Published:Updated:

ஒரு மகாசக்தி, அ.தி.மு.க-வுக்குள் வரும்போது மிகப்பெரிய எழுச்சி அலை ஏற்படும்!

வைகைச்செல்வன்
பிரீமியம் ஸ்டோரி
வைகைச்செல்வன்

- சொல்கிறார் வைகைச்செல்வன்

ஒரு மகாசக்தி, அ.தி.மு.க-வுக்குள் வரும்போது மிகப்பெரிய எழுச்சி அலை ஏற்படும்!

- சொல்கிறார் வைகைச்செல்வன்

Published:Updated:
வைகைச்செல்வன்
பிரீமியம் ஸ்டோரி
வைகைச்செல்வன்

‘அரசியல் சுற்றுப்பயணம் செல்லப் போகிறேன்’ என்று அறிவித்திருந்த சசிகலா, அதற் கான முன்னோட்டமாக ஆன்மிகச் சுற்றுலாவை ஆரம்பித்து, தென் மாவட்டங்களில் வலம்வருகிறார். இதற்கிடையில், ‘அ.தி.மு.க-வுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும்’ என்ற கோஷம் வலுவடைந்துவருகிறது. இந்தச் சூழலில், அ.தி.மு.க செய்தித் தொடர்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வனிடம் பேசினோம்...

“அ.தி.மு.க-வின் ஒற்றைத் தலைமையாக யார் வர வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?’’

“இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் என இரண்டு பேரையும் நாங்கள் ஒன்றாகவே பார்க்கிறோம். அந்தவகையில், இரண்டு பேருமே இணைந்து அ.தி.மு.க இயக்கத்தை வழிநடத்த வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை!’’

“ஆனால், அ.தி.மு.க-வுக்குள் ‘ஒற்றைத் தலைமையே வேண்டும்’ என்ற கோஷம் அதிகரித்துவருகிறதே..?’’

“ஆமாம்... உண்மைதான். ‘ஒருவரே இருந்து கட்சி முடிவுகளை எடுப்பது நல்லது’ என்ற கருத்து கட்சிக்குள் நிலவி வரும்போதும்கூட, இருக்கிற இருவரில் யாரை இழப்பது, யாரை எடுப்பது? ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவருமே எங்களின் இரு கண்கள். தாயை இழப்பதா, தந்தையை மறுப்பதா? பதில் சொல்ல முடியாத இந்தக் கேள்விக்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும். அதுவரையில் நாம் காத்திருக்கத்தான் வேண்டும்!’’

“ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவருமே வேண்டாம்... ‘சசிகலா, கட்சித் தலைமை ஏற்கட்டும்’ என்றுதானே அ.தி.மு.க-வினர் போஸ்டர் ஒட்டிவருகின்றனர்?’’

“ `தகுதி உள்ளது தப்பிப் பிழைக்கும், வெற்றிடத்தைக் காற்று நிரப்பும்’ என்பார்கள். யாரையும் வலிந்து திணிக்க முடியாது. ‘சசிகலா, தலைமை ஏற்க வேண்டும்’ என்று ஆங்காங்கே தொண்டர்கள் ஆசைப்படலாம். ஆனால், அது கட்சியின் ஒருமித்த கருத்தாக எழ வேண்டும்; ஒருமித்த எண்ணமாக உதிக்க வேண்டும். தகுதியுள்ளது தானாகவே பீறிட்டு வெளிக்கிளம்பும். அப்படித் தகுதியான ஒன்றை நோக்கி, அ.தி.மு.க தொண்டர்கள் நகர்ந்துகொண்டிருக்கிறார்கள்!’’

“விரைவில் ‘அ.தி.மு.க தலைமைப் பொறுப்பை சசிகலா ஏற்பார்’ என்று சொல்கிறீர்களா?’’

“அப்படிச் சொல்ல முடியாது. ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவரும் இந்தக் கட்சியை நல்ல முறையில் நடத்திவருகிறார்கள். இவர்களையும் தாண்டி, மிகப்பெரிய வாக்குவங்கியை அள்ளித் தரக்கூடிய அளவுக்கான ஒரு மகா சக்தி, அ.தி.மு.க-வுக்குள் வரும்போது மிகப்பெரிய எழுச்சி அலை ஏற்படும்!’’

“அந்த ‘மகா சக்தி’ சசிகலாதானே?’’

“அப்படி எடுத்துக்கொள்ள முடியாது. மகா சக்தி என்று நான் சொல்வது என்னுடைய தனிப் பட்ட கருத்து. இந்தக் கருத்து ஒட்டுமொத்த அ.தி.மு.க-வின் கருத்தாகவும் பிரதிபலிக்க வேண்டும். அதாவது, சசிகலாவின் ஆதரவு சக்திகள், கட்சியின் ஒட்டுமொத்த ஆதரவு அலையாகப் பெருக வேண்டும். அப்படியான சூழல் உருவாகவில்லையென்றால், வலிய கொண்டுவந்து திணிப்பதாகிவிடும். அதைத் தொண்டர்களேகூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!’’

“விதைத்தவர்கள், வளர்த்தவர்களை மறுத்ததால்தான் இன்று அ.தி.மு.க-வுக்கு இந்த நிலை. இதை அவர்கள் உணர வேண்டும் என்கிறாரே சசிகலா..?”

“1996, 2006 சட்டமன்றத் தேர்தல்களிலும் அ.தி.மு.க தோற்றிருக்கிறதுதான். எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா போன்ற மகா சக்திகளாக இல்லாமல், தற்போதைய இரட்டைத் தலைமை எளிய தலைவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், இந்தத் தலைமையையும்கூட மக்கள் ஏற்றுக்கொண்டிருப்பதால்தான், 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு 65 எம்.எல்.ஏ-க்களைக் கொடுத்திருக்கிறார்கள். தொடர்ச்சியாகப் பத்து ஆண்டுகள் அ.தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் இருந்ததால், மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பிவிட்டார்கள். அவ்வளவுதான்!’’

ஒரு மகாசக்தி, அ.தி.மு.க-வுக்குள் வரும்போது மிகப்பெரிய எழுச்சி அலை ஏற்படும்!

“இரட்டைத் தலைமையே சிறப்பாகச் செயல்படுகிறது என்றால், ‘சசிகலா தலைமை தேவையில்லை’ என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?’’

“இந்தக் கேள்விக்கான பதிலைக் காலம்தான் தீர்மானிக்கும் என்று ஏற்கெனவே நான் சொல்லிவிட்டேன். இந்த பதிலை நான் சூசகமாகவோ அல்லது சுற்றிவளைத்துச் சொல்வதாகவோ நினைக்க வேண்டாம். காலம்தான் ஒவ்வொரு விஷயத்தையும் தீர்மானிக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஓ.பி.எஸ்-தான் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார். அதன் பிறகு காலத்தின் தேவை கருதி, இ.பி.எஸ்-ஸும் ஓ.பி.எஸ்-ஸும் ஒன்றிணைந்தார்கள். இப்போது கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் தேர்தல் தோல்விகளையடுத்து, பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், கட்சியை மீட்டெடுத்துக் கொண்டுவருவதற்கு இரட்டைத் தலைமை அரும் பாடுபட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தச் சர்ச்சைகளையும் சலசலப்புகளையும் அமைதிப்படுத்துவதற்குத் தீவிரமான நடவடிக்கைகளைக் கட்சி எடுக்க வேண்டும்.’’

“உள்ளாட்சித் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தலில், அ.ம.மு.க-வுக்கு வாக்களித்த அ.தி.மு.க-வினர் நீக்கப்படவில்லையே ஏன்?’’

“சம்பந்தப்பட்ட இடங்களிலுள்ள அ.ம.மு.க-வினர் அ.தி.மு.க-வில் இணைந்துவிட்ட காரணத்தால்தான், அவர்களுக்கு அ.தி.மு.க கவுன்சிலர்களும் வாக்களித்து, தலைவராகத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். எனவே, இதில் எந்தக் கட்சி விரோதமும் இல்லை!’’

“அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.ராஜா, ‘ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவரும் இரட்டைக் குழல் துப்பாக்கி அல்ல; தீபாவளித் துப்பாக்கி. இருவருமே நாடகம் நடத்துகிறார்கள்’ என்று விமர்சித்திருக்கிறாரே?’’

“கட்சியினுடைய நலன் கருதி, ஒரே கருத்தை மையமாகவைத்து இருவரும் செயல்பட்டு வருகிறார்கள். ஆனால், இதைக்கூட ‘வெத்து துப்பாக்கி; தீபாவளித் துப்பாக்கி’ என்றெல்லாம் ஓ.ராஜா விமர்சிக்கிறாரென்றால், அது துப்பாக்கிக் கலாசாரம். அ.தி.மு.க எப்போதும் அமைதியை மட்டுமே விரும்பக்கூடிய கட்சி!’’

“ `சசிகலா தலைமை வேண்டும்’ என்று பேசிவருகிற ஆறுக்குட்டி, தேனி மாவட்டச் செயலாளர் ஆகியோர்மீது கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே... ஏன்?’’

“அடுத்தடுத்த கட்டங்களில், நிச்சயமாக அவர்கள் மீதும் நடவடிக்கை இருக்கும்!’’