Published:Updated:

ஆறு பேர் விடுதலை: ``திமுக ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப்போட்டது கிடையாது!" - ஜெயக்குமார் சாடல்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

``உண்மையிலேயே அ.தி.மு.க மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளுக்குக் கிடைத்த ஒரு வெற்றியாகத்தான் நாங்கள் இதைச் சொல்ல முடியும்." - ஜெயக்குமார்

ஆறு பேர் விடுதலை: ``திமுக ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப்போட்டது கிடையாது!" - ஜெயக்குமார் சாடல்

``உண்மையிலேயே அ.தி.மு.க மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளுக்குக் கிடைத்த ஒரு வெற்றியாகத்தான் நாங்கள் இதைச் சொல்ல முடியும்." - ஜெயக்குமார்

Published:Updated:
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதையடுத்து, மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருக்கிறது. இதை அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்றுவருகின்றனர். இந்த நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ``இது எங்களின் தொடர்முயற்சிக்குக் கிடைத்த வெற்றி. இதில் தி.மு.க ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை" என்று கூறியிருக்கிறார்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ``உச்ச நீதிமன்றம், பேரறிவாளனை முதலில் விடுதலை செய்திருக்கும் சூழ்நிலையில், தற்போது ஆறு பேரையும் விடுதலை செய்திருப்பதைப் பார்க்கும்போது உண்மையிலேயே அ.தி.மு.க மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளுக்குக் கிடைத்த ஒரு வெற்றியாகத்தான் நாங்கள் இதைச் சொல்ல முடியும். காரணம் தி.மு.க இந்த நேரத்தில், `ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம்' என்பதுபோல எங்கே எது நடந்தாலும், அதற்கு நாங்கள்தான் காரணம் என்பது மாதிரி சந்தனத்தைப் பூசிக்கொள்வது. இந்த மாதிரி ஒரு கில்லாடிதனத்தைக் கையில் வைத்துக்கொண்டு, ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி மக்களிடையே தவறான தகவலைப் பரப்பி அதன் மூலம் ஓர் ஆதாயத்தைத் தேடுகிறார்கள். எப்போதும் வாய்மைதான் வெல்லுமே ஒழிய பொய்மை வென்றதாகச் சரித்திரம் கிடையாது.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

மு.கருணாநிதி அன்றைக்கு அமைச்சரவைக் கூட்டத்தில், நளினியைத் தவிர மீதிப் பேரின் தண்டனையைக் குறைக்கக் கூடாது என்பதுபோல கையாலேயே எழுதியிருக்கிறார். இது கோப்புகளில் இருக்கிறது. அன்றைக்கு இந்த நிலை எடுத்து, இன்றைக்கு உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தவுடன் மார்தட்டிக்கொள்கிறார்கள் நாங்கள்தான் என்று. நேற்றொன்று, இன்றைக்கொன்று, நாளைக்கொன்று என நிமிஷத்துக்கு நிமிஷம் வேடங்களை மாற்றிக்கொண்டு, அதன் மூலம் மக்களை ஏமாற்றுகிற செயல்தான் இது. எனவே, இன்றைக்கு ஆறு பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது வரவேற்கத் தகுந்த விஷயம். இதற்கு தி.மு.க எந்தவிதத்திலும் ஒரு துரும்பைக்கூடக் கிள்ளி போட்டது கிடையாது. அவர்கள் அன்றைக்கே விடுதலை செய்திருக்கலாம். ஆனால் அதைச் செய்யத் தவறிவிட்டார்கள்" என்று கூறினார்.