Election bannerElection banner
Published:Updated:

அ.தி.மு.க Vs அ.ம.மு.க விவகாரத்தில் பா.ஜ.க-வின் ரோல் என்ன?

சசிகலா, எடப்பாடி, பன்னீர்செல்வம்
சசிகலா, எடப்பாடி, பன்னீர்செல்வம்

சசிகலா, அ.தி.மு.க-வில் சேர்த்துக்கொள்ளப்படுவாரா அல்லது அ.தி.மு.க தலைமையை சசிகலா கைப்பற்றுவாரா என்று பட்டிமன்றம் நடந்துகொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் பா.ஜ.க முக்கியப் பங்குவகிப்பதாகப் பேசப்படும் செய்திகள் உண்மையா?

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகியிருக்கும் சூழலில், அ.தி.மு.க-வின் முன்னாள் இடைக்காலப் பொதுச்செயலாளரான சசிகலா சிறையிலிருந்து விடுதலையானார். அந்த நேரத்தில் கொரோனா தொற்றுக்கு ஆட்பட்டு, அதிலிருந்து நலம்பெற்று தற்போது பெங்களூரு புறநகர்ப் பகுதியில் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறார். வரும் 7-ம் தேதி அவர் தமிழகம் வரவிருப்பதாகச் செய்திகள் பரபரக்கின்றன. இதனால், டி.டி.வி.தினகரன் முகாம் உற்சாகத்தில் இருக்கிறது. இரட்டைத் தலைமையில் இயங்கும் அ.தி.மு.க முகாமோ கலக்கத்திலும் குழப்பத்திலும் இருப்பதாகத் தெரிகிறது.

சசிகலா
சசிகலா

சிறையிலிருந்து விடுதலையான சசிகலா தன் காரில் அ.தி.மு.க கொடியைப் பறக்கவிட்டது, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் முளைப்பது போன்ற திடுக்கிடும் சம்பவங்கள் அ.தி.மு.க தலைமை மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளைப் பதற்றத்துக்கு உள்ளாக்கிவருகின்றன. சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியவர்கள் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்படுகிறார்கள். ஆனால், சசிகலாவுக்கு ஆதரவாக ட்வீட் போட்ட அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்மீது எந்த நடவடிக்கையும் ஏன் இல்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி.

சசிகலாவை அ.தி.மு.க-வில் சேர்த்துக்கொள்ள நூறு சதவிகிதம் வாய்ப்பே இல்லை என்று டெல்லியில் பேட்டி கொடுத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், சசிகலாவுக்கு எதிராக ஒரு வார்த்தைகூட ஓ.பன்னீர்செல்வம் பேசவில்லை. இந்தநிலையில், `ஓ.பன்னீர்செல்வம் எங்கள் பக்கம் வந்துவிடுவார்... சின்னம்மா இல்லாமல் தென்மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தால் ஓட்டு வாங்கிவிட முடியுமா...’ என்று சசிகலா ஆதரவாளர்கள் பகிரங்கமாகப் பேசிவருகிறார்கள். இதற்கும்கூட பன்னீர்செல்வம் வாய் திறக்கவில்லை. இதெல்லாம் அ.தி.மு.க., அ.ம.மு.க கட்சிகளுக்கு இடையிலான விவகாரங்கள். ஆனால், இந்த விவகாரத்தில் பா.ஜ.க-வும் அதன் தலைவர்களும் அரசியல் செய்கிறார்கள் என்ற செய்திதான் முக்கியமான மேட்டர்.

சசிகலாவும் அ.தி.மு.க-வும் ஒன்று சேருவதை பா.ஜ.க விரும்புகிறது என்று சொல்லப்படுகிறது. அதை பா.ஜ.க தலைவர்கள் வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஆனால், பா.ஜ.க ஆதரவாளரும், துக்ளக் ஆசிரியருமான ஆடிட்டர் குருமூர்த்தி மூலமாக துக்ளக் விழாவில் அது வெளிப்பட்டது. அ.ம.மு.க., அ.தி.மு.க இணைப்பு அல்லது கூட்டணி குறித்து பா.ஜ.க-வின் டெல்லி மேலிடம் திரைமறைவில் பேசிவருவதாக விவாதிக்கப்பட்டுவரும் சூழலில், தனி விமானத்தில் டெல்லிக்குச் சென்று பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்களை டி.டி.வி.தினகரன் சந்தித்துப் பேசியதாக செய்தி வெளியானது.

