Published:Updated:

`அ.தி.மு.க இரண்டாக உடையப்போகிறது; ஓ.பி.எஸ் கழன்று போகலாம்!’ - ஸ்டாலின்

ஸ்டாலின்
ஸ்டாலின்

``அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளரை பி.ஜே.பி., மோடி, நட்டாதான் முடிவு செய்ய வேண்டும்’ என்று அமைச்சர்களே பேசிவருகிறார்கள். எந்த நேரத்திலும், ஓ.பி.எஸ் கழன்று போகலாம். நிச்சயமாக, அ.தி.மு.க இரண்டாக உடையப்போகிறது’’ என்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

ராணிப்பேட்டை மாவட்டம், அனந்தலை ஊராட்சியில், தி.மு.க சார்பில் இன்று நடைபெற்ற மக்கள் சபைக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அவர் பேசுகையில்,``இதென்ன கிராமசபைக் கூட்டமா அல்லது கிராம சபையின் மாநாடா என்று வியக்கத்தக்க வகையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருக்கிறீர்கள். `கிராமசபை’ என்று சொன்னால் எடப்பாடிக்குக் கோபம் வந்துவிடும். கிராமசபைக் கூட்டத்தை 10 நாள்கள் தொடர்ந்து நடத்துவதற்குத் திட்டமிட்டு, கடந்த 23-ம் தேதியிலிருந்து நடத்திவருகிறோம். இந்த ஆட்சியில் நடக்கிற ஊழல் அக்கிரமங்களை சபையில் கலந்துகொள்ளும் மக்கள் சொல்வதை ஆட்சியாளர்களும், அமைச்சர்களும் டி.வி-யில் பார்க்கிறார்கள். உடனே கிராமசபையைத் தி.மு.க நடத்தக் கூடாதென்று ஓர் உத்தரவைப் போட்டார்கள். நீதிமன்றத்துக்குப் போயிருந்தால், அவர்களின் உத்தரவை ரத்து செய்திருக்கலாம். பிரச்னை வேண்டாமென்று நினைத்துதான் `மக்கள் கிராமசபை’ என்று பெயர் மாற்றி நடத்திக்கொண்டிருக்கிறோம். இந்த சபைக் கூட்டத்தைப் பார்த்து ஆளுங்கட்சியினர் ஆடிப்போயிருக்கிறார்கள்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இதைப் பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல் பல பத்திரிகைகளில் இன்று இரண்டு பக்கங்களுக்கு விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். `எடப்பாடி என்னென்ன செய்திருக்கிறார்?’ என்றும், ‘அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முதலிடம் வகிக்கிறது’ என்றும் பட்டியலிட்டிருக்கிறார்கள். விளம்பரத்தில் அவர்கள் கூறியிருப்பது, அப்பட்டமான பொய். தி.மு.க ஆட்சியில் செய்ததை வைத்துக்கொண்டு அவர்கள் கிழித்ததைப்போல் விளம்பரம் கொடுக்கிறார்கள். ஊழல், கொலை, கொள்ளை, சட்டம்-ஒழுங்கு பிரச்னையில்தான் தமிழகத்தை முதலிடத்தில் கொண்டுவந்திருக்கிறார்கள். உங்கள் அப்பன் வீட்டுப் பணத்திலா பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்திருக்கிறீர்கள்? மக்களிடம் வாங்கிய வரியை, கொள்ளையடிப்பதற்குப் பயன்படுத்தக் கூடாது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு நிச்சயமாக நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும். `அம்மையார் ஜெயலலிதா முதல்வராக வர வேண்டும்’ என்று முடிவு செய்துதான் தமிழக மக்கள் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். நமக்கும் அவர்களுக்கும் ஒரு சதவிகித வாக்குகள்தான் வித்தியாசம். இருந்தாலும், தமிழ்நாட்டில் இதுவரையில்லாத அளவுக்கு பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக இருக்கிறோம்.

விழுப்புரம்: `மோடியே வந்தாலும் தடுக்க முடியாது!’ - கொதித்த ஸ்டாலின்

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர் உடல் நலிவுற்றார். மருத்துவனையில் சேர்க்கப்பட்ட அந்த அம்மையாருக்கு என்ன சிகிச்சை அளித்தார்கள் என்று எதுவும் தெரியவில்லை. காலையில் ஒரு மந்திரி,`அம்மா இட்லி சாப்பிட்டார்’ என்றார். மாலையில் ஓர் மந்திரி, `அம்மா இட்லியுடன் சட்னியும் சேர்த்து சாப்பிட்டார்’ என்றார். மறுநாள் இன்னொரு மந்திரி, ‘அம்மா டி.வி பார்த்தார்’ என்றார். அப்புறம், ‘அரசு அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். கையெழுத்துப் போட்டார்’ என்றெல்லாம் அமைச்சர்கள் மாறி மாறி அறிக்கை கொடுத்தார்கள். ஒரு நாள் திடீரென்று, ‘அம்மையார் இறந்துவிட்டார்’ என்று சொன்னார்கள். அந்த நேரத்தில் கலைஞருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. கலைஞர் என்னை அழைத்து, `அம்மையாரின் உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு வா’ என்றார். தைரியமான பெண்ணை இழந்துவிட்டோம். அவர் தெருவில் போகிற குப்பனோ, சுப்பனோ கிடையாது. நாங்கள் ஓட்டுப்போடவில்லை என்றாலும், அவர்தான் எங்களுக்கும் முதலமைச்சர். அவரது இறப்பு இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அக்கம் பக்கத்தில் யாராவது இறந்துவிட்டால், துக்கம் விசாரிக்கப் போகிறோம். இறந்தவரின் மகனிடமோ, குடும்பத்தினரிடமோ ஆறுதல் சொல்லிவிட்டு `எப்படி இறந்தார்?’ என்று கேட்டுத் தெரிந்துகொள்கிறோம். சாதாரண நபர்களின் மரணத்தைத் தெரிந்துகொள்ள நினைக்கும்போது, தமிழ்நாட்டின் முதலமைச்சர் மரணம் இன்னமும் மர்மமாகவே இருக்கிறது. அம்மையார் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கொஞ்ச நாள் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார். திடீரென்று அவரை தூக்கிவிட்டு சசிகலாவை முதல்வராக அறிவித்தார்கள். பன்னீர்செல்வத்துக்கு கோபம் வந்துவிட்டது. ஜெயலலிதா மரணித்த நாள் முதல் அதுவரை அமைதியாக இருந்த பன்னீர்செல்வம், பதவி பறிப்புக்குப் பின்னர் ஜெயலலிதா சமாதிக்குச் சென்றார். சமாதி முன்பு 45 நிமிடங்கள் உட்கார்ந்து தியானம் செய்தார். ஜெயலலிதா ஆவியுடனும் பேசினார். `என் பதவியைப் புடுங்கிட்டாங்க. நான், நீதி கேட்கப்போறேன்’ என்று ஆவியுடன் பேசியதாகச் சொன்ன ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தார்கள். ஜெயலலிதா மரணம் தொடர்பாக, விசாரணை கமிஷனும் அமைத்தார்கள்.

மூன்று வருடங்கள் ஆகின்றன. பன்னீர்செல்வத்துக்கு எட்டு முறை சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. ஒருமுறைகூட விசாரணை ஆணையம் முன்பு பன்னீர்செல்வம் ஆஜராகவில்லை. எடப்பாடி பழனிசாமி தொடங்கி அ.தி.மு.க நிர்வாகிகள்வரை ஜெயலலிதா அம்மையாரின் படத்தை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறார்கள். அம்மாவால் பதவிக்குவந்த அனைவரும் அவரைச் சுத்தமாக மறந்துவிட்டார்கள். வெளி வேஷம் போடுகிறார்கள். அம்மையார்மீது பாசம், பக்தி இல்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் அம்மையாரின் மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு தண்டனை கிடைக்கும். எப்படிப்பட்ட அக்கிரமெல்லாம் நடந்திருக்கிறது. அதையெல்லாம் மூடி மறைத்துவிட்டு ஆட்சி நடத்துகிறார்கள். கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு 5,000 ரூபாய் வழங்கச் சொன்னேன். ஆனால், 1,000 ரூபாய்தான் அறிவித்தார்கள். இப்போது,`பொங்கலுக்கு 2,500 ரூபாய் கொடுக்கப்போகிறோம்’ என்று அறிவித்திருக்கிறார்கள். இதை நாங்கள் வரவேற்கிறோம். நான் ஏற்கெனவே சொன்னதைப்போல் மொத்தமாக 5,000 ரூபாய் கொடுத்திருக்கலாம். பிரித்துப் பிரித்து இப்படி ஏன் கொடுக்க வேண்டும்? அதேசமயம், பொங்கலுக்குக் கொடுக்கும் பணத்தை முறையாகக் கொடுப்பதில்லை.

கிராமசபையில் கலந்துகொண்டவர்கள்
கிராமசபையில் கலந்துகொண்டவர்கள்

அ.தி.மு.க-விலிருந்து பணத்தை எடுத்துக் கொடுப்பதைப்போல் காட்டிக்கொள்கிறார்கள். முதல்வர் படத்தைப் போட்டுக்கொள்ளட்டும். ஆனால், அந்தந்தத் தொகுதி எம்.எல்.ஏ., மாவட்ட அமைச்சர்களின் படத்தையும் போட்டு டோக்கன் வழங்குகிறார்கள். குறிப்பாக, அ.தி.மு.க-வினரைவைத்தே வீடு, வீடாக டோக்கன் விநியோகம் செய்கிறார்கள். மீண்டும் சொல்லிக்கொள்கிறேன். இது, உங்கள் அப்பன் வீட்டு பணம் இல்லை. நியாயமாகக் கொடுங்கள். உயர்த்திக் கொடுங்கள். வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று நாங்கள் பேசவில்லை. `பொய் சொன்னாலும் பொருத்தமாகச் சொல்லுடா போக்கத்த பயலே’ என்று கிராமத்தில் சொல்லுவார்கள். அதைப்போல எடப்பாடியாரே, பொய்யைப் பொருத்தமாகச் சொல்லிப் பழகுங்கள். இந்த கிராமசபைக்கூட்டத்தை மேலும் 10 நாள்கள் நீட்டிக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் 38 இடங்களை வென்றதுபோல் சட்டமன்றத் தேர்தலிலும் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறப்போகிறோம். `தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார்?’ என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். ஆனால், அ.தி.மு.க-வில் முதல்வர் வேட்பாளர் யாரென்று போர் நடக்கிறது. கூடி உட்கார்ந்து பேசி,`அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் எடப்பாடி’ என்று அறிவித்திருக்கிறார்கள். இரண்டு நாள்களாக வேறொரு செய்தியும் வருகிறது. `அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளரை பி.ஜே.பி., மோடி, நட்டாதான் முடிவு செய்ய வேண்டும்’ என்று அமைச்சர்களே பேசிவருகிறார்கள். எந்த நேரத்திலும், ஓ.பி.எஸ் கழன்றுபோகலாம். நிச்சயமாக, அ.தி.மு.க இரண்டாக உடையப்போகிறது’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு