Published:Updated:

`அரசியலுக்குத் தகுதியற்றவன்; எம்.எல்.ஏ-வின் ராஜினாமா முடிவு!’ - தொடரும் மகாராஷ்டிரா குழப்பம்

நான் அரசியல் செய்யத் தகுதியற்றவன் என்பதை அமைச்சரவை விரிவாக்கம் நிரூபித்துள்ளது. கட்சியின் எந்த ஒரு தலைவர் மீதும் எனக்கு அதிருப்தியில்லை என்று கூறியுள்ளார் எம்.எல்.ஏ பிரகாஷ் சோலங்கே.

எம்.எல்.ஏ பிரகாஷ் சோலங்கே
எம்.எல்.ஏ பிரகாஷ் சோலங்கே ( facebook )

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க - சிவசேனா கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து பா.ஜ.க-வுக்கும் சிவசேனாவுக்கும் இடையே ஏற்பட்ட பதவி மோதலால் சிவசேனா, கூட்டணியிலிருந்து பிரிந்தது. பின்னர், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சிவசேனா கூட்டணி அமைக்கப் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் நடுவே, தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் பா.ஜ.கவுக்கு ஆதரவு தெரிவிக்க, பா.ஜ.க ஆட்சி அமைத்தது. உச்சநீதிமன்றம் வரை சென்ற இந்த விவகாரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டது. இதில் பா.ஜ.க பின்வாங்கியதைத் தொடர்ந்து, சிவசேனா தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்தது.

Maharashtra Cabinet
Maharashtra Cabinet
twitter

சிவசேனாவின் உத்தவ் தாக்ரே கடந்த மாதம் 28 -ம் தேதி மகாராஷ்டிராவின் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். ஆட்சி அமைத்து ஒரு மாதம் ஆன நிலையில் நேற்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் உத்தவ் தாக்ரேவின் மகன் ஆதித்ய தாக்ரே உட்பட 36 பேர் அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில், தேசியவாத காங்கிரஸின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான பிரகாஷ் சோலங்கே தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். இவர், மஜல்கான் தொகுதியில் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ பிரகாஷ் சோலங்கே, ``நான் அரசியல் செய்யத் தகுதியற்றவன் என்பதை அமைச்சரவை விரிவாக்கம் நிரூபித்துள்ளது. சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதற்கு முன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களிடம் எனது முடிவைத் தெரிவித்துள்ளேன். செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சபாநாயகரைச் சந்தித்து எனது ராஜினாமா கடிதத்தைக் கொடுக்கப் போகிறேன். அமைச்சரவை விரிவாக்கத்திற்கும் எனது ராஜினாமாவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கட்சியின் எந்த ஒரு தலைவர் மீதும் எனக்கு அதிருப்தியில்லை” என்றார்.

எம்.எல்.ஏ - பிரகாஷ் சோலங்கே
எம்.எல்.ஏ - பிரகாஷ் சோலங்கே
Twitter

அமைச்சரவை விரிவாக்கம் நடந்த சில மணி நேரங்களிலேயே பிரகாஷ் சோலங்கே இந்த முடிவை எடுத்திருப்பது அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டமன்ற உறுப்பினர்களில் 54 பேர் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், 56 பேர் சிவசேனா கட்சியினைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.