Published:Updated:

எடப்பாடி - ஸ்டாலின் புது சதுரங்கம்! - 13 அமைச்சர்கள்.. 80 வழக்குகள்...

எடப்பாடி - ஸ்டாலின் புது சதுரங்கம்!
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி - ஸ்டாலின் புது சதுரங்கம்!

3 தி.மு.க அமைச்சர்கள்மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதை யாராவது கண்டுகொள்கிறீர்களா?”

எடப்பாடி - ஸ்டாலின் புது சதுரங்கம்! - 13 அமைச்சர்கள்.. 80 வழக்குகள்...

3 தி.மு.க அமைச்சர்கள்மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதை யாராவது கண்டுகொள்கிறீர்களா?”

Published:Updated:
எடப்பாடி - ஸ்டாலின் புது சதுரங்கம்!
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி - ஸ்டாலின் புது சதுரங்கம்!

அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோது, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எட்டு அமைச்சர்கள்மீது 97 பக்கங்கள்கொண்ட ஊழல் புகாரை அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் கொடுத்தது தி.மு.க. 2021 சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்காக, தான் சென்ற இடமெல்லாம் அ.தி.மு.க அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களைப் பட்டியலிட்டார் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், இந்நாள் முதல்வருமான ஸ்டாலின். தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அதிரடித்தது. கொடநாடு வழக்கும் சூடுபிடித்திருக்கிறது. இந்தச் சூட்டிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக, தி.மு.க-வைத் திருப்பியடிக்கத் தயாராகிறது அ.தி.மு.க. ‘ஊழல் புகாருக்குள்ளான தி.மு.க அமைச்சர்களின் பட்டியலோடு ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவிருக்கிறார்’ என்று பரவும் தகவல்தான் அரசியல் வட்டாரத்தைக் கலங்கடித்திருக்கிறது!

சமீபத்தில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “13 தி.மு.க அமைச்சர்கள்மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதை யாராவது கண்டுகொள்கிறீர்களா?” என்று ஊடகங்களில் சீறியிருந்தார். ‘எடப்பாடி பதிலடி கொடுக்கத் தயாராகிவிட்டதைத்தான் அந்தச் சீற்றம் காட்டுகிறது’ என்கிறது அ.தி.மு.க வட்டாரம். ‘என்ன திட்டத்தில் இருக்கிறார் எடப்பாடி?’ விவரமறிய அவருக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம்...

எடப்பாடி - ஸ்டாலின் புது சதுரங்கம்! - 13 அமைச்சர்கள்.. 80 வழக்குகள்...

13 அமைச்சர்கள்மீது லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்குகள்!

“அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள்மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பதாகச் சொல்லும் தி.மு.க., தனது அமைச்சரவையில் இருப்பவர்கள் மீதே ஊழல் புகார்கள் நிலுவையில் இருப்பதை மறைக்கிறது. அதை வெளிச்சம் போட்டுக்காட்ட தீவிரமாகியிருக்கிறார் எடப்பாடி. தி.மு.க அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எஸ்.ரகுபதி, கே.ஆர்.பெரியகருப்பன், தா.மோ.அன்பரசன், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி ஆகிய 13 அமைச்சர்கள்மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

இதில், துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி ஆகிய தி.மு.க சீனியர்கள் மீது அ.தி.மு.க-வின் 2001-06, 2011-16 ஆட்சிக்காலத்தில் வழக்குகள் போடப்பட்டுள்ளன. லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகள் இல்லாத ஒருவரைத்தான் சட்டத்துறைக்கு அமைச்சராக்குவது மரபு. ஆனால், 2002-ல் போடப்பட்ட வழக்கால் சிக்கலைச் சந்தித்திருக்கும் அமைச்சர் எஸ்.ரகுபதியை, சட்டத்துறைக்கு அமைச்சராக்கியிருக்கிறார் ஸ்டாலின். இதில், மற்றொரு கூத்து என்னவென்றால், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி மீது தி.மு.க-வினர் கொடுத்த புகார்கள்தான் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்காக மாறியிருக்கின்றன.

