Published:Updated:

``அதிசயம்.. அற்புதம்” சொன்னது ரஜினி... கொண்டாடுவது அ.தி.மு.க!

ரஜினி
ரஜினி

``அவர் முதல்வராவதைதான் நாளைய அதிசயம் என்று அவர் சொல்லியிருந்தால் அவருடைய தன்னம்பிக்கையையும் நாங்கள் மதிக்கிறோம்."

`எடப்பாடியார் ஆட்சி நான்கைந்து மாதங்கள்கூட தாங்காது என்றார்கள். ஆனால், இன்றுவரை ஆட்சி சிறப்பாக நீடிக்கிறது. இதுபோன்ற அதிசயம் நாளையும் நிகழும்' என்று கமல்ஹாசன் விழாவில் ரஜினி பேசியதை மையமாக வைத்து அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மாவில் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.

ரஜினி - கமல்
ரஜினி - கமல்

``தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது” என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். அது தி.மு.க மற்றும் அ.தி.மு.க இரண்டு தரப்பிலும் டென்ஷனை ஏற்படுத்தியது. குறிப்பாக அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ``ரஜினி அரசியல் கட்சித் தலைவரா? அவர் கட்சியே இன்னும் ஆரம்பிக்கவி்ல்லை. அவர் ஒரு நடிகர். அவருடைய கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை” என்று பதிலடி கொடுத்தார். இதற்கு ரஜினி தரப்பிலிருந்த எந்தப் பதிலும் வரவில்லை.

இந்தநிலையில், நடிகர் கமல்ஹாசனின் `திரையுலகில் 60' நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசியபோது ``இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக முதல்வராவோம் என்று எடப்பாடி கனவிலும் நினைத்திருக்கமாட்டார். முதலமைச்சர் ஆனபிறகு அவர் ஆட்சி இருபதுநாள்கள் தாண்டாது நான்கு மாதங்கள் தாண்டாது.. என்று எல்லோரும் சொன்னார்கள். அதிசயம் நடந்தது... அற்புதம் நடந்தது. அவர் ஆட்சி இப்போதும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஆக, இதேபோன்ற அதிசயம் அற்புதம் நாளையும் நடக்கும்” என்று பேசினார். இந்தப் பேச்சு தமிழகம் முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. எடப்பாடி முதல்வரானது போலவே அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தான் முதல்வராக வருவதைதான் அதிசயம் என்று ரஜினி சொல்லியிருக்கிறார் என்று கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

கமல் -ரஜினி
கமல் -ரஜினி
`ஈ.பி.எஸ் கனவில்கூட நினைத்திருக்கமாட்டார்.. ஆனால், அற்புதம் நடந்தது.. நாளை..!’- கமல் விழாவில் ரஜினி

இதுகுறித்த விவாதங்கள் நடந்துவந்த நிலையில்தான் `நமது அம்மா' நாளிதழில் ரஜினி அடுத்த அதிசயம் என்று சொன்னது எடப்பாடியாரின் ஆட்சி அடுத்தமுறையும் தமிழகத்தில் இருக்கப்போகிறது என்பதை ஆரூடமாகக் கூறியுள்ளார் சூப்பர்ஸ்டார் என்று `குத்தீட்டி' என்ற பெயரில் கட்டுரை வெளியிட்டுள்ளது. ``ஆச்சர்யம் பூச்சொரியும் எடப்பாடியாரும்... சூசக ஆருடம் சொன்ன சூப்பர் ஸ்டாரும்” என்கிற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையில் ``வினாக் குறிகளை வியப்புக் குறிகளாக மாற்றி, கேள்விகளையும், கேலிகளையும், ஆச்சர்யங்களாக்கி எடப்பாடி நடத்துகிற நல்லாட்சி 2021-லும் தொடரும் என்பதைத்தான், நாளைக்கும் நடக்கப்போகிற அதிசயம் என்பதாக சூசக ஜோதிடத்தை சூப்பர் ஸ்டார் சொல்லி இருக்கிறார்.

கண்டக்டராக வாழ்க்கையைத் தொடங்கிய நீங்களும் கன்னித்தமிழ் பூமியின் சூப்பர் ஸ்டாராவோம் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டீர்கள். காலம் கொடுக்கும் வாய்ப்பை கண்ணியம் குன்றாத கடுமையான உழைப்பால் தமதாக்கிக் கொள்பவர்கள்தான் தலைவர்களாக அறிஞர்களாக தடம்பதித்து உலக சரித்திரத்தில் இடம்பிடிக்கிறார்கள்.

நமது அம்மா
நமது அம்மா
`முதலில் நல்லாட்சி.. அடுத்து தம்பிகளுக்கு வழி!'- கமல், ரஜினி இணைப்பை வலியுறுத்திய எஸ்.ஏ.சந்திரசேகர்!

ஒரு சினிமாவில் நடித்துவிட்டு, மறுசினிமா வாய்ப்பு வருவதற்கு முன்பே முதல்வராக ஆசைப்படும் ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ஒரு ரியல் தலைவர் என்பதை உணர்த்துகிற வரலாறு” என்று நீளுகிறது அந்தக் கட்டுரை.

அதை அமோதிக்கும் விதமாக, ``ரஜினியின் பேச்சு முழுக்க எடப்பாடியாரை புகழ்ந்து பேசிய பேச்சுதான்'' என்கிறார் `நமது அம்மா'வின் ஆசிரியர் மருதுஅழகுராஜ்.

``எடப்பாடியின் ஆட்சி அதிசயம் என்கிறார். நாளையும் அந்த அதிசயம் நடக்கும் என்று அவர் சொல்வதே எடப்பாடி ஆட்சி அடுத்த முறையும் நடக்கும் என்பதைச் சொல்வதாகவே நாங்கள் கருதுகிறோம். மேலும், கமலுக்காக நடந்த விழா மேடையை எடப்பாடியின் புகழ்பாடும் மேடையாக்கியுள்ளார் ரஜினி. எடப்பாடியை வாழ்த்தியதாகவே நான் கருதுகிறேன். அ.தி.மு.க ஆட்சிக்குப் பக்கபலமாக பல கருத்துகளை பல நேரங்களில் சொல்லியுள்ள ரஜினி இப்போது எடப்பாடியை வாழ்த்தியுள்ளதாகவே கருத வேண்டும். அவர் முதல்வராவதைதான் நாளைய அதிசயம் என்று அவர் சொல்லியிருந்தால் அவருடைய தன்னம்பிக்கையையும் நாங்கள் மதிக்கிறோம்” என்கிறார்.

ஆனால் அமைச்சர் ஜெயக்குமார், ``எந்த அதிசயமும் நடக்காது, அதிர்ஷ்டமும் நடக்காது. அதிர்ஷ்டமும், அதிசயமும் நாங்கதான் எல்லாம். அடுத்தமுறையும் அ.தி.மு.க ஆட்சியைப் பிடிக்கும் அற்புதம்தான் நடக்கப்போகிறது” என்று அதற்கு மாறான கருத்தை தெரிவித்துள்ளார்.

மருது அழகுராஜ்
மருது அழகுராஜ்

ரஜினி தரப்பில் அ.தி.மு.க-வின் இந்த வியூகத்தை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள். ரஜினி தரப்பில் அதிகாரபூர்வமாக கருத்து சொல்லும் உரிமை இப்போது யாரிடமும் இல்லை. ஆனால், நமது அம்மாவின் இந்தக் கட்டுரைக்கு எதிர் ரியாக்ஷன் ரஜினி மன்றத்தில் இருக்கிறது. ``நாங்கள் ரஜினி முதல்வராக வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். அ.தி.மு.க-வினர் அவர்கள் தலைவர் முதல்வராக இதைப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார்கள். இன்னும் இரண்டு மாதத்தில் இதற்கெல்லாம் முடிவு ஏற்பட்டுவிடும். அப்போது தெரியும் நாளைய அதிசயம் எதுவென்று” என்று சொல்லி சஸ்பென்ஸ் வைக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு