Published:Updated:

ஜெயக்குமாரைப் பற்றி பேசத் தொடங்கினால் நாறிப்போகும்!

மருது அழகுராஜ்
பிரீமியம் ஸ்டோரி
மருது அழகுராஜ்

- நான் கூலிக்கு மாரடிப்பேன். ஆனால், சந்தில் சிந்து பாடமாட்டேன்! - வேலுமணிக்கு முதல்வராகும் கனவு இருக்கிறது! - ஓ.பி.எஸ், இ.பி.எஸ் விலகிக்கொண்டு இளம் தலைவருக்கு வாய்ப்பளிக்கலாம்! - விளாசும் மருது அழகுராஜ்

ஜெயக்குமாரைப் பற்றி பேசத் தொடங்கினால் நாறிப்போகும்!

- நான் கூலிக்கு மாரடிப்பேன். ஆனால், சந்தில் சிந்து பாடமாட்டேன்! - வேலுமணிக்கு முதல்வராகும் கனவு இருக்கிறது! - ஓ.பி.எஸ், இ.பி.எஸ் விலகிக்கொண்டு இளம் தலைவருக்கு வாய்ப்பளிக்கலாம்! - விளாசும் மருது அழகுராஜ்

Published:Updated:
மருது அழகுராஜ்
பிரீமியம் ஸ்டோரி
மருது அழகுராஜ்

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சத்தை எட்டியிருக்கிறது. “இரட்டைத் தலைமையே நீடிக்க வேண்டும்...”, “கொடநாடு விவகாரத்தை விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும் பேசியிருக்கிறார் அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ். இதற்கு பதிலடியாக ‘`மருது அழகுராஜ் மோசடியில் ஈடுபட்டார், கூலிக்கு மாரடித்தவர்’’ எனக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். மருது அழகுராஜைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தேன்…

“ஒற்றைத் தலைமைப் பிரச்னை தொடங்கி ஒரு மாதமாகிறது. திடீரென்று நீங்கள் பேசத் தொடங்கியதன் பின்னணி என்ன?”

“பின்னணியென்று எதுவுமில்லை. என்னுடைய கருத்தைப் பதிவுசெய்திருக்கிறேன், அவ்வளவுதான். ஒரு தேர்தலைச் சந்தித்து, ஒரே விண்ணப்பத்தில், ஒற்றை வாக்கில் கட்சியின் தலைவர்கள் என ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேர்தல் ஆணையத்திடம் சாட்சிகளோடு அங்கீகாரமும் வாங்கிவிட்டார்கள். இருவரும் சேர்ந்து பொதுக்குழுவுக்கு அழைப்பும் விடுத்தார்கள். ‘ஒற்றைத் தலைமை என்பது கற்பனை’ என ஜூன் 8-ம் தேதிதான் எடப்பாடி பேசினார். ஆனால், ஜூன் 14-ம் தேதி ‘பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பார்களை அழைக்கலாமா, வேண்டாமா’ என்று ஒரு கூட்டம் நடைபெற்றது. அங்கு, நான்கு அறைக்குள் பேசியதை மைக் ஜெயக்குமார் வெளியில் வந்து சொல்லிவிட்டார். ஜெயக்குமார் என்றைக்கு மைக்கைப் பிடித்தாரோ அன்றைக்கு அ.தி.மு.க-வின் அழிவு காலம் தொடங்கியது. அழிவுப் பாதையிலிருந்து கட்சியை மீட்க வேண்டும் என நினைத்துத்தான் பேசினேன்.”

ஜெயக்குமாரைப் பற்றி பேசத் தொடங்கினால் நாறிப்போகும்!

“திடீரென ஒற்றைத் தலைமை கோரிக்கை ஏன், எப்படி எழுந்தது?”

“திடீரென இந்தப் பிரச்னை எழுந்திருக்க வாய்ப்பே இல்லை. சட்டமன்றத் தேர்தலிலேயே இதற்கான அச்சாரம் போட்டு, கடந்த ஆறு மாதங்களாகத் தீவிரமாகத் திட்டமிட்டிருக்கிறார்கள். வன்னியர்களுக்கு எதிராக ஓ.பி.எஸ் இருக்கிறார் என நிறுத்தியது தொடங்கி, தற்போதைய பொதுக்குழு வரை திட்டமிட்டு திரைக்கதை எழுதி அவமானப்படுத்தியிருக்கிறார்கள். இதையெல்லாம் ஓ.பி.எஸ் கவனிக்கத் தவறிவிட்டார். அரசியலில் பெருந்தன்மை கை கொடுக்காது என்பதை இப்போது புரிந்துகொண்டிருப்பார். ஒத்திகை பார்த்துக்கொண்டே இருந்தவர்கள், அரங்கேற்றுவதற்குச் சரியான சந்தர்ப்பத்தைப் பார்த்து இந்தச் சதியை நிகழ்த்திவிட்டார்கள்.”

“சதியை நிகழ்த்தியவர்கள் யார் என்கிறீர்கள்?”

“முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் போன்றவர்களைத்தான் சொல்கிறேன். அவர்களின் சுயநலனுக்காகக் கட்சியை முட்டுச்சந்தில் கொண்டுபோய் நிறுத்தி விட்டார்கள். பாலில் ஒரு துளி விஷம் கலந்தால் என்ன ஆகுமோ அப்படி எடப்பாடியை ஆக்கிவிட்டார்கள்.”

“இந்தச் சதியால் யாருக்கு லாபம் என்கிறீர்கள்?”

“வேலுமணியும் தங்கமணியும் திட்டங்களை வகுத்துக்கொடுத்து, அதை சி.வி.சண்முகத்தையும் கே.பி.முனுசாமியையும் அரங்கேற்றச் சொல்லிவிட்டு அமைதியாக அமர்ந்துகொண்டிருக்கலாம். ஓ.பி.எஸ்-ஸிடமிருந்து எடப்பாடியைப் பிரித்து, அவரைத் தலைவராக்கும் உத்தியைச் செயல்படுத்திவிட்டார்கள். இதை முன்னோட்டமாக வைத்து, பொதுச்செயலாளராகி, முதல்வராகும் திட்டத்தைச் செயல்படுத்தும் எண்ணத்தில் வேலுமணி இருக்கலாம். ஏனெனில், அந்தக் கனவு அவர்களுக்குப் பெரிய அளவில் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும்.”

“கட்சி சார்ந்து ஆக்கபூர்வமான பல முடிவுகளைத் தீர்க்கமாக இரட்டைத் தலைமையால் எடுக்க முடியவில்லை என்பதால்தான் இந்த முடிவு என்கிறார்களே..?”

“ஒற்றைத் தலைமைதான் வெல்லும் என்றே வைத்துக்கொள்வோம். அதை முன்னெடுப்பதற்கான தருணம் இது அல்ல. அதிகாரத்தில் இருக்கும்போதே அதைச் செய்திருக்க வேண்டும் அல்லது அடுத்து அதிகாரத்துக்கு வரும் வரை இந்தப் பேச்சை எடுக்காமல் இருந்திருக்க வேண்டும். எதிர்க்கட்சி என்ற உங்களின் இடத்தைப் பிடிக்க ஒருவன் தவியாய் தவித்துக்கொண்டிருக்கிறான். இந்த நேரத்தில் சொந்த வீட்டுக்குள் சண்டை போடுவது சரியா... தலைமை ஏற்பவர்களுக்குக் கூட்டணி அமைப்பது முதல் திட்டங்களைச் செயல்படுத்துவது வரை மதிநுட்பம் வேண்டும். ஆனால், எடப்பாடி அப்படிச் செயல்பட்டதாகத் தெரியவில்லை. தனது அதிகாரத்தை வசப்படுத்தவே இத்தனை நாடகங்கள். இதை நானே தாமதமாகத்தான் புரிந்துகொண்டேன்.”

“அப்படியானால், ஒற்றைத் தலைமை எப்படித் தேர்வு செய்யப்பட வேண்டும் என நினைக்கிறீர்கள்?”

“தொண்டர்கள்தான் தேர்வுசெய்ய வேண்டும். தொண்டர்களிடம் இருவருக்கும் சமமாக ஆதரவு இருக்கிறது. முறையாகப் போட்டியிட்டு ஜனநாயக அடிப்படையில் தலைமைக்கு வாருங்கள். என்னைக் கேட்டால், அண்ணன்கள் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவரும் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகி இளம் தலைவர் ஒருவருக்கு வாய்ப்பளிக்கலாம். அப்போதுதான் கட்சி வளரும்.”

“நீங்கள் மோசடி செய்துவிட்டதாக ஜெயக்குமார் புகார் சொல்கிறாரே?”

“என்ன மோசடி எனச் சொல்ல வேண்டுமல்லவா... அதுமட்டுமல்ல, `கூலிக்கு மாரடிப்பவன்’ என்கிறார் ஜெயக்குமார். ஆமாம்... நான் கூலிக்கு மாரடிப்பேன். ஆனால், சந்தில் சிந்து பாட மாட்டேன். கட்சிக்கு அவமானத்தை ஏற்படுத்த மாட்டேன். பதிலற்றவர்களின் கடைசிப் புகலிடம் அவதூறுதான். உங்கள் அரசியல் அரிப்புக்காக, அதிகார வெறிக்காக என்னக் காயப்படுத்துவீர்கள் என்றால், அதற்கான விலையை நீங்கள் கொடுப்பீர்கள். ஜெயக்குமாரைப் பற்றி நான் பேசத் தொடங்கினால் நாறிப்போகும். இதை எச்சரிக்கையாகவே சொல்கிறேன்.”

“கொடநாடு, கூவத்தூர் விவகாரங்களை வைத்து நீங்கள் அவதூறு பரப்ப முயல்கிறீர்கள் எனலாமா?”

“கூவத்தூரில் நடந்ததை, கொடநாடு குறித்த சந்தேகத்தை நான்தான் முதலில் பேசுகிறேனா... அன்றைக்குக் கூவத்தூரில் என்ன நடந்தது, எவ்வளவு கொடுத்தார்கள், ‘ஒரு பகுதி தங்கமாகக் கொடுத்தார்கள்’ என்று சொன்னவர்களெல்லாம் இப்போதும் இருக்கிறார்கள். வெளியில் மற்றவர்கள் சொன்னதை நான் மேற்கோளாகக் காட்டினேன். என்னுடைய இரவல் வரிகளால் கைதட்டல் வாங்கியவர்கள், இன்று என்னைப் பற்றிக் குறை கூறுகிறார்கள்.”

ஜெயக்குமாரைப் பற்றி பேசத் தொடங்கினால் நாறிப்போகும்!

“யார் உங்கள் வரிகளை இரவல் பெற்றது... என்ன எழுதிக்கொடுத்தீர்கள்?”

“எடப்பாடி தொடங்கி அ.தி.மு.க-வின் அமைச்சரவையிலிருந்த பெரும்பாலானவர்கள் சட்டப்பேரவையில், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசவேண்டியவற்றை நான் எழுதிக்கொடுத்திருக்கிறேன். ஜெயக்குமார் சபாநாயகராகத் தேர்வானபோது, நான் எழுதிக்கொடுத்ததைத்தான் ஏற்புரையாகப் படித்தார். எடப்பாடியார் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் ‘புனித ஜார்ஜ் கோட்டையில் புதிய வரலாறு படைப்போம்’ என எழுதிக்கொடுத்தது நான்தான். அவ்வளவு ஏன்... அமைச்சராக எடப்பாடி தேர்வாகி, முதல் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது பேச வேண்டியதை நான்தான் எழுதிக்கொடுத்தேன். ஆனால், கம்ப ராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று நான் எழுதிக் கொடுக்கவில்லை. (சிரிக்கிறார்.)”

“மூன்று முறை முதல்வராகவும், பல முக்கியப் பொறுப்புகளிலும் இருந்த பன்னீரால் தனக்கான ஆதரவாளர்களை உருவாக்க முடியவில்லை என்பது தோல்விதானே?”

“ஓ.பி.எஸ்-ஸுக்குப் பதவி கொடுக்கப்பட்ட போது, அம்மா அருகிலிருந்தார். பத்திரமாகத் திருப்பிக்கொடுக்க வேண்டுமென்ற எச்சரிக்கை உணர்வு அவருக்கு இருந்தது. ஆனால், எடப்பாடிக்குப் பதவி கொடுத்தவர் ஜெயிலுக்குப் போய்விட்டார். எனவே, நினைத்ததையெல்லாம் செய்துகொண்டார். அம்மா இருந்தபோது பதவியை இ.பி.எஸ்-ஸுக்குக் கொடுத்திருந்தால், திருப்பிக் கொடுத்திருப்பாரா என்பது தெரியவில்லை.”

“உங்களின் ஆதரவு ஓ.பி.எஸ்-ஸுக்கு என்று எடுத்துக்கொள்ளலாமா?”

“அதிகார தொனியில் சர்வாதிகாரப் போக்குடன் அண்ணன் எடப்பாடியார் நடந்துகொள்கிறார். ஓ.பி.எஸ் ஜனநாயகத்தை நிலைநிறுத்தப் போராடுகிறார். ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை கொண்டு அதன்படி செல்பவருக்காகப் பேசுகிறேன்.”

“ஒருவேளை ஜூலை 11-ல் இருவரும் இணைந்து பொதுக்குழுவில் பங்கேற்றால், அவர்களுக்கு நீங்கள் என்ன எழுதிக்கொடுப்பீர்கள்?”

“ ‘நதி காக்கும் இரு கரைகளாக நாங்கள் மீண்டும் இணைந்துவிட்டோம். இந்த இரண்டு கரைகளையும் உடைப்பதற்குப் பல சூழ்ச்சிகள் செய்த கோடரிகளும் மண்வெட்டிகளும் தூக்கி வீசப்படும். இந்த இயக்கத்தை இனி இணைந்து வழிநடத்துவோம். இரு தலைகளும் வந்துவிட்டன, இரு இலையும் இருக்கிறது. இனி வெற்றிதான்’ என எழுதிக்கொடுப்பேன்!”