Published:Updated:

பா.ஜ.க ஸ்கெட்ச்... தி.மு.க ரெய்டு... சசிகலா டார்ச்சர்... திண்டாடும் அ.தி.மு.க!

திண்டாடும் அ.தி.மு.க!
பிரீமியம் ஸ்டோரி
திண்டாடும் அ.தி.மு.க!

ரெய்டு நேரத்தில் ஆலோசனைக் கூட்டம் வேண்டாமென்று எடப்பாடி தரப்பில் முடிவெடுத்து, கூட்டம் முதலில் ரத்துசெய்யப்பட்டது.

பா.ஜ.க ஸ்கெட்ச்... தி.மு.க ரெய்டு... சசிகலா டார்ச்சர்... திண்டாடும் அ.தி.மு.க!

ரெய்டு நேரத்தில் ஆலோசனைக் கூட்டம் வேண்டாமென்று எடப்பாடி தரப்பில் முடிவெடுத்து, கூட்டம் முதலில் ரத்துசெய்யப்பட்டது.

Published:Updated:
திண்டாடும் அ.தி.மு.க!
பிரீமியம் ஸ்டோரி
திண்டாடும் அ.தி.மு.க!
பொன்விழா கொண்டாட்டங்களுக்குத் தயாராக வேண்டிய நேரத்தில், அ.தி.மு.க சோதனையான காலகட்டத்தில் இருக்கிறது. தி.மு.க-வின் ரெய்டு, அ.தி.மு.க-வுக்கு மாற்றாகத் தன்னை நிலைநிறுத்த பா.ஜ.க போடும் ஸ்கெட்ச், சசிகலாவின் டார்ச்சர் எனப் பல்வேறு சூறாவளிகளால் அ.தி.மு.க முன்னணித் தலைவர்கள் திண்டாடிப்போயிருக்கிறார்கள்.

உட்கட்சித் தேர்தல் தொடர்பாக விவாதிக்க, ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமையகத்தில், ஜூலை 22-ம் தேதி காலை 11 மணியளவில் கூட்டம் நடைபெறுவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம், போக்குவரத்துத்துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 26 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தும் தகவல் கிடைத்தவுடன், அந்தக் கூட்டத்தைத் திடீரென ரத்துசெய்தனர். கூட்டத்துக்குக் கிளம்பிவந்த மாவட்டச் செயலாளர்களும் திரும்பத் தொடங்கினர். அடுத்த சில நிமிடங்களிலேயே ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக மீண்டும் அறிவிப்பு வெளியானது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தி.மு.க-வின் ரெய்டு குறித்துத்தான் அனல்பறக்கும் விவாதம் நடந்திருக்கிறது.

சவுண்டுவிட்ட சண்முகம் - அமைதிகாத்த எடப்பாடி!

நம்மிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவர், “ரெய்டு நேரத்தில் ஆலோசனைக் கூட்டம் வேண்டாமென்று எடப்பாடி தரப்பில் முடிவெடுத்து, கூட்டம் முதலில் ரத்துசெய்யப்பட்டது. ஆனால், கூட்டம் நடத்துவதில் பன்னீர் விடாப்பிடியாக நின்றதால், திட்டமிட்டபடி மீண்டும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பன்னீர், ‘எம்.ஆர்.விஜயபாஸ்கர் மேல கைவெச்சவங்க, நம்ம மேல வெக்கிறதுக்கு ரொம்ப நேரம் ஆகிடாது. இந்த நேரத்துல நாம பின்வாங்கினா, ஏதோ நாம பயந்த மாதிரி ஆகிடும். தி.மு.க-வைத் திருப்பியடிக்குற மாதிரி ஆர்ப்பாட்டம், போராட்டம்னு நாம களமிறங்கணும்’ என்றார். அதற்கு சி.வி.சண்முகம், ‘எம்.ஆர்.சி நகரிலுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டுக்கே நேரடியாகச் சென்று, நம் பலத்தைக் காட்டலாம்’ என்று ஐடியா கொடுக்க, அதை வேலுமணியும் தங்கமணியும் ஆமோதித்தனர். கட்சித் தலைமையும் இந்த ஐடியாவை ஏற்றது.

பா.ஜ.க ஸ்கெட்ச்... தி.மு.க ரெய்டு... சசிகலா டார்ச்சர்... திண்டாடும் அ.தி.மு.க!

தொடர்ந்து பேசிய சண்முகம், ‘இவங்களைத் தொடக்கத்துலேயே அடக்கிவெக்கணும். செந்தில் பாலாஜி பேச்சைக் கேட்டுக்கிட்டு ஆடுறாங்க. போக்குவரத்துத்துறையில செந்தில் பாலாஜி செஞ்ச முறைகேட்டை எம்.ஆர்.வி வெளியே கொண்டுவந்ததற்காகவே இப்படிப் பழிவாங்குறாங்க. அவங்களா, நாமளானு போட்டுப் பார்த்துடுவோம்’ என்று ஆவேசமானார். சண்முகத்தை அமைதிப்படுத்திவிட்டுப் பேசிய எடப்பாடி, ‘எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவெடுக்கக் கூடாது. இன்னிக்கு நடத்தப்படுற ரெய்டுல பெருசா எதுவும் சிக்கலைனு லஞ்ச ஒழிப்புத்துறையில இருந்தே சொல்றாங்க. இது ஒருவகையில நமக்குச் சாதகம்தான். தி.மு.க-வோட பழிவாங்கும் நடவடிக்கைனு மக்கள்கிட்ட எடுத்துட்டுப் போவோம்’ என்றார். எடப்பாடியின் இந்த நிதானம் எல்லோராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டது.

அ.தி.மு.க அமைச்சர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரண்டு முறை ஆளுநரிடம் தி.மு.க-வினர் புகார் மனு அளித்திருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பெயர் இல்லை. லிஸ்ட்டிலேயே இல்லாதவர் மீது 26 இடங்களில் சோதனையை ஏவிவிட்டிருக்கிறது தி.மு.க அரசு. அவருக்கே இந்த கதி என்றால், ஆளுநரிடம் அளிக்கப்பட்ட பட்டியலிலிருக்கும் மற்றவர்களின் கதி? இதுதான் சில முன்னாள் மாண்புமிகுக்களை திகிலில் தள்ளியிருக்கிறது. தி.மு.க-வைப் பெரிதாகத் தாக்கி கோபத்துக்கு உள்ளாகிவிடக் கூடாது என்பதில் சில முன்னாள் அமைச்சர்கள் உஷாராக இருக்கிறார்கள். ஆனால், ‘திருப்பித் தாக்கவில்லையென்றால் தி.மு.க மொத்தமாகச் சாம்பலாக்கிவிடும்’ என்று சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் வாதம் செய்தனர். இந்த ரெய்டைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என ஒரு தரப்பு வாதிட்டபோது, கண்டன அறிக்கையோடு முடித்துக்கொள்ளலாம் என எடப்பாடி தரப்பில் வாதமிட்டனர். கடைசியில் கண்டன அறிக்கை மட்டும்தான் கூட்டத்தின் முடிவில் வெளிவந்தது” என்றார்.

அ.தி.மு.க இடத்தை அபகரிக்க ஸ்கெட்ச்! - குறுக்குசால் ஓட்டும் பா.ஜ.க

தி.மு.க ஏவிய ரெய்டு அஸ்திரம் அ.தி.மு.க கூடாரத்தைக் கிடுகிடுக்கச் செய்திருப்பது என்னவோ நிஜம். இந்த இக்கட்டான காலகட்டத்தில், கரம் கொடுத்து உதவ வேண்டிய கூட்டணிக் கட்சியான பா.ஜ.க., உடனிருந்துகொண்டே குழிபறிப்பதுதான் அ.தி.மு.க தலைவர்களை மேலும் உஷ்ணமாக்கியுள்ளது. பா.ஜ.க மாநிலத் தலைவராகியிருக்கும் அண்ணாமலை மதுரையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தி.மு.க-வுக்கு பா.ஜ.க-தான் எதிரி. தமிழகத்தின் அரசியல் களம் அதை நோக்கித்தான் நகர்கிறது” என்றார். அதாவது, ‘இனி அ.தி.மு.க பிரதான எதிர்க்கட்சியல்ல, பா.ஜ.க-தான் அந்த இடத்தை நிரப்பப்போகிறது’ என்பதைச் சூசகமாகச் சொன்னார். இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக, தன் முகநூல் பக்கத்தில் கார்ட்டூன் ஒன்றைப் பதிவிட்டிருக்கும் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும், ‘நமது அம்மா’ நாளிதழின் ஆசிரியருமான மருது அழகுராஜ், ‘அதனாலென்ன, அடுத்துவரும் நாடாளுமன்றத் தேர்தல்ல காங்கிரஸுக்கும் அ.தி.மு.க-வுக்கும்தான் போட்டினு நாமளும் சொல்லலாம்ல’ என்று கிண்டலடித்திருக்கிறார். அ.தி.மு.க-வின் இடத்தை பா.ஜ.க அபகரிக்க முயல்வதுதான் ராயப்பேட்டை வட்டாரத்தைக் கடுப்பாக்கியிருக்கிறது.

நம்மிடம் பேசிய அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் சிலர், “கடந்த 50 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில், ஏழு முறை அ.தி.மு.க வெற்றிபெற்று ஆட்சியமைத்திருக்கிறது. ஜெயலலிதா இல்லாத காலகட்டத்தில், பா.ஜ.க-வை உடன் வைத்துக் கொண்டே 2021 சட்டமன்றத் தேர்தலில் 33 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறோம். அ.தி.மு.க ஒரு மாபெரும் இயக்கமாக, தமிழகத்தில் கொடிகட்டிப் பறந்த 80-களில், அண்ணாமலை நடைபயின்றுகொண்டிருந்திருப்பார். அவருக்கு அ.தி.மு.க-வின் வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழகத்தில் தி.மு.க-வுக்கு எதிரி என்றுமே அ.தி.மு.க-தான். அது தொண்டர்களின் ரத்தத்தில் ஊறிப்போன விஷயம்” என்றனர்.

பா.ஜ.க ஸ்கெட்ச்... தி.மு.க ரெய்டு... சசிகலா டார்ச்சர்... திண்டாடும் அ.தி.மு.க!

சொதப்பிய ஆபரேஷன்!

“அண்ணாமலைக்கு பா.ஜ.க மேலிடம் அளித்திருக்கும் முதல் அசைன்மென்ட்டே, தி.மு.க-வுக்கு மாற்றாக பா.ஜ.க-வை முன்னிறுத்துவதுதான்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இதற்காக, இரண்டு திட்டங்களை வகுத்தார்களாம். ஒன்று, அ.தி.மு.க சட்டவிதிகள் திருத்தப்பட்டது தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் இன்னும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. ‘இந்த வழக்கில் அ.தி.மு.க-வுக்கு எதிராக பதில் மனுவைத் தாக்கல் செய்யவைத்து, இரட்டை இலைச் சின்னத்தை முடக்கலாம்’ என்று சில புத்திசாலிகள் டெல்லிக்கு ஐடியா கொடுத்துள்ளனர். ஆனால், ‘ஓ.பி.எஸ் - எடப்பாடி தலைமைக்குச் சின்னத்தை ஒதுக்கி நான்கு தேர்தல்களைச் சந்தித்தாகிவிட்டது. இந்தச் சூழலில், அவர்கள் தலைமையைக் கேள்விக்குள்ளாக்கி, சின்னத்தை முடக்குவது லேசுப்பட்ட வேலையல்ல’ என்று டெல்லி ‘நோ’ சொன்னதாம். இரண்டாவது, அ.தி.மு.க-விலிருந்து சிலரைப் பிடித்து கமலாலயத்தில் துண்டு போர்த்துவதற்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதற்காக, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர், தென்மாவட்டத்தைச் சேர்ந்த சர்ச்சை நாயகர் ஒருவருக்கு வலை விரிக்கப்பட்டிருந்தது.

அவர்களை கமலாலயம் தரப்பிலிருந்து அணுகியபோது, “ஏற்கெனவே தி.மு.க-விலிருந்து பா.ஜ.க-வுக்கு வந்த கு.க.செல்வம் ஓரமாகத்தான் இருக்கிறார். வி.பி.துரைசாமிக்கு கமலாலயத்தில் பேட்டியளிக்கும் பொறுப்பைத் தவிர வேறெதுவும் தரப்படவில்லை. நாங்கள் எதற்கு நடுச்சாமத்தில் சுடுகாட்டுக்குப் போக வேண்டும்” என்று கேட்டுவிட்டனராம். வியூகங்களெல்லாம் நொறுங்கிப்போயிருப்பதால், வருத்தத்தில் இருக்கிறது பா.ஜ.க தலைமை. இந்தநிலையைத் தன் தடாலடி வியூகங்களால் மாற்றி, பா.ஜ.க-வை பிரதான எதிர்க்கட்சியாக முன்னிறுத்தப் பார்க்கிறார் அண்ணாமலை. ஆனால், இந்த வாய்ஜால அரசியல் அ.தி.மு.க-வினரை வெறுப்படையவே வைத்திருக்கிறது.

பா.ஜ.க ஸ்கெட்ச்... தி.மு.க ரெய்டு... சசிகலா டார்ச்சர்... திண்டாடும் அ.தி.மு.க!

“நானும் ரௌடிதான்” சசிகலா டார்ச்சர்!

பா.ஜ.க-வின் உருட்டு ஒருபுறமென்றால், மற்றொருபுறம் சசிகலாவின் டார்ச்சர் அரசியலால் அ.தி.மு.க-வினர் திண்டாடிப்போயிருக்கிறார்கள். அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டார். ‘வென்ட்டிலேட்டர்’ உதவியுடன் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஜூலை 20-ம் தேதி மதியம் 12 மணியளவில், மதுசூதனனின் உடல்நலனை விசாரிக்க எடப்பாடி பழனிசாமி சேலத்திலிருந்து வந்தார். இதை முன்கூட்டியே தெரிந்துகொண்ட சசிகலா, அதேநேரத்தில் தானும் அப்போலோவுக்கு மதுசூதனனின் உடல்நலனை விசாரிக்கக் கிளம்பினார். அ.தி.மு.க கொடிகட்டிய காரில் மருத்துவமனைக்குள் தோரணையாக நுழைந்தார் சசி. மொத்த அ.தி.மு.க-வும் பரபரப்பானது. என்ன நடக்கும் என்று அத்தனை பேரும் எதிர்பார்த்திருக்க, சசிகலாவை நேரடியாகச் சந்திப்பதைத் தவிர்த்து, அங்கிருந்த ஆறு அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்களும் மெல்ல மெல்லக் கிளம்பினார்கள். மா.செ-க்கள் கிளம்புவதிலுள்ள அரசியலைப் புரிந்துகொண்டு எடப்பாடி பழனிசாமியும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து கிளம்பினார். இது குறித்து நமக்கு விளக்கமளித்த ஒரு மாவட்டச் செயலாளர், “நானும் ரௌடிதான் வடிவேலு மாதிரி, அந்தம்மா வாலன்டியரா வண்டில ஏறி வந்திருக்கு. சும்மா சும்மா எங்களைவெச்சு விளம்பரம் தேடுது. நாங்க ஏன் அதுக்குப் பலியாகணும்... அதான் கிளம்பிட்டோம்” என்றார். ஆனாலும் இந்த விளக்கத்தைத் தொண்டர்களால்தான் ஏற்க முடியவில்லை.

நம்மிடம் பேசிய கழகப் பேச்சாளர்கள் சிலர், “சசிகலாவுக்கும் இந்தக் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று சொல்லியாச்சு. பிறகும், அவர் வருகிறார் என்று தெரிந்தவுடன் ஏன் ஓட வேண்டும்? நின்று அவரை எதிர்கொண்டிருக்கலாம். அல்லது கட்சியினர் மூலமாக அவர் வாகனத்தை மறித்து, அம்மாவின் இறப்புக்கு நியாயம் கேட்டிருக்கலாம். இதைச் செய்திருந்தால், எடப்பாடியின் இமேஜ் கட்சிக்குள் வெகுவாக உயர்ந்திருக்கும். ஆனால், சசியை எதிர்கொள்ள முடியாமல் வெளியேறியதால், ‘தலைமையே பயப்படுது. நாம ஏன் அவங்களைப் பகைச்சுக்கணும்’ என்று தொண்டர்களும் தயங்குகிறார்கள். சசிகலா காட்டுவது வெறும் பூச்சாண்டி அரசியல்தான் என்பதைத் தொண்டர்களுக்கு அ.தி.மு.க தலைமைதான் உணர்த்த வேண்டும்” என்றனர்.

அ.தி.மு.க-வின் வரலாற்றில் எத்தனையோ சோதனையான காலகட்டங்களைத் தொண்டர்கள் சந்தித்திருக்கிறார்கள். இப்போதுள்ள காலகட்டமும் கடந்துபோகும். ஆனால், தொண்டர்களுக்கு தைரியம் தர வேண்டிய கட்சித் தலைமை ஓடி ஒளிகிறது. இவ்வளவு குழப்பங்களுக்கு இடையிலும், அ.தி.மு.க நிர்வாகிகள்தான் கட்சி மாறியிருக்கிறார்களே தவிர, தொண்டர்கள் மாறவில்லை. அதைக் காப்பாற்றிக்கொள்வது அ.தி.மு.க தலைமையின் கையில்தான் இருக்கிறது!

பா.ஜ.க ஸ்கெட்ச்... தி.மு.க ரெய்டு... சசிகலா டார்ச்சர்... திண்டாடும் அ.தி.மு.க!

சசிகலாவையே டார்ச்சர் செய்த தொண்டர்கள்!

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, அ.தி.மு.க-வினரிடம் பேசுவதாகத் தன் போன் உரையாடல்களை வெளியிட்டுவந்த சசிகலா, ஜூலை 18-ம் தேதியுடன் அதை நிறுத்திக்கொண்டார். சசிகலாவுடன் தொடக்கத்தில் பேசியவர்கள் காட்டிய பவ்யம் கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல்போய்விட்டது. சமீபத்தில் வெளியான ஆடியோக்களில் பேசியவர்கள் வாகனத்தில் பயணம் செய்துகொண்டும், வீட்டில் மாவு அரைத்துக்கொண்டும், டி.வி பார்த்துக்கொண்டும் பேசியிருக்கின்றனர். “நான் கண்டிப்பாக வருவேன். நிச்சயம் கட்சியை மீட்பேன்” என்று அவர் சீரியஸாகப் பேச, மிக்ஸர் தின்றபடியே “சரிம்மா... சீக்கிரம் வாங்கம்மா” என்று கூலாக டீல் செய்திருக்கிறார்கள். தங்கள் வீட்டிலிருந்த மற்றவர்களுடனும் பேசுமாறு சிலர் கொடுத்த டார்ச்சரில் அதிர்ந்துபோயிருக்கிறார் சசி. தொடர்பைத் துண்டித்தால் தவறாகிவிடும் என்று கருதி, பல்லைக் கடித்துக்கொண்டு சசிகலாவும் அவர்களுடன் உரையாடியிருக்கிறார். ஒரு தொண்டர் சசிகலா என்ன பேசினாலும், ‘ஓம் நமச்சிவாய’ என்றே பதில் சொல்லியிருக்கிறார். இன்னொருத்தரோ சசிகலாவை ஒரு வார்த்தைகூடப் பேசவிடாமல், அவரே கால் மணி நேரம் பேசி டயர்டாக்கியிருக்கிறார். இந்த ரியாக்‌ஷன்களால் நொந்துபோன சசிகலா, போன் உரையாடலுக்குத் தற்காலிக முற்றுப்புள்ளி வைத்துவிட்டாராம்!