Published:Updated:

முரண்கள்தாண்டி, இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு தலைவர் அத்வானி - பிறந்தநாள் பகிர்வு

அத்வானி
News
அத்வானி ( Financial Express )

ராம் ஜென்ம பூமி இயக்கத்தின் முகமாக மிகத் தீவிரமான இந்துத்துவ அரசியலை முன்னெடுத்தவர், வாஜ்பாய்க்குப் பிறகு கட்சியின் பிரதமர் முகமாகப் பார்க்கப்பட்டவர் தற்போது பா.ஜ.கவின் ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக, ஓய்வில் இருந்து வருகிறார்.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான அத்வானி பிரிவினைக்கு முன்பான பிரிட்டிஷ் இந்தியாவில் கராச்சியில் 1927-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பிறந்தவர். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்தியாவிற்குக் குடிபெயர்ந்த அத்வானியின் குடும்பம் பம்பாயில் குடியேறியது. பம்பாய் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற அத்வானி, பாரதிய ஜன சங்கத்தில் இணைந்து முழு நேர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.

அத்வானி
அத்வானி

பாரதிய ஜன சங்கத்தில் பல பொறுப்புகளை வகித்து, 1973-ம் ஆண்டு அதன் தலைவராகப் பொறுப்பேற்றார். 1970-ம் ஆண்டு முதல்முறையாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். நெருக்கடி நிலைக்குப் பிறகு இந்திரா காந்தியின் காங்கிரசை எதிர்கொள்ள பிரதான எதிர்க்கட்சிகள் ஜனதா கட்சி என்கிற ஒரே குடையின் கீழ் இணைந்தன. 1977-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி தோற்கடிக்கப்பட்டு மொரார்ஜி தேசாய் பிரதமராகப் பொறுப்பேற்றார். அவரது அமைச்சரவையில் தகவல் மற்றும் தொலைதொடர்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார் அத்வானி. ஜனதா கட்சி பிளவுபட்ட போது அதிலிருந்து பிரிந்து பாரதிய ஜனதா கட்சியைத் தொடங்கி அதன் முதல் தலைவராகவும் செயல்பட்டார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்துத்துவத்தின் இரண்டு முகங்கள்:

பாரதிய ஜனசங்க காலம் தொட்டே இரட்டைக்குழல் துப்பாக்கி போல இருந்தவர்கள்தான் அத்வானியும் - வாஜ்பாயும். இதே நிலை ராம் ஜென்ம பூமி இயக்கத்தின் போதும் தொடர்ந்தது. இந்துத்துவத்தின் மிதவாத முகமாக வாஜ்பாய் கட்டமைக்கப்பட்ட அதேவேளையில்தான், அதன் தீவிர முகமாக அத்வானி செயல்பட்டார். ஆட்சிக்கு வாஜ்பாய், கட்சிக்கு அத்வானி என்கிற அடிப்படையில்தான் 90களில் பா.ஜ.க இயங்கிவந்தது. 1989 பொதுத் தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் வி.பி சிங்கின் தேசிய முன்னணிக்கு பா.ஜ.க ஆதரவு அளித்தது. பல ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்த மண்டல் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வி.பி சிங் அரசு முடிவெடுத்தபோது வட இந்தியா முழுவதும் அதற்குப் பெரும் எதிர்ப்புகள் கிளம்பின.

வாஜ்பாய் - அத்வானி
வாஜ்பாய் - அத்வானி
Swarajya

பா.ஜ.கவும், காங்கிரசும் வெளிப்படையாக மண்டல் குழு பரிந்துரைகளை எதிர்த்தன. அதே சமயத்தில் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் கோயில் கட்ட வேண்டும் என அத்வானி தொடங்கிய ரத யாத்திரையின் விளைவாக வட இந்தியா முழுவதும் கலவரம் ஏற்பட்டது. 1990களில் தொடங்கிய முயற்சி லாலு பிரசாத் யாதவ் மற்றும் வி.பி சிங்கால் தடைப்பட்டுப் போனது.

அத்வானியின் ரத யாத்திரை பீகாரில் தடுத்து நிறுத்தப்பட்டு, அத்வானி கைது செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக வி.பி சிங்கின் தேசிய முன்னணி அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக அத்வானி அறிவித்தார்.

‘ நீங்கள் மண்டலை (மண்டல் குழு பரிந்துரை)கையில் எடுத்தீர்கள், நாங்கள் கமண்டலத்தை (ராமர் கோயில் இயக்கம்) கையில் எடுத்தோம்’ என பா.ஜ.க தெரிவித்தது. பின்னர் 1992-ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியில் இருந்தபோது பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவரம் வெடித்தது. 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் இந்த மோதலுக்குத் தொடக்கப்புள்ளி வைத்தவர் அத்வானியே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மோடியின் மீட்பர்:

குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்திற்குப் பிறகு பிரதமராக இருந்த வாஜ்பாய், மோடி அரசை டிஸ்மிஸ் செய்கிற முடிவில் இருந்ததாகவும் சொல்லப்படுவதுண்டு. அப்போது மோடியைக் காப்பாற்றியதில் அத்வானிக்கு மிகப்பெரிய பங்கு இருந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா கூறுகிறார்.

தகர்ந்த பிரதமர் கனவு:

2004-ம் ஆண்டு ஆட்சியை பா.ஜ.க இழந்த பிறகு வாஜ்பாய் தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டார். அத்வானி எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்று ஐந்தாண்டுகள் செயல்பட்டார். 2009-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற நேர்ந்தால் அதன் பிரதமர் முகமாக இருந்தவர் அத்வானி மட்டுமே. அப்போதைய பா.ஜ.க தலைவர் ராஜ்நாத் சிங் கூட அத்வானியின் பெயரைத்தான் பிரதமர் பதவிக்கு முன்மொழிந்திருந்தார். ஆனால், காங்கிரஸ் மீண்டும் வெற்றிபெறவே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சுஷ்மா சுவராஜ் வசம் ஒப்படைத்துவிட்டு விலகினார் அத்வானி.

அத்வானி - மோடி
அத்வானி - மோடி

அத்வானியின் அரசியல் சரிவு அங்கிருந்துதான் தொடங்குகிறது. 2002-ல் மோடி அரசைக் காப்பாற்றியதோடு இல்லாமல் 2014 தேர்தலில் மோடியை பிரதமர் முகமாக அறிவிப்பது வரை மோடியின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் அத்வானியின் பங்கு முதன்மையானது.

தற்போது தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கியுள்ள அத்வானி கடந்த ஏப்ரல் மாதம் "NATION FIRST, PARTY NEXT, SELF LAST" என்கிற வலைப்பதிவை வெளியிட்டிருந்தார். தற்போதைய பா.ஜ.க தலைமையைச் சாடுவதாகவே இந்தப் பதிவு பார்க்கப்பட்டது.

அதில் எதிர்கருத்து கொண்டவர்கள் நம்முடைய எதிரிகள்; ஜனநாயகம், ஊடகச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்; தேர்தல் நடைமுறை மற்றும் கட்சிகளுக்கு நிதியளிப்பதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் எனக் கூறியிருக்கிறார். தேசமே முதன்மை என்பதை மையப்படுத்தி அதில் எழுதியிருந்தார்.

ஆனால், அத்வானி அதற்கு எவ்வளவு முரணானவர் என்பதற்கு அவருடைய அரசியல் வாழ்க்கையே சாட்சி. 90களின் தொடக்கத்தில் அத்வானி தலைமையேற்று நடத்திய ராம் ரத யாத்திரை, அதைத் தொடர்ந்து பாபர் மசூதி இடிப்பு சுதந்திர இந்தியாவின் கறுப்புப் பக்கங்களில் ஒன்று. “Ayodhya-Babri sirf jhaanki hai, Kashi-Mathura ab baaqi hai” "(அயோத்தியாவும் - பாபர் மசூதியும் வெறும் முன்னோட்டமே, காசியும் மதுராவும் இன்னும் மீதமிருக்கிறது") என இந்தியாவின் தெருக்களில் அத்வானி விதைத்துச் சென்ற வெறுப்பு இயக்கத்தின் விதைகளைத்தான் இன்று கும்பல் கொலைகளாக அறுவடை செய்துகொண்டிருக்கிறோம்.

அத்வானி ரத யாத்திரை
அத்வானி ரத யாத்திரை
Indian express

இன்று தீவிர அரசியலிலிருந்து விலகி இருந்தாலும், ஒரு காலத்தில் இரும்பு மனிதராகப் பார்க்கப்பட்டவர் அத்வானி. மோடிக்கும் இவருக்கும் சிறு பிரிவு இருப்பதாகப் பார்க்கப்பட்டாலும் இன்று காலையே மோடி, அமித் ஷா இருவரும் அத்வானியை நேரில் சென்று வாழ்த்தியிருக்கிறார்கள். முரண்கள்தாண்டி, இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு தலைவர் அத்வானி என்பதை மறுப்பதற்கில்லை.