Published:Updated:

`எந்தக் கிளைக் கழகமும் செயல்படவில்லை!'- முதல்வர் எடப்பாடிக்குச் சென்ற அதிர்ச்சி ரிப்போர்ட்

எம்.திலீபன்

தோல்விக்கான காரணங்களை ஒரு குழு மூலம் மறைமுகமாக ஆராய்ந்து கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி. இந்தக் குழு, என்.ஆர்.சிவபதி, பரஞ்சோதி, இளம்பைத் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பெயர்களை முதல்வரிடம் அளித்துள்ளது.

முதல்வர் எடப்பாடி
முதல்வர் எடப்பாடி

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வியைச் சந்தித்தது. இந்தத் தோல்விக்கான காரணங்களை ஒரு குழு மூலம் மறைமுகமாக ஆராய்ந்து கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி. இந்தக் குழு, என்.ஆர்.சிவபதி, பரஞ்சோதி, இளம்பைத் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பெயர்களை முதல்வரிடம் ரிப்போர்ட் அளித்துள்ளது. இதில், `எந்தக் கிளைக் கழகங்களும் சரியாகச் செயல்படவில்லை' என்று கூறப்பட்டுள்ளது.

எடப்பாடி
எடப்பாடி

"அ.தி.மு.க என்பது இரும்புக்கோட்டை. எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.கதான் தமிழகத்தை ஆளும். அதை யாராலும் அழிக்க முடியாது" என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அதிரடியாகப் பேசினார். ஜெயலலிதாவின் இந்த ஆசை தொடருமா என்பதுதான் அ.தி.மு.க-வினரின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. ஜெயலலிதா மறைந்து இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க படுதோல்வியைச் சந்தித்தது. இந்தத் தோல்விக்கான காரணங்களை ஆராய குழு அமைத்துள்ளார் முதல்வர் எடப்பாடி. தோல்விக்கு காரணம் எங்கள் கட்சிக்காரர்கள்தான் என்று குற்றம்சாட்டுகின்றனர் கட்சியின் உண்மையான ர.ர.க்கள்.

"பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க கூட்டணியிருந்த பாரிவேந்தர் (ஐ.ஜே.கே.) 6,83,697 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.சிவபதியை 4,03,518 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் 60 சதவிகிதம் முத்தரையர் வாக்குகள் இருக்கிறது என்றும், நான் போட்டியிட்டால் கண்டிப்பாக வேந்தரை எளிதாகச் தோற்கடித்துவிடுவேன் என்று கூறி முதல்வர் எடப்பாடியிடம் சீட் வாங்கினார் சிவபதி.

என்.ஆர்.சிவபதி
என்.ஆர்.சிவபதி

அவருக்கு சீட் கிடைத்தவுடன் அவர்கள் சமூகத்தைச் சார்ந்தவர்களுக்குள்ளே கோஷ்டி பூசல் அதிகமாகி, அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. கடைசியில் அவர் சொந்த தொகுதியிலேயே குறைந்த வாக்குகளைப் பெற்று தோல்வியை தழுவியதுதான் அதிர்ச்சி. இதுபோன்று பல மாவட்டங்களில் கட்சிகளுக்குள் நடந்த கோஷ்டி பூசல்களால் தோல்வி நடந்திருக்கிறது.

இதைப் பயன்படுத்திக்கொண்டு கட்சியை பலப்படுத்திக் கொண்டது தி.மு.க. எங்கள் கட்சித் தலைமை சரியாக இருந்தாலும் அவருக்குக் கீழ் இருப்பவர்கள் சரியில்லை. ஒவ்வொருவரும் அவர்களுடைய சுயநலத்தை மட்டுமே கணக்கில் கொண்டு செயல்படுகின்றனர். ஜெயலலிதா இருக்கும்போது கட்சியில் இருக்கும் ஒவ்வொரு பிரிவுகளும் பம்பரமாகச் செயல்படும். மாநில இளைஞர் பாசறை, இளைஞர் அணி, மாணவர் அணி, மீனவர் அணி என ஒவ்வொரு அணியையும் ஜெயலலிதா பலப்படுத்தி மாதம் ஒரு கூட்டத்தைப் போடச் சொல்வார். ஆங்காங்கே இருக்கும் கட்சிக்காரர்கள் புது உணர்வோடு கலந்துகொள்வார்கள். கட்சி எங்கே பலவீனமாக இருக்கிறதோ அதைக் கவனித்து அப்போதே சரி செய்துவிடுவோம். தற்போது மாநில இளைஞரணி என்பது ஒன்று இருப்பதாகக்கூட தெரியவில்லை. அதன் மாநிலச் செயலாளராக இருப்பவர் என்.ஆர்.சிவபதி.

பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தர்.
பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தர்.

இவர் முன்னாள் அமைச்சர். இவருக்கு அனைத்து வித்தைகளும் அத்துப்படி என்று சொல்வார். ஆனால் இவர் சார்ந்த மாநில இளைஞரணி அப்படியே படுத்துக் கிடக்கிறது. அதேபோல மாணவரணியின் மாநிலச் செயலாளராக சென்னை விஜயகுமார் இருப்பது என்பது பலருக்கு தெரியவில்லை. அதேபோல் இளைஞர் இளம் பெண்கள் பாசறை. இந்தப் பிரிவுக்கு ஜெயலலிதா இருக்கும்போது ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பார். இதன் மூலம் பல லட்சம் உறுப்பினர்களை தொண்டர்கள் சேர்த்தார்கள். ஆனால் இப்போது இந்தப் பிரிவு முடங்கிக் கிடக்கிறது.

இந்தப் பிரிவுகள் மட்டுமல்ல மீனவர் அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, அமைப்பு சாரா தொழிலாளர்கள் என அனைத்துப் பிரிவுகளும் முடங்கிப் போய் கிடக்கிறது. இதில் முக்கியமாக இந்தப் பிரிவுகளுக்குத் தலைமை இல்லாதவர்களை கட்சி ஓரங்கட்டித் துடைத்து எறிய வேண்டும். நாம் பலவீனமாக இருப்பதைத் தெரிந்துகொண்ட ஸ்டாலின், அவருடைய கட்சி பிரிவுகளுக்கு புது ரத்தத்தைப் பாய்ச்சி வரப்பார்க்கிறார். ஆங்காங்கே கிளைக் கழக கூட்டம் போட்டு வருகிறார். அதில் முதல்கட்டமாகத்தான் தன் மகன் உதயநிதிக்கு இளைஞரணி பதவி கொடுத்து புது ரத்தத்தைப் பாய்ச்சப் போகிறேன் என்று சொன்னது. அவர் அடுத்தடுத்து கிளை பிரிவுகளைச் சரி செய்யத் தயாராகி வருகிறார்கள். ஆளும் கட்சியாக இருக்கும் அ.தி.மு.க உடனடியாக செயல்படாதவர்களைத் தூக்கி எறிந்துவிட்டு தி.மு.க போல் விழித்துக் கொள்ள வேண்டும். இதில் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். கவனம் செலுத்தினால் அ.தி.மு.க-வை மீட்க முடியும். இல்லையேல் கேள்விக்குறிதான்" என்று ஆதங்கத்தோடு முடித்தனர்.

என்.ஆர்.சிவபதி
என்.ஆர்.சிவபதி

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் சிவபதியிடம் பேசினோம். தி.மு.க வெற்றி பெற்றதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. அவர்கள் பொய் பிரசாரத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள். வேலூர் தொகுதியில் எங்கள் பலத்தை பாருங்கள். அப்போது புரியும். நாங்கள் வலுவோடு இருக்கிறோமா வலுவிழந்துவிட்டோமா என்று. உதயநிதி எத்தனை முறை சிறைக்குச் சென்றிருக்கிறார். அவருக்கு பதவி கொடுத்ததற்கு கட்சிக்குள்ளே எதிர்ப்புகள் கிளம்பிக்கொண்டிருக்கின்றன. தி.மு.க குடும்ப அரசியல் செய்கிறது என்று ஊருக்கே தெரியும்'' என்று முடித்துக்கொண்டார்.