Election bannerElection banner
Published:Updated:

``திமுக ஆட்சிக்கு வந்தால் எல்லா அமைச்சர்களும் ஜெயிலுக்குள்ள” - டி.டி.வி.தினகரன் பிரசாரம்

விழுப்புரத்தில் டிடிவி.தினகரன்
விழுப்புரத்தில் டிடிவி.தினகரன் ( தே.சிலம்பரசன். )

'கஜானாவை பழனிசாமி தூர்வாரி, கழுவி, சானிடைசர் அடித்து வைத்துவிட்டார். அதிலிருந்துதான் ரூ.200 கோடி இங்க வந்து இறங்கப்போகுது' விழுப்புரத்தில் டிடிவி.தினகரன்.

விழுப்புரத்தில் அமமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஐந்து வேட்பாளர்களை ஆதரித்து டி.டி.வி.தினகரன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ``இந்தத் தேர்தல், ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களாகிய நமக்கும், தீயசக்தி என்று எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்ட தி.மு.க கூட்டணிக்கும், ஆளும்கட்சியான பழனிசாமியின் துரோக கம்பெனிக்கும் இடையில் நடக்கின்ற தேர்தல்.

நாமெல்லாம் தொண்டர்களை, மக்களை நம்பித்தான் தேர்தலில் நிற்கிறோம். ஆனால், பழனிசாமியின் துரோகக் கூட்டணி காந்தி நோட்டை நம்பித்தான் இருக்கிறது. இங்கு ஒருத்தர் தள்ளாடிக்கிட்டே இருப்பாரே, வராரா அவரு... இதைச் சொன்னால் அவர்களுக்குக் கோபம் வருகிறது. ஏற்கெனவே உடம்பு சரியில்லை. கோபம் உடம்புக்கு ஆகாது தம்பி. என்ன அப்படிக் கோபம்! ஒரு அமைச்சர் பொறுப்பில் இருக்கிறீர்கள்... இதெல்லாம் தேவையா?

பிரசாரத்தில் டி.டி.வி.தினகரன்.
பிரசாரத்தில் டி.டி.வி.தினகரன்.
தே.சிலம்பரசன்

எடப்பாடி, தான் பல்லியா, பாம்பா என்று கேட்கிறார். இல்லை... அவர் பச்சோந்தி. நாலுகால் பிராணி மாதிரி மேடையில் தவழ்ந்து வந்து கோயிலில் விழுவதுபோல் விழுந்தவர். தமிழ்நாடு மக்கள் அனைவரும் பார்த்ததுதானே...

தினகரன் சந்திப்பைத் தவிர்க்கவே கணவரின் நினைவுநாள் நிகழ்வைத் தவிர்த்தாரா சசிகலா?

ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு 6,000, 10,000 எனக் கொடுத்தார்கள். மக்கள் வாங்கிக்கொண்டு பட்டென நாமம் போட்டார்கள். நான் இருபது ரூபாய் டோக்கன் கொடுத்தேனாம். சொந்த அண்ணனோ, தம்பியே 100 ரூபாய் கடன் கொடுக்க மாட்டான். இதில் கடன் சொல்லி ஓட்டு வாங்க முடியுமா..! அந்த அணியில் ஒருவருக்கும், எதிலும் நிதானம் இல்லை. தப்பித் தவறி தி.மு.க வந்துவிட்டால், அ.தி.மு.க-வினர் எல்லோரையும் தூக்கிச் சிறையில் போட்டுவிடுவார்கள். ஆனால், தி.மு.க வந்தால் வீட்டில் நாம ஒருவரும் இருக்க முடியாது.

அமமுக, தேமுதிக வேட்பாளர்கள்
அமமுக, தேமுதிக வேட்பாளர்கள்
தே.சிலம்பரசன்

கஜானாவை பழனிசாமி தூர்வாரி, கழுவி, சானிடைசர் அடித்துவைத்துவிட்டார். அதிலிருந்துதான் ரூ.200 கோடி இங்கு வந்திருக்கிறது. ஆர்.கே.நகர்போல 6,000 ரூபாயும் தருவார்கள். அது உங்கள் பணம். வாங்கிக்கொண்டு கதையை முடிச்சிடுங்க. விடியல் தர்றாராம் ஒருத்தர். யாருக்கு தர்றார்? நீட் தேர்வை நீக்கப் போகிறாராம் அவர். நீட், ஹைட்ரோகார்பன், காவிரி பிரச்னை, மீத்தேன் திட்டம் வருவதற்கு காரணமே அவர்கள்தான். எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு மாதிரிப் பேசுவார்கள், ஆளும்கட்சி ஆகிவிட்டால் அப்படியே மாறிவிடுவார்கள். பேய்க்கு பயந்துகொண்டு பிசாசை விட்டுவிடாதீர்கள் மக்களே.

முதியோர் உதவித்தொகையையே ஒழுங்காகத் தர முடியவில்லை. இந்தநிலையில் இவர் 1,000 ரூபாய், அவர் 1,500 ரூபாய் தரப் போகிறார்களாம். 6 லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளதே... எங்கிருந்து தரப்போகிறார்கள். எடப்பாடிக்குத் தெரியும், எப்படியும் ஆட்சிக்கு வர மாட்டோம் என்று. அதனால் அள்ளி வீசியிருக்கிறார். ஆட்சி முடியப்போகும்போது தற்காலிக இட ஒதுக்கீடு எதற்கு... இதெல்லாம் நடக்கும் காரியமா? இது கூட்டணிக்காகச் செய்யப்பட்ட ஏமாற்று வேலை" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு