Published:Updated:

ஜம்மு - காஷ்மீர்: `தொடர்ச்சியாக விலகும் மூத்த தலைவர்கள்... காங்கிரஸ் தடுமாற்றத்தின் பின்னணி என்ன?!'

ஜம்மு காஷ்மீரில் முன்னாள் அமைச்சர்கள் உட்பட காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பொறுப்புகளிலிருந்து விலகியிருப்பது கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இப்போதும் ஜம்மு காஷ்மீர் அமைதியற்றுத்தான் காணப்படுகிறது. ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும், சிறப்பு அந்தஸ்து தரப்பட வேண்டும், உடனடியாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றெல்லாம் அங்கு அரசியல் கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. இந்தச் சூழலில், ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, பாகிஸ்தான் எல்லை வழியாக காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன. அதனால், பண்டிட்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இப்படியான சூழலில், சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, முதன்முறையாக அங்கு சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பயணம் மேற்கொண்டார்.

காஷ்மீர்
காஷ்மீர்

இத்தகைய சூழலில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உரிமைகள் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளில் அங்கிருக்கும் கட்சிகள் கவனம் செலுத்திவருகின்றன. ஆனால், ஒரு காலத்தில் அங்கு ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ், தற்போது உட்கட்சிப்பூசலில் கரைந்துகொண்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அங்கு காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகள் 20 பேர் திடீரென பதவி விலகியிருக்கிறார்கள்.

ஜம்மு காஷ்மீர் காங்கிரஸின் மூத்த நிர்வாகிகளான அந்த 20 பேரும், நாடாளுமன்ற மாநிலங்களவையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான குலாம்நபி ஆசாத்துக்கு நெருக்கமானவர்கள். முன்னாள் அமைச்சர்கள் ஜி.எம்.சரூரி, விகார் ரசூல், டாக்டர் மனோகர் லால் சர்மா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான ஜுகல் கிஷோர் சர்மா, குலாம் நபி மோங்கா, நரேஷ் குப்தா, முகமது அமீன் பட், சுபாஷ் குப்தா, மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் அன்வர் பட் ஆகியோர் பதவி விலகியவர்களில் முக்கியமானவர்கள்.

குலாம் நபி ஆசாத்
குலாம் நபி ஆசாத்

ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் மாநிலத் தலைவரை மாற்ற வேண்டும் என்ற தங்களின் நீண்டகாலக் கோரிக்கையை காங்கிரஸ் தலைமை கண்டுகொள்ளவில்லை என்பதுதான் இவர்களின் ஆதங்கத்துக்கு முக்கியக் காரணம். தற்போது ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவராகக் குலாம் அகமது மிர் இருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்கு மாநிலத் தலைவராக இருப்பார் என்று அவரை நியமித்திருக்கிறார்கள். ஆனால், மாநிலத் தலைவர் பதவியிலிருந்து ஏழு ஆண்டுகளாக அவர் மாற்றப்படாமல் இருக்கிறார். அவரை மாற்ற வேண்டும் என்று மூத்த நிர்வாகிகள் பலர் போர்க்கொடி தூக்க ஆரம்பித்தனர். அவர்கள், காங்கிரஸ் தலைமைக்குத் தொடர்ந்து தங்களின் கோரிக்கையை வலியுறுத்திவந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், இவர்களின் கோரிக்கையைக் கட்சித் தலைமை கண்டுகொள்ளவில்லை. குலாம் அகமது மிர் மாற்றப்படாவிட்டால் கட்சிப் பதவிகளில் நீடிக்க மாட்டோம் என்று 20 நாள்களுக்கு முன்பாக, சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் அவர்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள். அந்தக் கடிதத்துக்கு எந்த பதிலும் இல்லையென்பதால் கடும் அதிருப்தியடைந்தனர். அதையடுத்து, கட்சியில் வகித்துவந்த பதவிகளை அவர்கள் ராஜினாமா செய்தனர். முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், முன்னாள் எம்.எல்.சி-க்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் எனப் பலரும் ஏற்கெனவே கட்சியிலிருந்து விலகிச் சென்று வேறு கட்சிகளில் சேர்ந்துவிட்ட நிலையில், இப்போது மூத்த தலைவர்கள் 20 பேர் பதவிகளிலிருந்து விலகியிருக்கிறார்கள்.

சோனியா காந்தி
சோனியா காந்தி

இந்த விவகாரம் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல், மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல், வட்டார வளர்ச்சி கவுன்சில் தேர்தல், பஞ்சாயத்துத் தேர்தல் என காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்து தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்துவருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர், தற்போது மூத்த தலைவர்களின் எதிர்ப்புக்கு ஆளாகியிருக்கும் மாநிலத் தலைவரான குலாம் அகமது மிர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்முவுக்கும் ஸ்ரீநகருக்கும் ராகுல் காந்தி வந்தபோது அவரைச் சந்தித்து முறையிடுவதற்கு நேரம் கேட்டும், அதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று தற்போது பதவி விலகியவர்கள் வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்கள்.

கிரிப்டோகரன்சி வர்த்தகம்: `சாமானிய மக்கள் புரிந்துகொள்ள வேண்டியவை என்னென்ன?!'

பதவி விலகியிருப்பவர்கள் அனைவரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத்தின் ஆதரவாளர்கள். ஜம்மு காஷ்மீர் காங்கிரஸில் நிகழ்ந்துவரும் செயல்பாடுகள் மிகவும் கவலையளிப்பதாக குலாம் நபி ஆசாத் கருத்து தெரிவித்திருக்கிறார். பதவி விலகுவது குறித்து அவர்கள் யாரும் தன்னுடன் கலந்தாலோசிக்கவில்லை என்றும், பதவி விலகல் கடிதம் குறித்துத் தமக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் கூறுகிறார்.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் விவகாரத்தில் மட்டுமல்ல, அகில இந்திய அளவிலும்கூட காங்கிரஸின் செயல்பாடுகள் குறித்துப் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. உதாரணத்துக்கு உத்தரப்பிரதேசத்தை எடுத்துக்கொள்ளலாம். அங்கு அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அங்கு யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு மீது ஏராளமான விமர்சனங்கள் வைக்கப்படும் சூழலில், மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு அந்தக் கட்சி முனைப்புடன் செயல்பட்டுவருகிறது. உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டம் என்ற முக்கியத்துவத்துடன் பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட தேர்தலில், யாருடனும் கூட்டணி கிடையாது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அறிவித்திருக்கிறார். அதன் பலன் பா.ஜ.க-வுக்குத்தானே போகும் என்ற யதார்த்தத்தை காங்கிரஸ் கட்சியின் சாதாரண தொண்டர்கூட யோசிப்பார். அந்தக் கட்சியின் தலைமையோ அப்படி யோசிப்பதாகத் தெரியவில்லை. அத்தகைய சிக்கலின் விளைவை ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் சந்தித்துக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு