Published:Updated:

ஆறு பேர் விடுதலை: ``கடமை தவறிய ஆளுநர் பதவி விலகுவதே சரி!" - திருமாவளவன்

திருமாவளவன்

``மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்தான் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்திருக்கிறது." - திருமாவளவன்

ஆறு பேர் விடுதலை: ``கடமை தவறிய ஆளுநர் பதவி விலகுவதே சரி!" - திருமாவளவன்

``மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்தான் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்திருக்கிறது." - திருமாவளவன்

Published:Updated:
திருமாவளவன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆறு பேரை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவேற்ற வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், ``ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் உழன்ற நளினி, முருகன் உள்ளிட்ட ஆறு பேரை இன்று உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு ஈடேறியிருக்கிறது. இந்த விடுதலைக்கு ஏதுவாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழ்நாடு அரசுக்கு, குறிப்பாக முதல்வருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

திருமாவளவன்
திருமாவளவன்

நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி நாகரத்னம்மா ஆகியோரின் அமர்வு அளித்திருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பில் ஆளுநரின் அதிகாரம் குறித்த முக்கியமான கருத்தும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ‘மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்தான்’ என்பதை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்திருக்கிறது. ஆளுநர் அரசமைப்புச் சட்டப்படி தன் பொறுப்பை உணர்ந்து அவர் ஆற்றவேண்டிய கடமையைச் செய்யாமல் தட்டிக் கழித்திருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறது. எனவே, தான் கடமை தவறிய பிழையை ஏற்று ஆளுநர் இந்தச் சூழலில் பதவி விலகுவதே சரியாகும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்டுகிறது.

ஆர்.என்.ரவி
ஆர்.என்.ரவி

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இரண்டு முக்கியமான அம்சங்களை சுட்டிக்காட்டுகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161-ன் கீழ் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தண்டனை குறைப்புச் செய்வதற்கு மாநில அரசுக்கு முழுமையான அதிகாரம் இருக்கிறது என்பதை இது உறுதிப்படுத்தியிருக்கிறது. எனவே, அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி இதுபோல் நீண்டகாலமாக சிறையில் இருப்பவர்களுக்கு அவர்களது நன்னடத்தையைக் கணக்கில்கொண்டு, அவர்கள் தண்டனைக் குறைப்புக்குத் தகுதியானவர்களாக இருந்தால், அவர்களையும் விடுவிப்பதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். தமிழ்நாடு ஆளுநர், இந்தத் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் அவரது அதிகார வரம்பைப் புரிந்துகொண்டு தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பியிருக்கும் சட்ட மசோதாக்களுக்கு இனியும் காலம் தாழ்த்தாமல் உடனே ஒப்புதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்" என திருமாவளவன் குறிப்பிட்டிருக்கிறார்.