Published:Updated:

புதுச்சேரி: பள்ளி மாணவனின் வீடியோ; விகடன் செய்தி எதிரொலி! - அரசுப் பள்ளிகளில் மீண்டும் மதிய உணவு

புதுச்சேரி அரசு

விகடனில் வெளியான செய்தி சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றதைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடுவை அழைத்து அவசர ஆலோசனை நடத்திய கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், மதிய உணவு வழங்குவதற்கான கோப்புகளை உடனே தயார் செய்யும்படி உத்தரவிட்டிருக்கிறார்.

புதுச்சேரி: பள்ளி மாணவனின் வீடியோ; விகடன் செய்தி எதிரொலி! - அரசுப் பள்ளிகளில் மீண்டும் மதிய உணவு

விகடனில் வெளியான செய்தி சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றதைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடுவை அழைத்து அவசர ஆலோசனை நடத்திய கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், மதிய உணவு வழங்குவதற்கான கோப்புகளை உடனே தயார் செய்யும்படி உத்தரவிட்டிருக்கிறார்.

Published:Updated:
புதுச்சேரி அரசு

கொரோனா தொற்று நாடெங்கும் தீவிரமாகப் பரவத் தொடங்கியதையடுத்து முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக 2020, மார்ச் மாதம் இறுதியில் புதுச்சேரியில் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன. அதையடுத்து மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின்னர் அக்டோபர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு, 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பெற்றோர்கள் அனுமதியுடன் சந்தேகம் தொடர்பான வகுப்புகள் நடத்தப்பட்டுவந்தன. டிசம்பர் மாத தொடக்கத்தில், `புதுச்சேரியில் கொரோனா தொற்றின் தீவிரம் குறைந்துவிட்டதால் 2021, ஜனவர் 4-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்’ என்றும், `1 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வந்து சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம்’ என்றும் அறிவித்தது கல்வித்துறை.

அரசுப்பள்ளி மாணவர்கள்
அரசுப்பள்ளி மாணவர்கள்

மேலும் அந்த அறிவிப்பில் வாரத்தில் ஆறு நாள்கள் காலை 10 மணி முதல் 1 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என்றும், வருகைப் பதிவேடுகள் கிடையாது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல ஜனவரி 18-ம் தேதியிலிருந்து பள்ளிகள் முழு நேரமாக இயங்கும் என்றும் தெரிவித்திருந்தது. மாணவர்களைப் பள்ளிகளுக்குள் அனுமதிக்க கண்டிப்பாக பெற்றோர்களின் விருப்பக் கடிதம் தேவை என்றும், பள்ளி மற்றும் வகுப்பறைகளில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டது கல்வித்துறை. அதன்படி பள்ளிகளும் திறக்கப்பட்டன. ஆனால் மாணவர்களுக்கான மதிய உணவை நிறுத்திவிட்டது புதுச்சேரி அரசு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதேபோல கலைஞர் கருணாநிதி பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட காலைச் சிற்றுண்டித் திட்டமும் அன்று ஒரு நாளுடன் முடிவுக்கு வந்துவிட்டது. இந்தநிலையில்தான் புதுச்சேரி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட வீடியோவில் பேசும் புராணசிங்குபாளையம் பாவேந்தர் பாரதிதாசன் அரசுப் பள்ளி மாணவன், ``ஸ்கூல்ல சாப்பாடே போட மாட்றாங்க சார். பசி எடுக்குது சார்!” என்று உருக்கமாகப் பேசும் காட்சி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. அந்தச் செய்தியை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடுவின் விளக்கத்துடன் விகடன் இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தோம்.

சமூக வலைதளங்களில் அந்தச் செய்தி வைரலானதையடுத்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடுவை அழைத்து அவசர ஆலோசனை நடத்திய கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், மதிய உணவு வழங்குவதற்கான கோப்புகளைத் தயார் செய்யும்படி உத்தரவிட்டிருக்கிறார். மேலும் `அடுத்த வாரம் முதல் பள்ளிகள் வழக்கம்போல முழு நேரமும் திறக்கப்படும்’ என்றும், `அன்றிலிருந்து மதிய உணவும் வழங்கப்படும்’ என்றும் தெரிவித்திருக்கிறது கல்வித்துறை.

இது தொடர்பாக அமைச்சர் கமலக்கண்ணனைத் தொடர்புகொண்டபோது, ``அடுத்த வாரம் முதல் அனைத்துப் பள்ளிகளும் மாலை வரை வழக்கம்போல இயங்கும். அதேபோல மதிய உணவும் வழக்கம்போல வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவருகின்றன” என்றார்.