Published:Updated:

அன்று சென்னா ரெட்டி... இன்று ஆர்.என்.ரவி... ஆளுநர்-தமிழக அரசு மோதலில் அ.தி.மு.க நிலைப்பாடு சரியா?

சென்னா ரெட்டி, ஜெயலலிதா
பிரீமியம் ஸ்டோரி
சென்னா ரெட்டி, ஜெயலலிதா

தற்போதைய தமிழக அரசு - ஆளுநர் மோதலைப் போன்றதல்ல ஜெயலலிதா - சென்னா ரெட்டி மோதல். அது முற்றிலும் தனிப்பட்ட மோதல்.

அன்று சென்னா ரெட்டி... இன்று ஆர்.என்.ரவி... ஆளுநர்-தமிழக அரசு மோதலில் அ.தி.மு.க நிலைப்பாடு சரியா?

தற்போதைய தமிழக அரசு - ஆளுநர் மோதலைப் போன்றதல்ல ஜெயலலிதா - சென்னா ரெட்டி மோதல். அது முற்றிலும் தனிப்பட்ட மோதல்.

Published:Updated:
சென்னா ரெட்டி, ஜெயலலிதா
பிரீமியம் ஸ்டோரி
சென்னா ரெட்டி, ஜெயலலிதா

ஆளுநர் - தமிழக அரசு மோதல் என்பது புதிதல்ல... அண்ணா காலத்தில் தொடங்கியது, இப்போதும் தொடர்கிறது. 1991-1996 காலகட்டத்தில் அ.தி.மு.க அரசுக்குக் குடைச்சல் கொடுப்பதற்காகவே சென்னா ரெட்டியை ஆளுநராக நியமித்தது அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு. அதேபாணியில்தான், தற்போது ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டிருக்கிறார். அப்போது, முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஆளுநர் சென்னா ரெட்டிக்கு எதிராக நிறைவேற்றிய சட்டத்தைப்போலவே, தற்போது தி.மு.க அரசும் ஆளுநர் ரவிக்கு எதிராகச் சட்டத் திருத்தம் செய்திருக்கிறது. அன்றைய தினம் ஜெயலலிதா நிறைவேற்றிய சட்டத்துக்கு தி.மு.க ஆதரவு அளித்தது. ஆனால், இன்று அ.தி.மு.க ஆதரவு கொடுக்காமல் ஆளுநர் பக்கம் நிற்கிறது. இதையடுத்து “வரலாற்றை வசதியாக மறந்துவிட்டதா அ.தி.மு.க?” என்று கேள்வி எழுப்புகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

1993-ல் ஆளுநர் சென்னா ரெட்டியால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் செனட் உறுப்பினராகவும், மதுரை காமராஜர் பல்கலைக்கழத்தில் சிண்டிகேட் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டிருந்த மூத்த பத்திரிகையாளர் ‘தராசு’ ஷ்யாமிடம் இது பற்றிப் பேசினோம்... “1992-ல் மதுரையில் ஒரு மாநாட்டில் பேசிய ஜெயலலிதா, ‘ராஜிவ் காந்தி ரத்தத்தால் பெற்ற வெற்றியல்ல இது’ என்று முழங்கினார். அடுத்து, சென்னை சேத்துப்பட்டிலுள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பின்போது, அப்போதைய ஆளுநர் பீஷ்ம நாராயண சிங் நேரில் சென்று ஆய்வுசெய்ததை ஜெயலலிதா ரசிக்கவில்லை. அந்த மோதல்களால்தான் நரசிம்ம ராவ் அரசு, ஜெயலலிதாவுக்கு செக் வைக்கும் வகையில் 1993, மே 31 அன்று சென்னா ரெட்டியை ஆளுநராக நியமித்தது.

ஆர்.என்.ரவி, ஸ்டாலின்
ஆர்.என்.ரவி, ஸ்டாலின்

மத்திய அரசு மற்றும் ஆளுநரின் தொடர் அழுத்தங்களால் டென்ஷனான ஜெயலலிதா, 1994 ஜனவரியில் பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதல்வரே அமரும் வகையில் சட்டத் திருத்தத்தை கொண்டுவந்தார். இதையடுத்து, காங்கிரஸ் பிரமுகர் ஒருவரை வைத்து ‘சட்டத் திருத்தத்துக்கு ஆளுநர் கையெழுத்து போடக் கூடாது’ என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவைத்தது மத்திய அரசுத் தரப்பு. ஆனால், உயர் நீதிமன்றம் இதில் தலையிட மறுத்துவிட்டதால், சென்னா ரெட்டியே வெளிப்படையாகப் பேட்டி கொடுத்தார். ‘இந்தச் சட்டத் திருத்தத்தால் பட்டியல் சமூக மாணவர்களுக்கு யு.ஜி.சி மானியம் கிடைக்காது. எனவே, இதில் கையெழுத்திட மாட்டேன். ஆந்திராவில் முதல்வராக இருந்த என்.டி.ஆர்., இதே போன்ற சட்டத் திருத்தத்தைச் செய்தபோதும் அதை, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நான் எதிர்த்தேன். முதல்வராக நான் அமர்ந்ததும், அந்தச் சட்டத்தை ரத்து செய்தேன்’ என்றார் சென்னா ரெட்டி. கடைசி வரை அவர் கையெழுத்திடவே இல்லை.

இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல... 1995, ஏப்ரல் 1-ம் தேதி ஜெயலலிதாவுக்கு எதிராக, சொத்துக்குவிப்பு வழக்கு தொடர சுப்பிரமணியன் சுவாமிக்கு அனுமதி கொடுத்தார் சென்னா ரெட்டி. கோபமடைந்த ஜெயலலிதா ஏப்ரல் 26-ம் தேதி, ‘ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும்’ என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். ஆளுநருக்கு எதிராகக் கறுப்புக்கொடி போராட்டங்கள் நடைபெற்றன. இவையெல்லாம் வரலாறு... அன்று ஜெயலலிதா கொண்டுவந்த சட்டத் திருத்தத்தைவிட தற்போது ஸ்டாலின் கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தம் புத்திசாலித்தனமானது. பல்கலைக்கழகங்களில் ஆளுநரே வேந்தராக இருப்பார்; துணைவேந்தர்களை மட்டும் அரசே நியமிக்கும் என்பதை யு.ஜி.சி எதிர்ப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஆனாலும், ஆளுநர் ரவி இதில் கையெழுத்திட மாட்டார் என்றே தோன்றுகிறது” என்றார் விரிவாக.

இதே விவகாரத்தை வேறொரு கோணத்தில் சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் துரை கருணா... “தற்போதைய தமிழக அரசு - ஆளுநர் மோதலைப் போன்றதல்ல ஜெயலலிதா - சென்னா ரெட்டி மோதல். அது முற்றிலும் தனிப்பட்ட மோதல். சென்னா ரெட்டி பற்றி தனிப்பட்ட முறையில் ஜெயலலிதா குற்றம்சாட்டினார். அதன் தொடர்ச்சியாகவே, ‘பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதல்வரே இருப்பார்’ என்ற சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இப்போது நடப்பதும் வழக்கமான தி.மு.க - அ.தி.மு.க மோதல்தான். ஆளுநர் வேண்டாம் என்பதுதான் அ.தி.மு.க-வின் நிலைப்பாடு. ஆனால், ஒரே நேரத்தில் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து எதிர்க்கட்சியால் செயல்பட முடியாது. அதனால், சூழலுக்கு ஏற்ப அ.தி.மு.க தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறது” என்றார்.

அன்று சென்னா ரெட்டி... இன்று ஆர்.என்.ரவி... ஆளுநர்-தமிழக அரசு மோதலில் அ.தி.மு.க நிலைப்பாடு சரியா?

ஜெயலலிதா சட்டத் திருத்தம் நிறைவேற்றியபோதும், ஆளுநரைத் திரும்பப் பெறும் தீர்மானத்தை நிறைவேற்றியபோதும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்தவர், தற்போதைய அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ். அவரிடம் இது பற்றிப் பேசினோம்... “அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் மரபுப்படி ஆளுநர் செயல்படவில்லை என்பதால், 1994-ல் அ.தி.மு.க ஆளுநருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது. ஆனால், இப்போது ஆளுநர் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராகச் செயல்படவே இல்லை. அதனால்தான், ஆளுநர் பக்கம் நிற்கிறது அ.தி.மு.க. சுமார் 17 ஆண்டுகள் மத்திய அரசுகளுடன் தி.மு.க கூட்டணியில் இருந்தது. தொடர்ச்சியாக மத்திய அமைச்சரவையிலும் இடம்பெற்றதோடு, தி.மு.க ஆதரவு இல்லாமல் மத்தியில் ஆட்சி நடக்காது என்கிற நிலைகூட இருந்திருக்கிறது. ஆனால், அப்போதெல்லாம் இது போன்ற எந்தச் சட்டத் திருத்தத்தையும் கொண்டுவரவில்லை தி.மு.க. ஆளுநர் ரவி தமிழக அரசுக்குத் தொல்லை தருவதாக நினைத்தால், நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பலாம், உள்ளிருப்புப் போராட்டம் நடத்தலாம்... அதைச் செய்யாமல், தமிழகத்தில் இருந்துகொண்டே ஆளுநருக்கு எதிராகக் கம்பு சுற்றுவது அரசியல் நாடகம்!” என்றார்.

மத்திய அரசு, மாநில அரசு... இரு தரப்புமே மக்கள் நலனைப் பற்றி மட்டுமே சிந்தித்தால், இது போன்ற பிரச்னைகளுக்கெல்லாம் தேவையே இருக்காது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism