பா.ஜ.க ஆட்சியில் இல்லாத தமிழ்நாடு, தெலங்கானா, பஞ்சாப், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஆளுங்கட்சிக்கும், ஆளுநருக்குமிடையே மோதல்போக்குகளே நிலவுகின்றன. பஞ்சாப்பில் சட்டமன்றத்தைக் கூட்ட ஆளுநர் ஒப்புதல் தராதது, தமிழ்நாட்டில் இந்த ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரசு தயார்செய்து கொடுத்த உரையில் சிலவற்றை ஆளுநர் வாசிக்காமல் தவிர்த்தது, தெலங்கானாவில் ஆளுநர் இல்லாமலேயே சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டியது என நிகழ்வுகள் ஏராளம்.

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக முதல்வர் தனித் தீர்மானம் கொண்டுவந்த சில மணிநேரங்களில், கிடப்பில் போடப்பட்டிருந்த ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கினார். இந்த நிலையில், இதே போன்ற சம்பவம் தெலங்கானாவிலும் நேற்று அரங்கேறியிருக்கிறது.
தெலங்கானாவில் முதல்வர் கே.சந்திரசேகர ராவுக்கும், ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்குமிடையே மோதல்போக்கு நிலவிவரும் சூழலில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் அரசியல் சாசன உரிமைகளுக்கு எதிராக ஆளுநர் தமிழிசை செயல்படுகிறார் எனவும், உடனடியாக மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் ஆளும் பி.ஆர்.எஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கும் வந்தது. ஆனால், விசாரணைக்கு சில மணிநேரங்களுக்கு முன்பாக மூன்று மசோதாக்களுக்கு மட்டும் ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்திருக்கிறார்.

இது குறித்து, உச்ச நீதிமன்ற விசாரணையின்போது ஆளுநர் தரப்பு வழக்கறிஞர் அளித்த கடிதத்தில், `தெலங்கானா மோட்டார் வாகன வரிவிதிப்பு திருத்த மசோதா, தெலங்கானா நகராட்சிகள் திருத்த மசோதா, பேராசிரியர் ஜெயசங்கர் தெலங்கானா வேளாண் பல்கலைக்கழக திருத்த மசோதா ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது' எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் நிலுவையிலிருக்கும் மசோதாக்களில் இரண்டு மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும், மூன்று மசோதாக்கள் ஆளுநரின் பரிசீலனையில் இருப்பதாகவும், இரண்டு மசோதாக்கள் குறித்து அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.