
- உண்மை பேசும் கோவை செல்வராஜ்
அ.தி.மு.க-வில் இரண்டாம் கட்ட உட்கட்சித் தேர்தல் தொடங்கிவிட்ட நிலையில், தலைமை தொடங்கி மாவட்டங்கள் வரை ‘பங்கைப் பிரி’ பஞ்சாயத்துகள் களைகட்டிவருகின்றன. இந்த நிலையில், அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளரும், கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான கோவை செல்வராஜிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...
``ஏப்ரல் 11-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை அ.தி.மு.க-வில் உட்கட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது... பஞ்சாயத்துகளெல்லாம் முடிவுக்கு வந்துவிட்டனவா?”
``அண்ணன் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஒற்றுமையாகக் கட்சியை வழிநடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், மாவட்டச் செயலாளர்களாக இருக்கும் முன்னாள் அமைச்சர்கள்தான், கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறவர்களைத் தவிர்த்துவிட்டு, தங்களுக்குத் துதிபாடுபவர்களுக்கு கட்சிப் பதவி தந்திருக்கிறார்கள். இப்போதும் அது போன்றவர்களுக்கே பதவிகளைக் கொடுக்க வேண்டும் என்று பிரச்னை செய்கிறார்கள். இந்தச் சூழலை மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது. இப்போது ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறுவதால், கட்சிக்கு உண்மையாக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். கட்சியில் இனி எந்தச் சலசலப்பும் எழாது.’’
``முன்னாள் அமைச்சர்கள் என்கிறீர்கள்... அவர்களின் பெயர்களைச் சொல்ல முடியுமா?’’
``இல்லை... அப்படிக் குறிப்பிட்டு பெயர்களைச் சொல்ல முடியாது. ஆனால், பெரும்பாலானவர்கள் அப்படித்தான் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு அது தெரியும். அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.’’

``கட்சிக்காக உழைத்தவர்களுக்கு வாய்ப்பில்லை... அதனால்தான் சலசலப்பு என்கிறீர்கள். ஆனால், கட்சியில் எடப்பாடியின் ஆதிக்கம் ஓங்கியிருப்பதாலேயே பிரச்னைகள் எழுவதாகச் சொல்லப்படுகிறதே?’’
``எடப்பாடி பழனிசாமியின் ஆதிக்கம் என்றெல்லாம் சொல்ல முடியாது. இருவருமே சம அந்தஸ்தில்தான் இருக்கிறார்கள். ஆளுங்கட்சியான தி.மு.க-வே உட்கட்சித் தேர்தலை நடத்த முடியாமல் திணறிவருகிறது. மற்ற கட்சிகளில்கூட நியமனம்தான் செய்கிறார்கள். ஆனால், எங்கள் கட்சியில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கிறது. கடந்தகாலத்தில் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்குப் பல முன்னாள் அமைச்சர்கள் பதவி கொடுத்துவிட்டார்கள். அதுமட்டுமே பிரச்னைகளுக்குக் காரணம்.”
``ஆனால், பன்னீர் கையெழுத்திடாமல் முன்னாள் அமைச்சர்கள் எப்படி தன்னிச்சையாகப் பதவிகளைக் கொடுத்திருக்க முடியும்?”
``முன்னாள் அமைச்சர்கள் நிர்வாகிகளைப் பரிந்துரை செய்தபோது, கட்சித் தலைமை சில மாவட்டங்களில், ‘அவரை ஏன் தவிர்த்தீர்கள், இவரை ஏன் தவிர்த்தீர்கள்?’ என்று கேள்வி கேட்டிருக்கிறதுதான்... ஆனாலும், அனைத்து மாவட்டங்களிலும், அனைவரையும் தலைமைக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதனால் தவறுகள் நிகழ்ந்துவிட்டன.”
``தற்போது நடக்கும் உட்கட்சித் தேர்தலுக்கு பன்னீர் முட்டுக்கட்டை போட்டதாகச் சொல்லப்பட்டதே..?”
``கட்சிக்குள் சிலர் இப்படியான கருத்துகளைப் பரப்பிவருவது கண்டிக்கத்தக்கது. கடந்த ஐந்தாண்டுகளில், எந்தச் சூழலிலும் அண்ணன் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இணைந்துதான் அனைத்து முடிவுகளையும் எடுத்துவருகிறார்கள். சிலர் தங்களது சுயநலத்துக்காக அண்ணன் பன்னீர்செல்வத்தைப் பற்றி தவறான கருத்துகளைப் பரப்பிவருகிறார்கள்.’’
