அரசியல்
அலசல்
Published:Updated:

அ.தி.மு.க - பா.ஜ.க மோதல்! - க்ளைமாக்ஸை நெருங்கும் நான்காண்டு நாடகம்

எடப்பாடி பழனிசாமி - மோடி
பிரீமியம் ஸ்டோரி
News
எடப்பாடி பழனிசாமி - மோடி

‘கூட்டணி முறிந்தால் கவலை இல்லை. அது பா.ஜ.க-வுக்குத்தான் நஷ்டம்’ என அன்வர் ராஜா போன்ற அ.தி.மு.க சீனியர்கள் பேச ஆரம்பித்துவிட்டனர்.

அமைச்சர்கள் மத்தியில் கொரோனா பரவிய நேரம் அது. மியாட், அப்போலோ என அடுத்தடுத்து தனியார் மருத்துவமனைகளில் அமைச்சர்கள் அட்மிட் ஆனதைப் பார்த்து தமிழகம் விக்கித்து நின்றது.

அந்நேரத்தில், ‘‘அரசு மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு உயரிய சிகிச்சை அளிக்கப்படும்போது, அமைச்சர்கள் ஏன் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுக்க வேண்டும்?’’ என குண்டு வீசியவர் பா.ஜ.க மாநிலத் தலைவரான எல்.முருகன். கூட்டணிக் கட்சியிடமிருந்து இப்படியொரு தாக்குதல் வரும் என அ.தி.மு.க-வே எதிர்பார்க்கவில்லை. அந்த மோதல் இன்று, ‘அ.தி.மு.க தேர்தலில் ஜெயிக்காது’ எனச் சாபமிடும் அளவுக்கு வந்து நிற்கிறது.

கடந்த வாரம் கோவை, சுந்தராபுரம் பகுதியில் பெரியார் சிலைமீது காவிச் சாயம் ஊற்றப்பட்டது. அதற்கு அடுத்தநாளே நான்கு கோயில்களின் வாசல்களில் டயர்கள் எரிக்கப்பட்டு கோயில் களின் உடைமைகளும் சேதப்படுத்தப்பட்டன. இந்தப் புகாரைத் தீவிரமாக விசாரிக்கச் சொல்லி கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகாரளித்த பா.ஜ.க மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ‘‘தி.மு.க செய்த தவற்றை இப்போது அ.தி.மு.க-வும் செய்கிறது. உண்மைக் குற்றவாளிகளைப் பிடிக்கவில்லையென்றால் நாங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தை நாடுவோம். இந்துக்களுக்கு எதிராகக் கருத்து கூறுபவர்கள்மீது முதல்வர் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார். இது அ.தி.மு.க-வுக்குப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். தேர்தலில் ஜெயிக்க முடியாது’’ என்று சீறியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பா.ஜ.க., அ.தி.மு.க இரு கட்சிகளும் அவ்வப்போது உரசிக்கொள்வதும், பிறகு கட்டிப்பிடித்துக் கொள்வதுமாக நடந்த ஒரு நாடகத்தின் இறுதிக் காட்சிகள் நெருங்கிவிட்டதாகக் கூறுகிறது கமலாலயம். சமீபத்தில் டெல்லி சென்றிருந்த பா.ஜ.க தலைவர் ஒருவர், ‘‘இனியும் அ.தி.மு.க-வைக் கூட்டணிக்குள் வைத்துக்கொண்டு, அவர்களின் ஊழல் மூட்டைகளையும் நாம் சுமக்க வேண்டுமா?’’ என்று டெல்லி தலைமையிடம் நேரடியாகவே கேட்டுவிட்டாராம். கூட்டணி உடைவதாகக் கிளப்பிவிட்டு சீட் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக நடத்தும் உருட்டல் மிரட்டலோ என்ற சந்தேகத்துடன் கமலாலயத்தை ரவுண்ட் அடித்தோம். அ.தி.மு.க-வுடனான மோதலை மிகவும் சீரியஸாகவே பேசுகிறார்கள்.

ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் திறக்கப் பட்டபோது, ‘போருக்கு நடுவில் கேளிக்கையா?’ என்று தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனிடமிருந்து அறிக்கை வந்து விழுந்தது. ‘தேவேந்திர குல வேளாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை அனுப்ப வேண்டும்’ என்று அடுத்த குண்டை முருகன் வீசினார். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த அ.தி.மு.க., ‘‘வரும் தேர்தலில் பா.ஜ.க அதிக இடத்தில் வெற்றி பெற்று, கூட்டணி அமைச்சரவையில் பங்குபெறும்’’ என்று முருகன் பேசியதை ரசிக்கவில்லை. இந்த மோதல் நாளுக்கு நாள் சூடேறுகிறது.

பா.ஜ.க கூட்டணி எதற்கு?

அ.தி.மு.க-விலும் இதே மனநிலைதான். ‘கூட்டணி முறிந்தால் கவலை இல்லை. அது பா.ஜ.க-வுக்குத்தான் நஷ்டம்’ என அன்வர் ராஜா போன்ற அ.தி.மு.க சீனியர்கள் பேச ஆரம்பித்துவிட்டனர். எடப்பாடியிடம் பேசிய கட்சியின் சீனியர்கள், ‘‘பா.ஜ.க.வுக்கு எத்தனை தொகுதியில் செல்வாக்கு இருக்கிறது... அவர்கள் வேட்பாளரை நிறுத்தினால்கூட நாம்தான் அவர்களுக்குப் பணியாற்ற வேண்டும். அவர்களுக்குச் செலவும் செய்ய வேண்டும். இப்போது கூட்டணி அமைச்சரவை வரைக்கும் பேச ஆரம்பித்துவிட்டனர். இப்படியேவிட்டால் எதிர்காலத்தில் வட மாநில நிலை நமக்கும் வந்துவிடும். அவர்களைக் கழற்றிவிட்டுவிட்டு தேர்தலைச் சந்திப்போம்’’ என்று சொல்லியிருக்கின்றனராம்.

தமிழகத்தில் கூட்டணி அரசு என்பதற்குச் சாத்தியமே இல்லை. 2011-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் ஜெயலலிதா மறைமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சோனியா தரப்பில், ‘‘கூட்டணி மந்திரி சபைக்கு ஒப்புக்கொண்டால் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கத் தயார்’’ என்றனர். அதற்கு ஜெயலலிதா, ‘‘அப்படிக் கூட்டணி மந்திரிசபை அமைத்துத்தான் நான் முதல்வராக வேண்டுமென்றால், அதற்கு நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துவிட்டுப் போகிறேன்’’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டார். 2006 சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்த தி.மு.க., மைனாரிட்டி அரசாக இருந்தது. இருப்பினும், தி.மு.க-வுக்கு ஆதரவளித்த காங்கிரஸ் கட்சியை அமைச்சரவையில் கருணாநிதி சேர்த்துக்கொள்ளவில்லை. இந்த வரலாற்றையெல்லாம் நினைவுபடுத்தி எடப்பாடியிடம் பா.ஜ.க-வை கழற்றிவிட தூபம் போடப்படுகிறது.

சி.பி.ராதாகிருஷ்ணன் - அன்வர் ராஜா - முருகன்
சி.பி.ராதாகிருஷ்ணன் - அன்வர் ராஜா - முருகன்

டார்கெட் காங்கிரஸ்

‘சரி, இவ்வளவு நாள் அமைதியாக இருந்துவிட்டு இப்போது ஏன் அ.தி.மு.க-வைத் தாக்குகிறீர்கள்?’ கேள்வியுடன் பா.ஜ.க-வின் மூத்த தலைவர் ஒருவரைச் சந்தித்தோம். ‘‘இது காங்கிரஸுக்கு வைத்த குறி’’ என்றபடி பேசத் தொடங்கினார் அவர். ‘‘கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு ஒன்பது