பா.ஜ.க-வும் அ.தி.மு.க-வும் கூட்டணிக் கட்சிகள். அவ்வளவுதான். அதுவும், `மோடியா இந்த லேடியா?’ என்று சவால்விட்ட ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு ஏற்பட்ட கூட்டணி இது. தேர்தல் கூட்டணி என்பதைத் தாண்டிய அரசியல் சதுரங்க ஆட்டம் அங்கு நடைபெற்றுவருவதாக வரும் தகவல்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.

ஆர்.கே.ராதாகிருஷ்ணன்
ஆர்.கே.ராதாகிருஷ்ணன்

இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். ``திராவிடக் கட்சிகள் முக்கியமான பிரச்னைகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஒரு காலத்தில் பெரியாரையும் கி.வீரமணியையும் சந்தித்ததைப்போல, இன்றைக்கு அ.தி.மு.க., அ.ம.மு.க தலைவர்கள் பா.ஜ.க-வினரைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். தற்போது, அ.தி.மு.க-வின் தாய்க்கழகம்போல பா.ஜ.க செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழக அரசியல் கட்சிகள் பா.ஜ.க-வுக்கு பயப்படுகின்றன. மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் பா.ஜ.க-விடம் தமிழகத்தில் ஆட்சியிலிருக்கும் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் பயப்படுகிறார்கள் என்றால், டி.டி.வி.தினகரனும் பயப்படுகிறார் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

தினகரன் 48 நாள்கள் சிறையில் இருந்திருக்கிறார். ஆனாலும், இன்னமும் அவருக்கு தைரியம் வரவில்லை. இதில், சசிகலா மட்டும்தான் துணிச்சலுடன் இருப்பதாகப் பார்க்கிறேன். சசிகலா, நான்காண்டுகள் சிறையில் இருந்திருக்கிறார். அதற்கு முன்பாக 1996-ல் சிறையில் இருந்திருக்கிறார். போலீஸ் காவலிலும் நீதிமன்றக் காவலிலும் இருந்திருக்கிறார். அவருக்கு எத்தனையோ உடல் உபாதைகள் இருக்கின்றன. ஆனாலும், அவர் தைரியமாக இருக்கிறார். பா.ஜ.க-வுக்கு அவர் அச்சப்படவில்லை. அவருக்கு இருக்கிற தைரியம் ஏன் இவர்களுக்கு இல்லை என்பதுதான் புரியவில்லை. ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தைரியம் இல்லையென்றால், இவர்கள் எப்படித் தமிழக மக்களையும், தமிழக நலன்களையும் பாதுகாப்பார்கள்?

தமிழகத்தில் தாங்கள் நினைப்பவர்கள்தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று பா.ஜ.க-வினர் நினைக்கிறார்கள். அதற்கு இங்குள்ள பலரும் துணைபோகிறார்கள். ஏனென்றால், பா.ஜ.க நினைப்பதுதான் இங்கு நடக்கும் என்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது. தாங்கள் நினைப்பதுதான் நடக்கும், நடக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பதால்தான், எடப்பாடி பழனிசாமிதான் எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்று பா.ஜ.க-வினர் சொல்லவில்லை. ஆனாலும்கூட, அ.தி.மு.க., அ.ம.மு.க-வினர் பா.ஜ.க-வின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த இரண்டு கட்சிகளும் பா.ஜ.க-வால் இயக்கப்படுவதைப்போல இருக்கிறது. இதில் சசிகலாவும், அ.தி.மு.க தொண்டர்களும் வித்தியாசமாக இருக்கிறார்கள் என்று பார்க்கிறேன்.

தினகரன்
தினகரன்

ஜெயலலிதாவுக்குப் பிறகுதான் இந்தக் காட்சிகள் வருகின்றன. 2016-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது, பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர் ஒருவர் அப்போலோவில் முகாமிட்டு, அ.தி.மு.க-வை முழுமையாக ஸ்டடி செய்கிறார். அப்போதிருந்துதான் இந்தப் பிரச்னை ஆரம்பித்தது. அதன் பிறகு 2017, பிப்ரவரியில் எடப்பாடி அதிகாரத்துக்கு வரும்வரை அ.தி.மு.க சுயமாகச் செயல்பட்டது என்று சொல்லலாம். பின்னர், ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் ஆரம்பித்த பிறகு, அ.தி.மு.க-வின் ஒரு பிரிவை பா.ஜ.க கையிலெடுத்தது. சில காலம் கழித்து, பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றிணைந்தார்கள். அப்போது இரண்டு பேரையும் பா.ஜ.க கையிலெடுத்துவிட்டது.

டி.டி.வி.தினகரன் அச்சுறுத்தப்பட்டார். 48 நாள்கள் சிறைவாசத்துக்குப் பிறகு தினகரனும் அமைதியாகிவிட்டார். நிர்பந்தங்களுக்கு ஒப்புக்கொள்ளாததற்கான விளைவை சசிகலா சந்தித்தார். ஆனாலும், பா.ஜ.க-வைக் கண்டு அவர் பயப்படுவதாகத் தெரியவில்லை. இன்றைக்கு பா.ஜ.க என்கிற சக்தியை எதிர்ப்பவராகவும் அ.தி.மு.க தொண்டர்களை அரவணைத்துச் செல்பவராகவும் சசிகலா இருக்கிறார் என்று பார்க்கிறேன்” என்றார் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்.

பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் போன்றவர்களின் சசிகலா பற்றிய இந்த மதிப்பீடு உண்மையாக இருக்கும்பட்சத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவோ, பின்பாகவோ அ.தி.மு.க-வுக்குள் சசிகலாவின் தாக்கம் பெரிய அளவுக்கு இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தனியரசு தலைமையிலான கொங்கு இளைஞர் பேரவை இடம்பெற்றது. அதன் காரணமாக, கடந்த பத்தாண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக தனியரசு இருந்துவருகிறார். அ.தி.மு.க-வும் அ.ம.மு.க-வும் ஒன்றாக இணைய வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்துபவராக இருக்கும் தனியரசு, `அ.தி.மு.க - அ.ம.மு.க உட்கட்சி விவகாரங்களில் பா.ஜ.க தலையிடுகிறது’ என்ற விமர்சனத்தை முன்வைக்கிறார்.

சட்டமன்ற உறுப்பினர் தனியரசுவிடம் பேசினோம். ``அ.தி.மு.க மீது பா.ஜ.க ஆதிக்கம் செலுத்துகிறது என்ற விமர்சனம் கற்பனையான ஒன்றல்ல. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடைபெற்றுவரும் ஏராளமான சம்பவங்களே அதற்கு சாட்சி. அம்மா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வை ஒழுங்குபடுத்துவதில் பா.ஜ.க-வின் பங்களிப்பு என்னவென்பதைப் பார்க்க வேண்டும். அதில், ஆடிட்டர் குருமூர்த்தியின் பங்கு என்ன, அவர் என்னவெல்லாம் பேசினார் என்பதையும் பார்க்க வேண்டும்.

ஜெயலலிதா நினைவிடத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கியதன் பின்னணியில் யார் இருந்தார்கள்... முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் அன்றைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் சேர்த்துவைத்த சம்பவம், அ.தி.மு.க தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, டி.டி.தினகரன் சிறை சென்ற சம்பவம், தலைமைச்செயலகத்தில் ரெய்டு என அனைத்துமே உலகம் பார்த்த சம்பவங்கள்தான். பா.ஜ.க எப்படியெல்லாம் தன் அதிகாரத்தைச் செலுத்தி, அ.தி.மு.க-வை ஒழுங்கு செய்தது என்பது தமிழ்நாட்டிலுள்ள ஒரு குழந்தைக்குக்கூட தெரியும்.

தனியரசு
தனியரசு

அ.தி.மு.க-வும் அ.ம.மு.க-வும் பா.ஜ.க விரும்பினால் சேருவார்கள்; பா.ஜ.க விரும்பாவிட்டால் சேர மாட்டார்கள் என்பது கசப்பான உண்மையாக இருக்கிறது. அ.தி.மு.க-வில் அதன் போக்கு, அதன் உறுதித்தன்மை, அதன் பலவீனம், அதன் எதிர்காலம் என எல்லாமே பா.ஜ.க-வின் நடவடிக்கைகளைப் பொறுத்து இருக்கும். அ.தி.மு.க-வின் முழு மூளையும் பா.ஜ.க-தான். தனியான முடிவெடுக்கிற, செயல்படுகிற ஆளுமைகள் அ.தி.மு.க-வில் இப்போது இல்லை. அந்தச் சூழலை பா.ஜ.க பயன்படுத்துகிறது.

பா.ஜ.க மட்டுமல்ல, மத்தியில் காங்கிரஸ் அதிகாரத்தில் இருந்தாலும் இதைச் செய்யும். தி.மு.க-விலிருந்து பிரிந்து அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர் தொடங்குவதற்கு மத்தியில் அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி துணையாக இருந்தது. சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது தி.மு.க ஆட்சியைக் கலைத்தார்கள். தடா, பொடா வழக்குகள் வந்தன. காங்கிரஸ் ஆட்சியில்தான் ஆ.ராசா சிறைக்குப் போனார். எனவே, காங்கிரஸா ,பா.ஜ.க-வா என்று பார்க்க வேண்டியதில்லை. மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் இதைத்தான் செய்வார்கள்.

சசிகலா விடுதலை: ஜெ.நினைவிடத் திறப்பு...  டி.டி.வி.தினகரன் சூளுரைப்பு... பின்னணி என்ன?

அ.தி.மு.க-வில் இருக்கிற அணி முரண்பாடு, தலைமையைக் கைப்பற்றுவதில் இருக்கிற பிரச்னை ஆகியவற்றைப் பயன்படுத்தி அவர்களைப் பிரித்து, அவர்களைப் பயன்படுத்தி, தங்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு அ.தி.மு.க-வையும் ஆட்சியையும் சீரமைக்கிறார்கள். பா.ஜ.க-வை மீறிச் செயல்பட முடியாது என்பதை அனைத்துத் தரப்பு மக்களும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

மோடி
மோடி

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் கட்சியிலிருந்து தினந்தோறும் எம்.எல்.ஏ-க்கள் விலகி பா.ஜ.க-வில் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். இதுபோல, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பா.ஜ.க-வில் இணைந்துகொண்டிருப்பதை இந்தியாவின் பல மாநிலங்களிலும் பார்க்க முடிகிறது. ஆனால், பா.ஜ.க-விலிருந்து யாரும் கட்சி மாறுவதில்லை. அப்படியிருக்கும்போது பா.ஜ.க-வை எதிர்த்து தற்போதைய அ.தி.மு.க தலைமையால் என்ன செய்துவிட முடியும். எனவேதான், பா.ஜ.க-வின் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க-வும் இந்த அரசும் இயங்குகின்றன. இது நாடறிந்த, ஊரறிந்த வெளிப்படையான உண்மை. அதில் ரகசியம் எதுவும் இல்லை” என்றார் தனியரசு.

