியவந்ததா?’’
“இல்லை... அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்து முடிந்த பிறகு ஆறு நாள்கள் தொடர்ச்சியாக, ஊடகங்களில் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார் அன்வர் ராஜா. கட்சியில் நீண்ட அனுபவம்கொண்டவரே இப்படிக் கட்சிக் கட்டுப்பாட்டை மீறிப் பேசுவதை எந்தக் கட்சிதான் ஏற்றுக்கொள்ளும்? வேறு ஒரு கட்சியில் சேர முடிவெடுத்துவிட்டு, தனது சுய விளம்பரத்துக்காகச் சொந்தக் கட்சியையே அவமதிக்கும் வகையில் பேசிவந்தார் அன்வர் ராஜா. எல்லாவற்றையும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டே கட்சி அவரை நீக்கியிருக்கிறது.’’
“சசிகலாதான் அ.தி.மு.க தலைமைப் பொறுப்புக்கு வர வேண்டும் என்று செல்லூர் ராஜூ பேசியதாக ஆடியோ வெளியாகியிருக்கிறதே... அவர்மீதும் கட்சி நடவடிக்கை எடுக்குமா?’’
“செல்லூர் ராஜூவே, ‘நான் அப்படிப் பேசவில்லை’ என்று விளக்கம் அளித்துவிட்டார். இன்றைய நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு அவர் பேசியது போன்று ஆடியோ தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள். சில தினங்களுக்கு முன்புகூட, ‘உடுமலை ராதாகிருஷ்ணன் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டுவிட்டார்’ என்று ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்துடன் ஒரு கடிதத்தைத் தயார் செய்து பரப்பினார்கள். இவையெல்லாம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை.’’
“சசிகலா கட்சிக்குள் நுழைந்துவிடக் கூடாது என்ற பயத்தால்தான், அவசர அவசரமாக உட்கட்சித் தேர்தலை நடத்துகிறீர்களா?”
“எங்கள் கட்சித் தேர்தலோடு வேறு யாரையும் சம்பந்தப்படுத்தக் கூடாது. அ.தி.மு.க உட்கட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நான்கு மாதங்களுக்கு முன்பே அறிவுறுத்திவிட்டது. இது கொரோனா தளர்வு காலகட்டம் என்பதால், இப்போது தேர்தலை நடத்துகிறோம். 2011-லிருந்து அ.தி.மு.க-வின் உறுப்பினராகக்கூட இல்லாத சசிகலாவைப் பற்றி நாம் பேசவேண்டிய அவசியம் இல்லை.’’
“அப்படியென்றால், கட்சியில் உறுப்பினராகக்கூட இல்லாத ஒருவரைத்தான் 2017-ல் அ.தி.மு.க பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்தீர்களா?’’
“அன்றைய சந்தர்ப்ப சூழலில், கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் கட்சியின் பொதுக்குழு அவரை தற்காலிகப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்தது. ஒரு குழந்தை தவறான வழியில் செல்கிறது என்பது வளர வளரத்தான் தெரியவரும். அப்படித் தெரியவந்த பிறகே ‘சசிகலா அ.தி.மு.க-வுக்குத் தேவையில்லை’ என்று முடிவெடுத்தோம்.’’
“ஒரு ஓட்டில் இரு தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் அ.தி.மு.க-வின் உட்கட்சித் தேர்தல் எந்தவொரு கட்சியிலும் இல்லாத நடைமுறையாக இருக்கிறதே?’’
“ஒரு கட்சியின் அடிப்படைத் தொண்டர்களே தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்ற ஜனநாயகம் இந்தியாவிலேயே அ.தி.மு.க-வில் மட்டும்தான் நடைமுறையில் இருக்கிறது. இங்கே வாரிசு அரசியலெல்லாம் கிடையாது.’’
“பன்னீர் - எடப்பாடி அணிக்கு எதிராக விருப்ப மனு தாக்கல் செய்ய வந்தவரையே அடித்து விரட்டியிருக்கிறார்கள். இந்தச் சூழலில் ‘வாரிசு அரசியல்’ பற்றி அ.தி.மு.க பேசலாமா?’’
“கட்சிக்குச் சம்பந்தமே இல்லாத ஒருவர், கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக, தலைமைக் கழகத்துக்கு வந்து பிரச்னை செய்திருக்கிறார். இதையெல்லாம் கணக்கிலேயே எடுத்துக்கொள்ளக் கூடாது. பன்னீர், எடப்பாடி இருவரும் அ.தி.மு.க என்ற குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள்தானே தவிர, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. இது எப்படி வாரிசு அரசியலாகும்? கடந்த காலத்தில் ஜெயலலிதாவைப் பொதுச்செயலாளராக ஒருமித்த கருத்தோடு தொண்டர்கள் தேர்ந்தெடுத்துவந்தோம். அதேபோல், இப்போது கட்சியில் அனைவரும் ஒருமித்த கருத்தோடு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரைத் தேர்ந்தெடுப்போம்.’’