வகுப்புவாத சக்திகளை வீழ்த்துவோம்; லட்சியமே முக்கியம் - முத்தரசன்

வகுப்புவாத சக்திகளை வீழ்த்த வேண்டும் என்பது தான் நோக்கம்.தேர்தலில் எத்தனை இடங்களில் போட்டியிடுகிறோம் என்பது முக்கியமல்ல,லட்சியமே முக்கியம்.
``பணத்தின் மூலமாக வெற்றி பெற்றுவிடலாம் என நம்பிக்கையோடு ஆளுங்கட்சியினர் இருக்கிறார்கள். தமிழக மக்கள் அதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள். ஆட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள், ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பு. மத்திய பா.ஜ.க அரசின் வீழ்ச்சிக்குத் தொடக்கமாக இருக்கும்" என்று மத்திய மாநில அரசுகளைக் கடுமையாக விமர்சனம் செய்து இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழுக் கூட்டத்தில் பேசினர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா,மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் மாநிலக் குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டி.ராஜா, ``வரும் சட்டமன்ற தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகப் பார்க்கப்படுகிறது.
பா.ஜ.க இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு, பன்முகத்தன்மைக்கும், ஜனநாயகத்திற்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. மதச்சார்பற்ற தன்மையைத் தகர்த்து வருகிறது. இந்தியாவை மத ரீதியாகக் கட்டமைக்க முயற்சி செய்து வருகிறது. தனியார் பெரும் நிறுவனங்களைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் ஒப்படைத்து வருகிறார்கள். இந்திய அரசியல் அமைப்பு சட்டம், ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய முக்கிய கடமை நமக்கு உள்ளது. தமிழ்நாடு, கேரளா,மேற்கு வங்கம்,புதுச்சேரி, அசாம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பு மத்திய பா.ஜ.க அரசின் வீழ்ச்சியின் தொடக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்க வேண்டும்.

தமிழ்நாடு சமூகநீதி, சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் முன்னேறிய மாநிலம். ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க அவர்களின் செயல்திட்டத்தைத் தமிழகத்தில் செயல்படுத்த முடியாது. பா.ஜ.க-வுடன் யார் கூட்டணி வைத்தாலும் அவர்களைத் தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள். இந்தியாவை,அரசியலமைப்பு சட்டத்தை, ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது மிக முக்கிய கடமையாக இருக்கிறது. தமிழர்களின் உரிமைகளை காப்பதில் எடப்பாடி பழனிச்சாமி அரசு தோல்வி அடைந்துள்ளது. மக்கள் தற்போது ஆட்சிக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள். தமிழக மக்கள் பல்வேறு விவகாரங்களுக்காகப் போராடுகிறார்கள். தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகிறது. அதற்குக் காரணம் எடப்பாடி பழனிச்சாமி அரசு தான்" என்றார்.

அவரைத்தொடர்ந்து முத்தரசன் பேசுகையில்.``வகுப்புவாத சக்திகளை வீழ்த்த வேண்டும் என்பது தான் நோக்கம். தேர்தலில் எத்தனை இடங்களில் போட்டியிடுகிறோம் என்பது முக்கியமல்ல,லட்சியமே முக்கியம். எந்த எந்த தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பதை விரைவில் கலந்து பேசி அறிவிப்போம்.
தமிழகத்தில் ஜனநாயக பூர்வமாக, நியாயமாக, பண பலமின்றி தேர்தல் நடத்த வேண்டும். இதற்குத் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களிடம் ஆதரவு, செல்வாக்கு இருப்பதாகக் கருதவில்லை. எனவே, பணத்தின் மூலமாக வெற்றி பெற்றுவிடலாம் என நம்பிக்கையோடு ஆளுங்கட்சியினர் இருக்கிறார்கள். தமிழக மக்கள் அதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள். " என்றார்.
கூட்டத்திற்கு முன்னதாக மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.