எம்.பி-க்கள் கிடைத்தனர். இது டெல்லி பா.ஜ.க மேலிடத்துக்குப் பிடிக்கவில்லை. தி.மு.க மீது குதிரை சவாரி செய்தே இத்தனை இடங்களை அவர்கள் பிடித்துள்ளதாகக் கருதுகிறார்கள். உண்மையும் அதுதான். கடந்த 2011, 2016 தேர்தல்களில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சி, அதிகப்படியான தொகுதிகளில் போட்டியிட்டு ஒற்றை இலக்கத்தில்தான் வெற்றி பெற்றது. ‘2016-ல் காங்கிரஸுக்கு ஒதுக்கிய இடங்களில் நாமே போட்டியிட்டிருந்தால் இந்நேரம் ஆட்சியில் இருந்திருக்கலாம்’ என்கிற எண்ணம் தி.மு.க-விலேயே இருக்கிறது.

அ.தி.மு.க-வுடன் இருப்பதால், வரும் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எந்த லாபமும் இல்லை. அவர்களிடமிருந்து பிரிந்தால், அரசுக்கு எதிரான இந்து வாக்குகளை எங்களால் ஒருங்கிணைக்க முடியும். எங்களுக்கென்று வாக்கு வங்கியை உருவாக்க முடியும். மேலும், நாங்கள் கழன்றுகொண்டால், அ.தி.மு.க-வின் பிரமாண்ட கூட்டணி பிம்பம் உடையும். தானாக தி.மு.க-வுக்கு பெரிய எதிர்ப்பு என்பது இருக்காது. காங்கிரஸ் கட்சிக்குக் கொடுக்கக்கூடிய சீட் எண்ணிக்கையை தி.மு.க வெகுவாகக் குறைத்துவிடும். தி.மு.க தலைமை உறுதியாக இருந்தால், காங்கிரஸைக் கழற்றிவிட்டுவிட்டுக்கூட தேர்தலைச் சந்திக்கலாம். இந்தச் சூழலை உருவாக்கத்தான் அ.தி.மு.க-வைத் தாக்குகிறோம்’’ என்று கிறுகிறுக்கவைத்தார்.

மிஷன் 2024

‘‘இது ஒருவகையில் தற்கொலை முயற்சிதானே... இதனால் பா.ஜ.க-வுக்கு என்ன லாபம் ஏற்படப் போகிறது... தி.மு.க-வின் கரத்தை மறைமுகமாக வலுப்படுத்துகிறீர்கள்தானே?’’ என்றோம் விடாப்பிடியாக. அதற்கு அவர், ‘‘இது ஆடுபுலி ஆட்டம். ஒவ்வொரு காயாகத்தான் வெட்ட முடியும். கடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க-வுக்குக் கிடைத்த வாக்குகள் மூன்று சதவிகிதத்தைக்கூடத் தாண்டவில்லை. ஆனால், 2011-ல் 9.3 சதவிகிதமும், 2016-ல் 6.5 சதவிகித வாக்குகளையும் காங்கிரஸ் பெற்றுள்ளது. இவை தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்ததால் காங்கிரஸ் கட்சிக்கு விழுந்த வாக்குகள். இதை உடைப்பதுதான் எங்கள் திட்டம். இதனால் தி.மு.க லாபமடைந்தாலும் எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை.

எடப்பாடி பழனிசாமி - மோடி
எடப்பாடி பழனிசாமி - மோடி

கந்த சஷ்டி கவசம், ஆண்டாள் விவகாரம், திராவிடக் கட்சிகள் மீதான மக்களின் பார்வை மாற்றம் போன்றவற்றால் இந்துக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், அ.தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிட்டு, ஆறு சதவிகிதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதுதான் பா.ஜ.க-வின் நோக்கம். காங்கிரஸ் கட்சியை தி.மு.க-விடமிருந்து பிரிப்பதன் மூலமாக, அவர்களின் பலத்தை 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு தரைமட்டமாக்க முடியும். டெல்லியின் டார்கெட் 2024 தேர்தல்தான் என்பதால், அப்போது அமையும் கூட்டணியில் அதிக சீட்களைப் பெற வாக்கு வங்கி அவசியம். இதற்காகத்தான் தனித்துச் சென்றுவிடலாம் என முடிவெடுத்திருக்கிறது பா.ஜ.க தலைமை’’ என்றார்.

அ.தி.மு.க-பா.ஜ.க இரு தரப்பினரின் நான்காண்டுகால மோதலைப் பார்க்கும்போது, ‘டேய்... நீ யாருன்னு எனக்குத் தெரியும்... நான் யாருன்னு உனக்குத் தெரியும்... நாம ரெண்டு பேரும் யாருங்கிறது இந்த ஊருக்கே தெரியும்’’ என்று ‘கரகாட்டக்காரன்’ படத்தில் வரும் செந்தில்-கவுண்டமணி காமெடிதான் நினைவுக்கு வருகிறது.

அமுதா என்ட்ரி ஏன்?

வரும் செப்டம்பரில் பீகாரிலும், அடுத்த வருடம் ஏப்ரலில் மேற்குவங்கத்திலும் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்த மாநிலங்களின் அரசியல் அப்டேட்கள், மத்திய அரசின் திட்டங்கள் சென்று சேர்ந்த புள்ளிவிவரங்களைத் துல்லியமாக அறிந்துகொள்ள, ஓய்வுபெற்ற இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தன்னுடைய ஆலோசகர்களாக மோடி கடந்த பிப்ரவரி மாதம் நியமித்துக்கொண்டார். பீகார் கேடரில் பணிபுரிந்த அமர்ஜீத் சின்ஹா, மேற்குவங்க கேடரில் பணியாற்றிய பாஸ்கர் குல்பே இருவரும் அப்டேட்களை பிரதமருக்குத் துல்லியமாக அளிக்கிறார்கள். அந்த வகையில்தான் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை மையப்படுத்தி, அமுதா ஐ.ஏ.எஸ் பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் உலா வருகிறது.

அமுதா
அமுதா

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, தேர்தல் ஆணையம் எனப் பல துறைகளில் ரவுண்ட் வந்த அமுதா, `நேர்மையானவர்’ எனப் பெயர் பெற்றவர். உணவுப் பாதுகாப்புத்துறையில் இவர் பணியாற்றியபோது, தமிழகத்தில் குட்கா விற்கும் கும்பலை ஒழித்துக்கட்டும் பணியில் தீவிரமானார். இதுவே அவருக்கு தலைவலியாக மாறியது. ஏப்ரல் 2019-ல் மத்திய அரசுப் பணிக்கு கிளம்பிய அமுதா, உத்தரகாண்ட் மாநிலம் முசோரியிலுள்ள அதிகாரிகளுக்கான நிர்வாகப் பயிற்சி மையத்தில் (நேஷனல் அகாடமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன்) பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அப்போது, குஜராத்தைச் சேர்ந்தவரும், பிரதமர் மோடியின் அதிகாரிகள் லாபியில் உள்ளவருமான ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் அடுத்தகட்ட பயிற்சிக்காக வந்திருக்கிறார். அவர்தான் அமுதாவின் பணிச் செயல்பாடு பற்றி அறிந்து பிரதமர் அலுவலகத்துக்குத் தகவல் சொல்லியிருக்கிறார் என்கிறார்கள்.

பிரதமரின் அலுவலகத்துக்கும் மத்திய அரசின் துறைகளுக்கும் பாலமாகச் செயல்படும் வகையில் ஐந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வரையில் நியமிப்பார்கள். அவர்களில் ஒருவராக அமுதா இனி செயல்படுவார். பிரதமர் மோடியின் அலுவலகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த

டி.வி.சோமநாதன் ஐ.ஏ.எஸ் உயர் அதிகாரியாகப் பணியாற்றினார். அவருக்குப் பிறகு, பிரதமர் அலுவலகத்துக்குப் போகும் இரண்டாவது தமிழக அதிகாரி அமுதா. ‘பிரதமர் மோடி அவ்வளவு எளிதில் யாரையும் நம்பமாட்டார். தனக்கு நம்பிக்கையான ரிப்போர்ட்களை அளிப்பதற்காகவே அமுதாவைத் தன் அலுவலகத்துக்குள் அவர் கொண்டுவந்தார்’ என்று கூறப்படுகிறது.