Published:Updated:

`ஜெயலலிதா மரணம் குறித்த உண்மைகள் நிச்சயம் வெளிவரும்!’ - வைகைச் செல்வன்

வைகைச் செல்வன்
வைகைச் செல்வன்

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்த உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்காக அமைக்கப்பட்ட ஆணையத்தின் விசாரணை நீண்டுகொண்டே செல்வது, மக்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்புகிறது. இந்தநிலையில், ``ஆணையத்தின் தீர்ப்பு நிச்சயம் வெளிவரும்’’ என்று உறுதி கொடுக்கிறார் வைகைச் செல்வன்.

2021 சட்டசபைத் தேர்தல் நெருங்க, நெருங்க தமிழக அரசியல் களம் தகிக்க ஆரம்பித்திருக்கிறது. தி.மு.க - அ.தி.மு.க இடையிலான அரசியல் மோதல்கள் தவிர்த்து, தமிழக பா.ஜ.க-வும் 'டஃப் ஃபைட்' கொடுத்துவருகிறது. இந்தச் சூழலில், அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வனிடம் பேசினேன்...

``எம்.ஜி.ஆர் மறைந்து 30 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும்கூட, தமிழக அரசியலில் அவரது பெயருக்கென்று தனிப்பட்ட வரவேற்பு நீடிக்கிறதே... எப்படி?''

``எம்.ஜி.ஆர் என்ற தனித்துவமிக்க தலைவரின் அடையாளத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க. அதனால், அவரது பெருமைகளை இன்றளவிலும் இயக்கம் மக்களிடையே கொண்டு சென்றுகொண்டிருக்கிறது. அவரது பெயர் வரலாற்றில் நீடித்து நிலைத்து நிற்பதற்குக் காரணம் அவருடைய மனிதாபிமானமும், அவர் உருவாக்கித் தந்திருக்கிற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும்தான்.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

அண்ணாவால் ஆரம்பிக்கப்பட்ட தி.மு.க-வில் கருணாநிதியின் வரவுக்குப் பிறகு, அண்ணாவின் பெயர் மறக்கடிக்கப்பட்டுவிட்டது. ஆனால், பேரறிஞர் அண்ணாவின் பெயரிலேயே கட்சியையும், கொடியில் அண்ணாவின் உருவத்தையும் பொறித்ததோடு தனது ஒவ்வொரு பேச்சின் இறுதியிலும் 'அண்ணா நாமம் வாழ்க!' என்று கூறி நன்றி தெரிவித்துவந்தவர் எம்.ஜி.ஆர், அவருடைய இந்த நன்றி மறவா பண்பும்கூட மக்களிடையே அவர் பெயர் நிலைத்திருப்பதற்கான இன்னொரு காரணம் என்றும் சொல்லலாம்!''

`` `பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ல் வேல் யாத்திரையை நிறைவுசெய்யத் திட்டமிட்டிருப்பதே மதக் கலவரத்தை உண்டுபண்ணுகிற பின்னணிதான்' என்று வி.சி.க புகார் கொடுத்திருக்கிறதே..?''

``சாதி-மத மோதல்கள் துளிக்கூட இல்லாத அமைதிப் பூங்கா தமிழ்நாடு. ஏனெனில், அப்படியான மோதல்கள் உருவாவதற்கு ஒருபோதும் இடம் கொடுக்காது அ.தி.மு.க அரசு.

வேல் யாத்திரை
வேல் யாத்திரை

இந்தநிலையில், `நவம்பர் 6-ல் தொடங்கி டிசம்பர் 6-ல் யாத்திரையை முடிப்பதாகவும், நல்ல நோக்கத்துக்காகத்தான் வேல் யாத்திரையை நடத்துகிறோம்' என்றும் பா.ஜ.க தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. பாபர் மசூதி இடிப்பு பிரச்னையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு இரு தரப்பிலுமே அமைதி நிலவி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.''

``வேல் யாத்திரை விஷயத்தில் தமிழக அரசின் அமைதி, 'ஆன்மிக அரசியலில், பா.ஜ.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது' என்ற குற்றச்சாட்டை நிரூபிப்பதாக இருக்கிறதே..?''

''தந்தை பெரியார், 'கடவுள் இல்லவே இல்லை' என்றார். ஆனால், தேர்தல் அரசியலுக்கு வந்த பேரறிஞர் அண்ணா, 'ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்ற திருமூலர் வாக்கை எடுத்துக்கொண்டார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., தாய் மூகாம்பிகை கோயிலுக்கு சென்று வந்து, தன் பக்தியை வெளிப்படுத்தினார். புரட்சித் தலைவி ஜெயலலிதா, வெளிப்படையான இறை நம்பிக்கையாளர்.

அண்ணா - பெரியார்
அண்ணா - பெரியார்

அ.தி.மு.க-வைப் பொறுத்தவரையில், இறை நம்பிக்கை கொண்டவர்களாகவோ அல்லது இறை நம்பிக்கை அற்றவர்களாகவோ தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இருக்கலாம். ஆனால், மூட நம்பிக்கைகளுக்கு நாங்கள் எப்போதுமே எதிர்ப்பாளர்கள்தான்.''

ராமேஸ்வரம்: கோயில் நகைகள் எடைக் குறைவு! - அபராதம் விதிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி

``புதிய வேளாண் சட்டங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளைக் காக்க கேரளா, பஞ்சாப் மாநிலங்கள் புதிய சட்டங்களை இயற்றியிருக்கின்றன. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 7.5% உள் இட ஒதுக்கீட்டு சட்டம் இயற்றும் தமிழக அரசு, விவசாயிகளைப் பாதுகாக்க சட்டம் இயற்றாதது ஏன்?''

``புதிய வேளாண் சட்டங்களைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் இடைத்தரகர்கள் என்று யாரும் இல்லை. விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்துகொள்ள முடியும். ஒரு மாநிலம்விட்டு இன்னொரு மாநிலத்துக்குச் செல்லவும் வரிகட்டத் தேவையில்லை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இப்படி பல்வேறு சலுகைகள் புதிய வேளாண் சட்டத்திலேயே இருக்கின்றன. அதனாலேயே, அந்தச் சட்டங்களை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். நாடாளுமன்றத்திலும் ஆதரவு தெரிவித்தோம். மாறாக, நாளடைவில் இந்தப் புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு ஏதேனும் பாதிப்புகள் நேருவதாக அறிந்தால், நிச்சயம் அதுகுறித்து அப்போது நாங்கள் பரிசீலனை செய்வோம்.''

`நவம்பர் 16 பள்ளி, கல்லூரிகள் திறப்பு உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும்!’ - மு.க.ஸ்டாலின்

''ஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணைக்காக ஆணையம் அமைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆணையத்தின் அறிக்கை வெளிவருமா என்ற சந்தேகம் வர ஆரம்பித்துவிட்டதே?''

அப்போலோ மருத்துவமனை
அப்போலோ மருத்துவமனை

''விசாரணை ஆணையத்தின் நீதிபதியான ஆறுமுகசாமி, முழுமையான அறிக்கையை வெளியிடுவதற்கு மூன்று மாத கால அவகாசம் கேட்டிருக்கிறார். தமிழக அரசும் அதற்கான அனுமதியை வழங்கியிருக்கிறது. எனவே, விசாரணை ஆணையத்தின் தீர்ப்பு நிச்சயம் முழுமையாக வெளிவரும். அதேசமயம், அப்போலோ மருத்துவமனை உள்ளிட்ட சில தரப்புகளின் மனுக்கள் உச்ச நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் இருக்கின்றன.''

சுவாரஸ்யமான இந்தப் பேட்டியின் தொடர்ச்சியை இன்று வெளியாகியிருக்கும் ஜூனியர் விகடன் இதழில் படிக்கலாம். இணையதளம் வழியே வாசிக்க லிங்க்கை க்ளிக் செய்யவும்...

கறுப்பு எம்.ஜி.ஆர்., வெள்ளை எம்.ஜி.ஆர். என்று யாரும் கிடையாது!
அடுத்த கட்டுரைக்கு