Published:Updated:

வண்ணாரப்பேட்டை போராட்டம்... ராயபுரம் தொகுதியில் செல்வாக்கை இழக்கிறதா அ.தி.மு.க?

வண்ணாரப்பேட்டை போராட்டம்
வண்ணாரப்பேட்டை போராட்டம்

ராயபுரம் தொகுதிக்குள்தான் வண்ணாரப்பேட்டை இருக்கிறது. 2019 எம்.பி தேர்தலில் வண்ணாரப்பேட்டையில் 51 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்தத் தேர்தலில் தோற்ற அ.தி.மு.க. சி.ஏ.ஏ போராட்டத்துக்குப் பிறகு வரும் சட்டசபைத் தேர்தலில் ஜெயிக்குமா? புள்ளிவிவரங்களோடு அலசுகிறது கட்டுரை!

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (NPR) ஆகியவற்றுக்கு எதிரான போராட்டம் இந்தியா முழுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் இந்தப் போராட்டம் விதவிதமான வடிவங்களில் நடைபெற்று வருகின்றன. சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டம், தமிழகம் முழுவதும் போராட்ட தீயை மூட்டியிருக்கிறது.

வண்ணாரப்பேட்டை போராட்டத்தில்
வண்ணாரப்பேட்டை போராட்டத்தில்

டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் முஸ்லிம் பெண்கள் நடத்தும் போராட்டம் 70 நாள்களைக் கடந்து சென்றுகொண்டிருக்கும் நிலையில், `சென்னை ஷஹீன் பாக்' என வண்ணாரப்பேட்டை போராட்டத்துக்குப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். இந்த வண்ணாரப்பேட்டையைச் சுற்றியிருக்கும் மசூதிகளின் ஜமாத் நிர்வாகிகள், முஸ்லிம் கட்சிகள் மற்றும் அமைப்புகளை உள்ளடக்கி, `வண்ணாரப்பேட்டை அனைத்து ஜமாத், இஸ்லாமியக் கூட்டமைப்பு' என்ற பெயரில் போராட்டக் குழு செயல்பட்டு வருகிறது.

பிப்ரவரி 14-ம் தேதி வண்ணாரப்பேட்டையில் ஆரம்பிக்கப்பட்ட `சென்னை ஷஹீன் பாக்' போராட்டம் 17-வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. முஸ்லிம் திருமணம் ஒன்றும் இந்து வளைகாப்பு ஒன்றும் `சென்னை ஷஹீன் பாக்' போராட்டத்தில் நடத்தியதன் மூலம் மத ஒற்றுமையையும் வெளிப்படுத்துகிறார்கள் போராட்டக் குழுவினர்.

போராட்டத்தில் திருமணம்
போராட்டத்தில் திருமணம்

இந்த வண்ணாரப்பேட்டை ஏரியா, ராயபுரம் தொகுதிக்குள் வருகிறது. இதன் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் அமைச்சர் ஜெயக்குமார். தன்னுடைய தொகுதியில் நடக்கும் இந்த போராட்டக் களத்துக்கு அவர் வரவில்லை என்கிற வருத்தம், போராட்ட மேடையிலேயே எதிரொலிக்கிறது. மோடி, அமித் ஷா, எடப்பாடி, பன்னீர்செல்வத்துக்கு அடுத்து ஜெயக்குமாரையும் போராட்டத்தில் ஒரு பிடி பிடிக்கிறார்கள். போராட்டக்குழுவினருடன் பேசிய ஜெயக்குமார், ``நான் வந்தால் தேவையில்லாத பிரச்னைகள் உருவாகும். அதைத் தவிர்ப்பதற்காகவே வரவில்லை'' எனச் சொல்லியிருக்கிறார்.

``சென்னை ஷஹீன் பாக் போராட்டத்துக்கு முன்பு அவருடைய அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்கும் போராட்டத்தை வண்ணாரப்பேட்டை போராட்டக் குழுவினர் நடத்தினார்கள். அதனால், போராட்டக்காரர்கள் மீதும் ஜெயக்குமாருக்கு வருத்தம் உண்டு'' என்கிறார்கள் அ.தி.மு.க-வினர். ஆனாலும்கூட கடந்த வாரம் ராயபுரத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் வண்ணாரப்பேட்டை போராட்டக் குழுவினரோடு ஜெயக்குமார் கலந்துகொண்டார். அவருடைய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில்தான் அந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் பலன் ஏற்படவில்லை.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

முஸ்லிம்களுடன் மிக நெருக்கமாகப் பழகக் கூடியவர் ஜெயக்குமார். தொகுதியில் நடக்கும் முஸ்லிம் விழாக்களில் தவறாமல் கலந்துகொள்வார். வர முடியாமல் போனாலும் அடுத்த நாள் ஆஜர் ஆகத் தவறியதில்லை. தொகுதியில் நடக்கும் இஃப்தார் விருந்துகளில் எல்லாம் பங்கேற்பார். முஸ்லிம் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது அஸ்ஸலாமு அலைக்கும், இன்ஷா அல்லாஹ் போன்ற வார்த்தைகளை ஜெயக்குமார் பயன்படுத்துவார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. ஆதரித்ததால் அந்தக் கட்சியினர் மீதும் ஜெயக்குமார் மீதும் கோபத்தில் இருக்கிறார்கள் முஸ்லிம்கள். ``குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் ஆதரித்து ஓட்டு போட்டுவிட்டீர்கள். பரவாயில்லை. சட்டமன்றத்தில் அதை அமல்படுத்த மாட்டோம் எனத் தீர்மானம் கொண்டு வரலாமே. பி.ஜே.பி கூட்டணிக் கட்சியை நிதிஷ்குமார் நாடாளுமன்றத்தில் ஆதரித்துவிட்டு, சட்டமன்றத்தில் அமல்படுத்த மாட்டோம் எனத் தீர்மானம் போட்டிருக்கிறாரே. அதுபோல அ.தி.மு.க போட என்ன தயக்கம்'' என ஜெயக்குமாருடன் நடந்த பேச்சுவார்த்தையில் சொல்லியிருக்கிறார்கள் போராட்டக் குழுவினர்.

வண்ணாரப்பேட்டை போராட்டம்
வண்ணாரப்பேட்டை போராட்டம்

பிருந்தா காரத், காந்தி பேரன் துஷார் காந்தி, ஜே.என்.யூ மாணவர் தலைவர் ஆய்ஷி கோஷ் உள்ளிட்டவர்கள் எல்லாம் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு அளித்ததால், வண்ணாரப்பேட்டையின் மீது தமிழகத்தின் பார்வை குவிந்தது. அப்படிப்பட்ட வண்ணாரப்பேட்டை அடங்கியிருக்கும் ராயபுரம் தொகுதி, வரும் சட்டசபைத் தேர்தலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்விக்கு விடை தேடினோம்.

புதிய மற்றும் பழைய வண்ணாரப்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் முஸ்லிம்கள் கணிசமாக வசிக்கிறார்கள். கடந்த ஆண்டு நடைபெற்ற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வண்ணாரப்பேட்டை பகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடிகளில் எவ்வளவு ஓட்டுகள், யார் யாருக்கு விழுந்தது என அலசினோம்.

வண்ணாரப்பேட்டை போராட்டத்தில்
வண்ணாரப்பேட்டை போராட்டத்தில்

அந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில், காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட்கள், ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் கட்சிகள் இடம்பெற்றிருந்தன. அ.தி.மு.க அணியில் பா.ம.க., பி.ஜே.பி. தே.மு.தி.க கட்சிகள் இருந்தன. ராயபுரம் சட்டசபைத் தொகுதி அடங்கியிருக்கும் வட சென்னை தொகுதி, அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கு ஒதுக்கப்பட்டது. அந்தக் கட்சியின் சார்பில் அழகாபுரம் மோகன்ராஜ் போட்டியிட்டார். தி.மு.க. சார்பில் கலாநிதி வீராசாமி போட்டியிட்டார்.

பழைய மற்றும் புதிய வண்ணாரப்பேட்டை பகுதிகளில் மட்டும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 51 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குச் சாவடிக்கு உட்பட்ட பகுதிகள் மட்டும் 127. ஒரு வாக்குச் சாவடிக்குச் சராசரியாக 1,200 வாக்காளர்கள் இருப்பார்கள். இப்போது போராட்டம் நடைபெறும் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 10 வாக்குச் சாவடிகள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமைக்கப்பட்டிருந்தன.

2019 தேர்தலில் ஜெயக்குமார் பிரசாரம்
2019 தேர்தலில் ஜெயக்குமார் பிரசாரம்
`CAA விஷயத்தில் அவசரப்பட்டுவிட்டோம்!' எடப்பாடி பழனிசாமி யோசனையும் மத்திய அரசின் முட்டுக்கட்டையும்

வண்ணாரப்பேட்டை பாரத் தியேட்டர் ரவுண்டானா அருகில் உள்ள சஜ்ஜா முனுசாமி தெரு, அஜீஸ் முல்க் தெரு சந்திப்பில்தான் `சென்னை ஷஹீன் பாக்' போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த தெருக்களோடு சுற்றுப்பகுதிகளில் உள்ள பகுதிகளில் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் கிடைத்த வாக்கு விவரங்கள் இங்கே தரப்பட்டிருக்கிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் கிடைத்த வாக்கு விவரங்கள்
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் கிடைத்த வாக்கு விவரங்கள்

அதாவது அ.தி.மு.க கூட்டணிக்குக் கிடைத்த ஓட்டுகள் 708. தி.மு.க கூட்டணிக்குக் கிடைத்த ஓட்டுகள் 4579.

வட சென்னை தொகுதிக்குள் வரும் ராயபுரம் தொகுதி முழுவதும் கணக்கிட்டால், அ.தி.மு.க கூட்டணி பெற்ற ஓட்டுகள் 15,815. தி.மு.க கூட்டணி வாங்கிய வாக்குகள் 69,987. அதாவது 54,172 ஓட்டுகளை அ.தி.மு.க கூட்டணியைவிட தி.மு.க. கூட்டணி பெற்றிருந்தது.

வண்ணாரப்பேட்டை
வண்ணாரப்பேட்டை

2016 சட்டசபைத் தேர்தலில் 8,031 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜெயக்குமாரின் ராயபுரம் தொகுதி அ.தி.மு.க, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 54,172 ஓட்டுகள் வித்தியாசத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்தது.

ஏற்கெனவே வாக்குவங்கி ரீதியாக பின்னடைவில் இருக்கும் அ.தி.மு.க இந்த மக்கள் போராட்டத்தை சரியான ரீதியில் கையாண்டு, அப்பகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்று நாடாளுமன்றத் தேர்தலில் அடைந்த தோல்வியை வரும் சட்டமன்றத் தேர்தலில் நிகழாமல் தவிர்க்கலாம்.

முதல்வரின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தநிலையில் அடுத்து அத்தொகுதி மக்களை, இந்தப் போராட்டத்தை அ.தி.மு.க-வினர் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதே அரசியல் நோக்கர்களின் கேள்வியாக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு