Published:Updated:

683% அதிகரித்த முன்னாள் அமைச்சரின் சொத்து... 86% கோடீஸ்வர எம்.எல்.ஏ-க்கள் - ADR அறிக்கை! #TNAssembly

சட்டமன்றம்
சட்டமன்றம்

கடந்த ஐந்து ஆண்டுகளில், ஒரு முன்னாள் அமைச்சரின் சொத்து 577 சதவிகிதமும், மற்றொரு முன்னாள் அமைச்சரின் சொத்து 683 சதவிகிதமும் உயர்ந்திருக்கிறது. யார் அவர்கள்..?!

2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் இன்று கூடிய சட்டசபைக் கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். சட்டசபையின் தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்.எல்.ஏ-க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்தநிலையில், தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்து விவரங்களை அலசி ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது ஜனநாயக சீர்திருத்தக் கூட்டமைப்பு (ADR).

ADR
ADR
கிரிமினல் வழக்குகள்கொண்ட எம்.எல்.ஏ-க்கள்: அதிமுக - 15; பாஜக - 2; திமுக-வில் எத்தனை? - ADR அறிக்கை!

இந்தியாவில் ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கும், வலுப்படுத்துவதற்கும் இயங்கிவரும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தன்னார்வ அமைப்புதான் ஏ.டி.ஆர். 1999-ம் ஆண்டு முதல் இந்தியாவில் இயங்கிவரும் இந்த அமைப்பு, தேர்தல் ஆவணங்கள், அரசியல் கட்சிகள் தாக்கல் செய்யும் ஆவணங்கள், வேட்பாளர்களின் பிராமணப் பத்திரங்களை ஆராய்ந்து அறிக்கைகளை வெளியிட்டுவருகிறது.

அந்த வகையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றிருக்கும் 234 எம்.எல்.ஏ-க்களில் 224 எம்.எல்.ஏ-க்களின் பிரமாணப் பத்திரங்களை, `தமிழ்நாடு எலெக்‌ஷன் வாட்ச்' என்ற அமைப்போடு இணைந்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது ஏ.டி.ஆர் அமைப்பு. `மீதமுள்ள 10 எம்.எல்.ஏ-க்களின் (தி.மு.க 8, காங்கிரஸ் 2) பிரமாணப் பத்திரங்கள் தெளிவாக இல்லையென்பதால், அவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை' என்று ஏ.டி.ஆர் தெரிவித்திருக்கிறது.

இந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் எம்.எல்.ஏ-க்களில், 86 சதவிகிதம் பேர் கோடீஸ்வரர்களாக இருப்பதாகத் தகவல் வெளியிட்டிருக்கிறது ஏ.டி.ஆர்!

கோடீஸ்வர எம்.எல்.ஏ-க்கள்!

தமிழக சட்டமன்றத்திலுள்ள 192 பேர் (86%) கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர் என்று ஏ.டி.ஆர் தகவல் வெளியிட்டிருக்கிறது. தி.மு.க-வில் 111 பேரும், அ.தி.மு.க-வில் 58 பேரும், காங்கிரஸில் 14 பேரும், வி.சி.க-வில் இரண்டு பேரும், சி.பி.ஐ-ல் ஒருவரும் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர். பா.ம.க., பா.ஜ.க ஆகிய கட்சிகளில் தலா மூன்று பேர் கோடீஸ்வர எம்.எல்.ஏ-க்களாக இருக்கின்றனர்.

புதிய சட்டசபை
புதிய சட்டசபை

டாப் 5 கோடீஸ்வர எம்.எல்.ஏ-க்கள்!

2021 சட்டமன்றத்தில், 200 கோடிக்கும் அதிகமாகச் சொத்துகள் வைத்திருக்கும் இரண்டு எம்.எல்.ஏ-க்கள் இடம்பெற்றிருக்கின்றனர். அதில் முதலாமவர், அம்பாசமுத்திரம் தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா. இவர் அசையும், அசையாச் சொத்துகள் என ரூ.246 கோடிக்கும் மேல் சொத்து வைத்திருக்கிறார். அடுத்த இடத்தில், அண்ணா நகர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ எம்.கே.மோகன் ரூ. 211 கோடிக்கும் மேல் சொத்து வைத்திருக்கிறார். அடுத்த மூன்று இடங்களில்...

எஸ்.கதிரவன் (தி.மு.க, மண்ணச்சநல்லூர்) - ரூ.121.21 கோடி

ஐட்ரீம்ஸ் மூர்த்தி (தி.மு.க., ராயபுரம்) - ரூ.112.19 கோடி

கே.ஆர்.ஜெயராம் (அ.தி.மு.க., சிங்காநல்லூர்) - ரூ.90.32 கோடி

குறைந்த சொத்துகள் வைத்திருக்கும் எம்.எல்.ஏ-க்கள்!

2021 சட்டமன்றத்தில் மிகக் குறைந்த அளவில் சொத்து வைத்திருப்பவர், திருத்துறைப்பூண்டி சி.பி.ஐ எம்.எல்.ஏ மாரிமுத்து. இவர் அசையும், அசையாச் சொத்துகள் என 3.30 லட்சம் ரூபாய் மட்டுமே சொத்தாக வைத்திருக்கிறார். இதற்கு அடுத்த இடத்தில் கந்தர்வகோட்டை சி.பி.எம் எம்.எல்.ஏ சின்னத்துரை ரூ. 4.73 லட்சம் சொத்து வைத்திருக்கிறார். மூன்றாவது இடத்தில், தி.மு.க கூட்டணிக் கட்சியான ம.ம.க-வைச் சேர்ந்த மணப்பாறை எம்.எல்.ஏ அப்துல் சமத், ரூ. 10.64 லட்சம் சொத்து வைத்திருக்கிறார்.

மறுதேர்வு செய்யப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ-க்களின் சொத்து விவரம்!

கடந்த 2016-ம் ஆண்டு எம்.எல்.ஏ-வாக இருந்து தற்போது மீண்டும் தேர்வாகியிருக்கும் எம்.எல்.ஏ-க்களின் சொத்துகள், கடந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வாறாக உயர்ந்திருக்கின்றன என்பது குறித்த தகவல்களையும் வெளியிட்டிருக்கிறது ஏ.டி.ஆர்.

விராலிமலை அ.தி.மு.க எம்.எல்.ஏ-வும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர், கடந்த 2016-ல் தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில், அசையும், அசையாச் சொத்துகள் எனத் தன்னிடம் ரூ. 9.08 கோடி சொத்து இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இது 2021-ல் 577 சதவிகிதம் அதிகரித்து தற்போது ரூ. 61.50 கோடியாக இருக்கிறது.

அதேபோல 2016-ல் ரூ.170.97 கோடியாக இருந்த அண்ணா நகர் தி.மு.க எம்.எல்.ஏ எம்.கே.மோகனின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு, 40 கோடி ரூபாய்க்கும் மேல் அதிகரித்து (24% உயர்வு) ரூ. 211.20 கோடியாக இருக்கிறது. கும்பகோணம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ, ஜி.அன்பழகனின் சொத்து மதிப்பு 2016-ல் ரூ. 20.02 கோடியாக இருந்தது. 2021-ம் ஆண்டில் 108 சதவிகிதம் அதிகரித்து 41.73 கோடி ரூபாயாக இருக்கிறது.

சட்டமன்றம்
சட்டமன்றம்
கடவுளின் தேசத்தைக் காக்க மீண்டும் சட்டமன்றம் நுழைகிறார் 'சைலஜா' டீச்சர்
பாலக்கோடு தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வும், முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சருமான கே.பி.அன்பழகனின் சொத்து மதிப்பு, கடந்த 2016-ம் ஆண்டைவிட 683 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. 2016-ல் ரூ.2.40 கோடியாக இருந்த அன்பழகனின் சொத்து மதிப்பு தற்போது ரூ.18.83 கோடியாக இருக்கிறது.

ஆரணி தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ எஸ்.ராமச்சந்திரனின் சொத்து மதிப்பு 2016-ம் ஆண்டை ஒப்பிடும்போது 581 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. 2016-ல் 2.18 கோடி ரூபாயாக இருந்த சொத்து மதிப்பு 2021-ல் ரூ. 14.89 கோடியாக உயர்ந்திருக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் சில சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்துகள் பல மடங்கு அதிகரித்திருப்பது ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் தருகிறது!

அடுத்த கட்டுரைக்கு