``இல்லையே... முதல்வர் வேட்பாளர் தொடங்கி தற்போது வரை பன்னீர் - எடப்பாடி இடையே பிரச்னை நிலவுவதைப் பலமுறை கட்சிக் கூட்டங்களிலேயே கண்கூடாகப் பார்த்தோமே?”
``மூன்று முறை முதலமைச்சராகப் பணியாற்றியவர் அண்ணன் பன்னீர்செல்வம். அண்ணனுக்குப் பிறகு சந்தர்ப்ப சூழ்நிலையால் எடப்பாடி பழனிசாமி அவர்களும் நான்கு ஆண்டுகள் முதல்வராக இருந்தார். தேர்தல் நேரத்தில் அண்ணன் ஓ.பி.எஸ்-ஸை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பது எங்களைப் போன்றவர்களின் விருப்பமாக இருந்தது. ஆனால், பெருந்தன்மையாக அண்ணன் பன்னீர்செல்வம்தான், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முன்மொழிந்தார். கட்சி நலனுக்காக அண்ணன் அனைத்து விஷயங்களிலும் விட்டுக்கொடுக்கிறாரே தவிர வேறொன்றும் இல்லை. அடிமட்ட நிர்வாகிகள்தான் அடித்துக்கொண்டார்கள்... இருவருக்குள்ளும் பிரச்னை இல்லை!’’
``பன்னீர் விட்டுக்கொடுத்துவிட்டார் என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள் ஆனால், எடப்பாடி தரப்பு கட்சியில் ஆதிக்கம் செலுத்தி, அனைத்தையும் சாதித்துவிட்டது என்று தெரிகிறதே?”
``தனிப்பட்ட முறையில் அண்ணன் பன்னீர்செல்வம் யாருக்கும் கட்டுப்பட மாட்டார். ஆனால், கட்சியின் வளர்ச்சி பாதிக்கக் கூடாது என்பதற்காக எத்தனையோ அவமானங்களைத் தாங்கிக்கொண்டு தலைவராகச் செயல்பட்டுவருகிறார். அவ்வளவு நல்ல உள்ளம் படைத்த அண்ணனைக் கட்சியில் யாரும் எதுவும் செய்துவிட முடியாது. ஒட்டுமொத்தத் தொண்டர்களின் ஆதரவும் அவருக்கு இருக்கிறது. அவர் தனக்கென்று ஒரு கோஷ்டி இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் தன் ஆதரவாளர்கள் என்று யாரையும் வைத்துக்கொள்வதில்லை.’’
``அவர் வைத்துக்கொள்ளவில்லையா இல்லை அவரை நம்பி யாரும் வரவில்லையா?’’
``அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. அவர் கோஷ்டி சேர்க்க வேண்டாம் என்பதற்காகத்தான், தனி அணி சேர்க்கவில்லை. அம்மாவின் மறைவுக்குப் பிறகு கட்சியைக் காப்பாற்றுவதற்காக, தனி அணியாகச் செயல்பட்டார். ஆனால் அணிகள் இணைந்து, அவர் கட்சியின் தலைவரான பிறகு தனி அணி எதற்கு?’’
`` `அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்குப் பிறகும் சசிகலா அ.தி.மு.க-வில் இணைய வாய்ப்பு இருக்கிறதா?’’
``தலைமைதான் அதை முடிவுசெய்யும். ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இன்னார் வேண்டும் என்றோ, வேண்டாம் என்றோ தேவையில்லாமல் பேசுவதில்லை.’’
``அவர்கள் இருவரும் பேசுவதில்லைதான்... ஆனால், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் போன்றவர்கள் சசிகலாவைக் கடுமையாக விமர்சிக்கிறார்களே?’’
``கட்சித் தலைமையிடம் அனுமதி பெற்று பேசப்படுபவை மட்டுமே கட்சியின் கருத்துகள். முன்னாள் அமைச்சர்கள் தங்கள் இஷ்டத்துக்குப் பேசுவதெல்லாம் அவர்களின் சொந்தக் கருத்து மட்டுமே. அதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.’’