Published:Updated:

பதற்றமான பகுதி... ஆயுதப்படை சிறப்புச் சட்டம் நீட்டிப்பு - என்ன நடக்கிறது நாகாலாந்தில்?

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மத்திய அரசு ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.

நாகாலாந்து
நாகாலாந்து

1958-ம் ஆண்டு ஆயுதப்படை சிறப்புச் சட்டத்தின் கீழ் நாகாலாந்து மாநிலம் முழுவதையும் பதற்றம் நிறைந்த பகுதியாகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதோடு ஆயுதப்படை சிறப்புச் சட்டத்தை நாகாலாந்து மாநிலத்தில் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வமான செய்தி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

நாகாலாந்து
நாகாலாந்து

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்து தனித்த வரலாறு கொண்டது. பல ஆண்டுகளாக உள்நாட்டு ஊடுருவல், பதற்றம் போன்ற காரணங்களால் அமைதியற்ற சூழ்நிலை நிலவிய மாநிலம். நாகாலாந்து பெரும்பாலும் பழங்குடிகளைக் கொண்ட மாநிலம். கிறிஸ்துவம் பெரும்பான்மை மதம், ஆங்கிலம் அதிகாரபூர்வ மொழி. பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு அங்கமாக இருந்த நாகாலாந்து சுதந்திரத்துக்குப் பிறகு தனித்து இருக்கவே விரும்பியது. இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு முந்தைய தினம் ஆகஸ்டு 14, 1947 அன்று நாகாலாந்து தனி நாடாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அது செயலாக்கம் பெறவில்லை.

சுதந்திர இந்தியாவில் தொடக்கத்தில் யூனியன் பிரதேசமாக இருந்த நாகாலாந்து 1963-ம் ஆண்டு தனி மாநில அந்தஸ்து பெற்றது. தங்களுடைய கலாசாரத்தை தனித்துவத்தைக் காக்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கை. இதற்காக இந்திய அரசுடன் பல ஆண்டுகளாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பதவியில் அமர்ந்த பிறகு இந்திய அரசுக்கும் - நாகா குழுக்களுக்கும் இடையே நாகா ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஆனால், அதற்கு அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளில் இன்றுவரை முழுமையான தீர்வு எட்டப்படவில்லை.

நாகாலாந்து
நாகாலாந்து
திரும்பும் வரலாறு... அஸ்ஸாம் மீண்டும் பற்றி எரிவது ஏன்? #CAB

நாகா மாணவர் அமைப்பு (என்.எஸ்.எஃப்) மத்திய அரசின் புதிய அறிவிக்கையைக் கடுமையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ``நாகாலாந்து போன்ற அமைதியான மாநிலம் மத்திய அரசின் தவறான நோக்கம் கொண்ட இந்த அறிவிக்கையின் மூலம் பதற்றம் நிறைந்த பகுதியாகச் சித்திரிக்க அரசு முயல்கிறது. இது சட்டம் ஒழுங்கு சம்பந்தமானது இல்லை, நாகா மக்களின் எழுச்சியை ஒடுக்கும் வஞ்சக நடவடிக்கையே. ஆயுதப்படையால் தொடர்ந்து வரும் மனித உரிமை மீறல்களை இது அதிகரிக்கவே செய்யும்.

மாநில அதிகாரத்தில் உள்ள சட்டம் - ஒழுங்கு விவகாரத்தில் மத்திய அரசு தேவையின்றி தலையிடுகிறது. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. மக்களின் பல அடிப்படை உரிமைகளை மீறுவது. இந்தக் கொடிய சட்டம் ஒட்டுமொத்தமாக நீக்கப்பட வேண்டும் என்பதில் என்.எஸ்.எஃப் உறுதியாக இருக்கிறது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. பாதுகாப்புப் படைகள் மக்கள் அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். பாதுகாப்புப் படையினர் செய்கின்ற குற்றங்களில் இருந்து பாதுகாப்பு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் மக்களின் கோவத்தை அதிகரிக்கவே செய்யும்” என்றுள்ளது.

நாகாலாந்து
நாகாலாந்து

இது தொடர்பாக நாகாலாந்தைச் சேர்ந்தவரும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் வடகிழக்கு மாநிலச் செயலாளருமான லோதா நம்மிடம் பேசுகையில், ``அமைதி, சகஜ நிலை என உலக நாடுகளிடம் பேசி வருகிற மத்திய அரசு தற்போது நாகாலாந்து மாநிலத்தைப் பதற்றம் நிறைந்த, ஆபத்தான நிலையில் இருப்பதாக அறிவித்திருப்பது மிகவும் வஞ்சகத்தனமானது. இது நாகாலாந்து மக்களை மிகவும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. நாகாலாந்து மட்டுமல்ல; ஒட்டுமொத்த வடகிழக்குமே மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடுதான் நடத்தப்பட்டு வந்துள்ளது. வடகிழக்கு நோக்கிய டெல்லியின் கொள்கைகள் அனைத்துமே குறுகிய பார்வையிலானதாகவே இருந்துள்ளது. அது போலதான் இந்தப் புதிய அறிவிக்கையும் இது தேவையற்றது. இது திரும்பப்பட வேண்டும்” என்றார்.