2015, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில், வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி மோசடி செய்துவிட்டதாக செந்தில் பாலாஜி மீது மூன்று வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இவற்றில், 2018-ல் போடப்பட்ட வழக்கை ரத்துசெய்வதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மீதியுள்ள வழக்குகள், எம்.எல்.ஏ., எம்.பி-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன. இந்த வழக்குகளில் புகார்தாரர்களின் வாக்குமூலத்தை அக்டோபர் 5-ம் தேதி நேரில் வந்து வாங்கிக்கொள்ளும்படி செந்தில் பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவ்வளவு சிக்கல் உடையவரைத்தான், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறைகளுக்கு அமைச்சராக்கியிருக்கிறார் ஸ்டாலின்.

அமைச்சர் மா.சு மீது நில மோசடி வழக்கு!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகள் இல்லையென்றாலும், நில மோசடி வழக்கு நிலுவையில் இருக்கிறது. ‘சென்னை கிண்டி தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சிட்கோ நிலத்தை, தன் மனைவி காஞ்சனா பெயருக்கு சட்டவிரோதமாக மாற்றிக்கொண்டார்’ என்பது மா.சுப்பிரமணியன் மீதிருக்கும் குற்றச்சாட்டு. இப்படிப்பட்டவர்தான் இன்றைய சுகாதாரத்துறை அமைச்சர். எங்களை ஊழல்வாதிகள் என்று குற்றம்சாட்டுவதற்கு தி.மு.க-வுக்கு என்ன தகுதி இருக்கிறது?

எடப்பாடி - ஸ்டாலின் புது சதுரங்கம்! - 13 அமைச்சர்கள்.. 80 வழக்குகள்...

மிரட்டும் கொலை மிரட்டல் வழக்குகள்!

தங்கள்மீது கொலை மிரட்டல், கொலை முயற்சிப் புகார்கள் உள்ளவர்களும் அமைச்சர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி, எ.வ.வேலு, சாமிநாதன், அனிதா ராதாகிருஷ்ணன், பி.மூர்த்தி, எஸ்.எஸ்.சிவசங்கர், பி.கே.சேகர் பாபு, செந்தில் பாலாஜி, மனோ தங்கராஜ், நாசர் ஆகியோர்மீது ஐ.பி.சி 506 பிரிவின் கீழ், மிரட்டல் வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. இதுபோக, பெரியகருப்பன் மீது கொலை முயற்சி வழக்கு நிலுவையில் இருக்கிறது. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீது 2012-ல் போடப்பட்ட ஒரு கொலை வழக்கும் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏப்ரல், 2012-ல் அவர் கைதுசெய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையானார். இப்படிப்பட்டவர்களை வைத்துத்தான் தன் அமைச்சரவையை அலங்கரித்திருக்கிறார் ஸ்டாலின். இவர்கள்தான் இப்படியென்றால், சபாநாயகர் அப்பாவு மீது நில அபகரிப்பு, நீர்நிலை ஆக்கிரமிப்பு உள்ளிட்ட வழக்குகள் இருக்கின்றன. நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக அப்பாவு மீது தொடரப்பட்ட வழக்கில், ஆக்கிரமிப்பை அகற்றுமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஆனால், இன்னும் அந்த ஆக்கிரமிப்பு அகற்றப்படாமலேயே இருக்கிறது.

தி.மு.க அமைச்சரவையில் இருப்பவர்களில், அதிகமாக மோசடிக் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் திண்டுக்கல் ஐ.பெரியசாமியும், செந்தில் பாலாஜியும்தான். இருவரின் மீதும் தலா மூன்று 420 பிரிவு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களைத் தவிர, துரைமுருகன், சாமிநாதன், ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் மீதும் 420 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த வழக்குகளின் விவரங்களையெல்லாம் கையிலெடுக்கும் எடப்பாடி பழனிசாமி, விரைவில் ஆளுநரைச் சந்தித்துப் புகாரளிக்கவிருக்கிறார். ‘எங்கள்மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்கு பதிகிறார்கள். ஆனால், இப்போதிருக்கும் அமைச்சர்களில் 13 பேர் மீது ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வெளிவரும் வரை, அந்த அமைச்சர்களைத் தகுதிநீக்கம் செய்ய நீங்கள் முதல்வருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்’ என்று கவர்னரிடம் கேட்கவிருக்கிறார் எடப்பாடி. மக்கள் பிரதி நிதித்துவச் சட்டப்படி, அமைச்சரவை மீதான புகார்களை விசாரிக்க ஆளுநரின் ஒப்புதல் அவசியம். அந்த வகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி மூலமாக தி.மு.க-வுக்குக் குடைச்சல் கொடுக்கத் தயாராகிறார் எடப்பாடி பழனிசாமி” என்றனர்.

எடப்பாடி - ஸ்டாலின் புது சதுரங்கம்! - 13 அமைச்சர்கள்.. 80 வழக்குகள்...

ஆக்‌ஷனுக்குத் தயாராகும் ஆளுநர்?

“லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகள் ஒருபக்கம் தி.மு.க அமைச்சர்களை இறுக்கும் சூழலில், அமலாக்கத்துறையும் தன் பங்குக்குக் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. சொத்துக்குவிப்பு புகார் தொடர்பாக, அமலாக்கத்துறை அளித்திருக்கும் நோட்டீஸுக்கு, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கே.என்.நேரு, கீதா ஜீவன் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளித்திருக்கிறார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜி மட்டும் இன்னும் ஆஜராகவில்லை. அவருக்கு மூன்றாவது முறையாக நோட்டீஸ் அனுப்பத் தயாராகிறது அமலாக்கத்துறை. இந்தக் குடைச்சலுடன், ஆளுநர் ஆர்.என்.ரவியும் தன் பங்குக்குக் குடைச்சலைக் கொடுத்தால் தி.மு.க-வின் பாடு திண்டாட்டம்தான்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

“சமீபத்தில் தமிழக காவல்துறை அதிகாரிகளிடம் பேசிய ராஜ்பவன் தரப்பு, அமைச்சர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பதைச் சுட்டிக்காட்டிப் பேசியிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக டெல்லிக்குச் சென்றிருக்கும் ஆளுநர் ரவி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசியிருக்கிறார். அப்போது, தி.மு.க அமைச்சர்கள் மீதிருக்கும் புகார்கள் குறித்தும் அவர்கள் விவாதிப்பார்கள். விரைவில் ஆக்‌ஷன் ஆரம்பமாகும்” என்கிறது பா.ஜ.க வட்டாரம்.

“ஸ்டாலினால் செய்ய முடியுமா?”

தி.மு.க அமைச்சர்கள் மீதிருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை புகார்கள் தொடர்பாக நம்மிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் இருந்தபோது, அ.தி.மு.க அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளிக்கும்போதெல்லாம், ‘தார்மிக அடிப்படையில் அ.தி.மு.க அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்’ என்று கூறிவந்தார். இப்போது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகள் நிலுவையிலுள்ள நபர்களைத் தன்னுடைய அமைச்சரவையிலேயே வைத்திருக்கிறார். குற்றம்சாட்டப்பட்டுள்ள அமைச்சர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளெல்லாம் நீதிமன்றத்தில் இருக்கின்றன. அவை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்டவை அல்ல. அவர்கள் தவறு செய்யவில்லையென்றால், நீதிமன்றத்தில் அதை நிரூபிக்கட்டும். அதுவரை அவர்களை அமைச்சரவையிலிருந்து நீக்கி ஒரு முன்னுதாரணமாக ஸ்டாலின் மாற வேண்டும். அவரால் செய்ய முடியுமா?” என்றார்.

எடப்பாடி - ஸ்டாலின் புது சதுரங்கம்! - 13 அமைச்சர்கள்.. 80 வழக்குகள்...

பெரிய தாக்கம் இருக்காது!

தி.மு.க அமைச்சர்கள் மீதிருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகள் குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “தி.மு.க அமைச்சர்கள் மீதான புகார்கள் குறித்து இத்தனை ஆண்டுகள் ஆட்சியிலிருந்த அ.தி.மு.க ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? தி.மு.க அமைச்சர்கள் மீது அ.தி.மு.க தற்போது புகாரளித்தால், அது ஒரு நாள் பத்திரிகைச் செய்தியாகத்தான் இருக்குமே தவிர, வேறு எந்தத் தாக்கமும் இருக்காது. புகார் அளிப்பதென்பது வேறு. நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு தொடர்பாகப் பேசுவதென்பது வேறு. நாங்கள் அ.தி.மு.க அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அப்போது புகார் மனுக்கள்தான் கொடுத்தோம். ஆனால், தி.மு.க அமைச்சர்கள் மீதான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. அவை குறித்துப் பேசுவதென்பது நீதிமன்ற நடவடிக்கையில் தலையிடுவதாகிவிடும். இதுகூட அ.தி.மு.க-வுக்குத் தெரியவில்லை என்பது அவர்களின் அரசியல் போதாமையைத்தான் காட்டுகிறது” என்றார்.

தி.மு.க அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்குகளையும் சேர்த்து சுமார் 80 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இருந்தாலும், தி.மு.க இவ்வளவு தைரியமாக இருப்பதற்குச் சில சட்ட நுணுக்கங்களும் காரணமாக முன்வைக்கப்படுகின்றன. நம்மிடம் பேசிய தி.மு.க வழக்கறிஞர் ஒருவர், “இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 164-ன் படி, முதல்வரை நியமிக்கத்தான் ஆளுநருக்கு அதிகாரமிருக்கிறதே தவிர, அமைச்சர்களை நீக்குவதற்கும், நியமிப்பதற்கும் ராஜ்பவனுக்கு அதிகார மில்லை. சொத்துக்குவிப்பு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த போதுதான் ஜெயலலிதா முதல்வராக இருந்தார். டான்சி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பின்னரும், முதல்வராக அவர் பதவியேற்றார். அதை உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டது. இவ்வளவு தவறான முன்னுதாரணங் களைத் தங்கள் மீதே வைத்துக்கொண்டு, அ.தி.மு.க-வினர், தி.மு.க-வைக் குற்றம் சாட்டுவது வேடிக்கையாக இருக்கிறது. குற்றச்சாட்டு நிரூபணம் ஆகும்வரை, அமைச்சர்கள் தங்கள் பணியைத் தொடர்வதில் சட்டச் சிக்கல் ஏதுமில்லை” என்றார்.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் எதிர்க் கட்சித் தலைவராக ஸ்டாலின் குடைச்சல் கொடுத்ததைப்போலவே, தற்போது எடப்பாடி திருப்பிக் கொடுக்கத் திட்டமிடுகிறார். ‘எங்கள்மீது குற்றம் சுமத்துகிறீர்களே, நீங்கள் யோக்கியர்களா?’ என்ற கேள்வியோடு நிலுவை வழக்குகளை வைத்துப் புதுச் சதுரங்கம் ஆடத் தயாராகிறார் எடப்பாடி. இதன் மூலம், கொடநாடு வழக்கு, முன்னாள் அமைச்சர்கள்மீது தொடுக்கப்படும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைகளிலிருந்து ‘டேக் டைவர்ஷன்’ போடுவதுதான் அவரின் திட்டம். இதற்கு ஸ்டாலின் எப்படி பதிலளிக்கப் போகிறார் என்பது, ராஜ்பவன் கேள்வி கேட்கும்போது தெரிந்துவிடும்!

****

யார் மீதெல்லாம் வழக்குகள் இல்லை?

தி.மு.க அமைச்சரவையைப் பொறுத்தவரை தற்போது வழக்குகளே இல்லாதவர்களும் இருக்கிறார்கள். ராஜ கண்ணப்பன், கே.ராமச்சந்திரன், எஸ்.முத்துசாமி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி.கணேசன், சி.வி.மெய்யநாதன், ஆர்.சக்கரபாணி, எஸ்.முத்துசாமி, மஸ்தான் ஆகியோர்மீது (கொரோனா ஊரடங்கு விதிமீறல் தொடர்பான வழக்குகள் தவிர்த்து) வழக்குகள் ஏதுமில்லை!