``ஒரு யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். தினகரனுக்கு எதிராக அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க-வினர் கடுமையாகப் பேசியிருக்கிறார்கள். `மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால் அ.தி.மு.க-வில் தினகரனை சேர்த்துக்கொள்வோம்’ என்றார்கள். அதற்கு, `யார், யாரிடம் மன்னிப்புக் கேட்பது என்பதைக் காலம் முடியும் செய்யும்’ என்று தினகரன் சொல்கிறார். இப்படியாக அவர்கள் மோதிக்கொண்டிருக்கிறார்கள். இப்படியிருப்பவர்களிடம் பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்தியது என்று சொன்னால், அது நம்பும்படியாகவா இருக்கிறது... அது, தவறான தகவல்.''
குமரகுரு

பா.ஜ.க குறித்து வைக்கப்படும் இந்த விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் குறித்து பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான குமரகுருவிடம் பேசினோம்.

``பா.ஜ.க மீதும் பா.ஜ.க தலைவர்கள் மீது வைக்கப்படும் இந்த விமர்சனங்கள் அனைத்தும் எந்தவித அடிப்படையும் ஆதாரமும் இல்லாதவை. அ.தி.மு.க-விலிருந்து பிரிந்திருந்த ஓ.பன்னீர்செல்வம், டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்து அ.தி.மு.க-வில் இணைவதாகத் தெரிவித்து, அதில் பிரதமரின் கருத்து என்ன என்றும் கேட்டார். அப்போது, தமிழக மக்களின் நலன் கருதியும், இன்னொரு தேர்தல் உடனடியாக வேண்டாம் என்பதைக் கருத்தில் கொண்டும், ‘தாராளமாகச் சேர்ந்துகொள்ளுங்கள்... ஆட்சியைச் சிறப்பாக நடத்துங்கள்’ என்று மோடி சொன்னார். அப்போது அந்த இடத்தில் இருந்த அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும் இதைச் சொல்லியிருக்கிறார்கள். அதேபோல, `அ.தி.மு.க-வில் சேர்ந்துகொள்ளலாமா...’ என்று பா.ஜ.க தலைவர்களிடம் வந்து டி.டி.வி.தினகரன் கருத்து கேட்டால், `தாராளமாக சேருங்கள்’ என்றுதான் சொல்வார்கள். ஆனால், இப்போது அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதுதான் உண்மை.

குமரகுரு
குமரகுரு

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரின் கைகளையும் பிடித்து அன்றைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் சேர்த்துவைத்தார். அது ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு, பா.ஜ.க மீது பல்வேறு செய்திகளை இன்றுவரை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர், இன்னொரு தேர்தல் வேண்டாம்... நல்லபடியாக ஆட்சி நடக்கட்டும் என்ற நல்லெண்ணத்துடன் செயல்படுவதில் என்ன தவறு இருக்க முடியும். `ஒன்று சேராதீர்கள்... கட்சி அழிந்துபோகட்டும்’ என்று யாராவது சொல்வார்களா... ஜெயலலிதா காலத்திலிருந்தே அ.தி.மு.க எங்களின் தோழமைக் கட்சி. அந்தக் கட்சி மீது எப்போதும் எங்களுக்கு ஒரு மென்மையான போக்கு இருக்கும். பா.ஜ.க-வுக்கு எதிராக இதுபோல பரப்பப்படும் செய்திகளுக்குப் பின்னால் தி.மு.க இருக்கிறது என்பதை எங்களால் உறுதியாகச் சொல்ல முடியும்” என்றார் குமரகுரு.

`தமிழகத்தில் தாமரை மலரும்’ என்று பா.ஜ.க-வினர் நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், `அ.தி.மு.க-வின் தோளில் அமர்ந்துகொண்டு தமிழகத்தில் தாமரையை மலரச்செய்ய முயற்சி நடக்கிறது’ என்ற விவாதம் நாள்தோறும் நடந்துகொண்டிருக்கிறது. அதிகாரத்தை ருசித்துக்கொண்டிருப்பவர்களின் கவனமெல்லாம் எங்கேயோ இருக்கிறது. ஆனால், அ.தி.மு.க தொண்டர்கள் என்ன உணர்வுடன் இருக்கிறார்கள் என்பது முக்கியம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு