Published:Updated:

துணிந்த விவசாயிகள்... பணிந்த மோடி!

கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில் 312 தொகுதிகளைப் பிடித்து அசுரத்தனமான பெரும்பான்மையுடன் ஆட்சி செய்துவருகிறது பா.ஜ.க.

பிரீமியம் ஸ்டோரி

அரசியல் தலைவர்கள் பொதுவெளியில் மன்னிப்பு கேட்பது அரிதான விஷயம். அதிலும், ‘வலிமையான தலைவர், எடுத்த முடிவிலிருந்து எந்தக் காரணத்துக்காகவும் பின்வாங்க மாட்டார்' என்று, துணிச்சலின் அடையாளமாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு தலைவர் மன்னிப்பு கேட்பது மிக மிக அபூர்வம். பிரதமர் நரேந்திர மோடி அந்த அபூர்வத்தைச் செய்திருக்கிறார்.

மத்திய அரசு நடைமுறைப்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் ஓராண்டை நெருங்கும்நிலையில், அந்தச் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்திருக்கிறார் மோடி. கூடவே, ‘‘இதற்காக நான் உண்மையான, பரிசுத்தமான இதயத்துடன் மன்னிப்பு கோருகிறேன்'' என்றும் சொன்னார்.

மோடி இப்படிப் பொதுவெளியில் மன்னிப்பு கோருவது இது இரண்டாவது முறை. கொரோனா காலத்தில் ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுத்ததற்காக கடந்த மார்ச் மாதம் மன்னிப்பு கோரினார். ‘மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசும்போது, ‘‘இதனால் உங்கள் வாழ்க்கை சிரமத்துக்கு உள்ளானது. குறிப்பாக ஏழை மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். உங்களில் சிலருக்கு என்மீது கோபம் இருக்கும். ஆனால், கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தக் கடுமையான நடவடிக்கைகள் தேவைப்பட்டன'' என்றார் அவர்.

துணிந்த விவசாயிகள்... பணிந்த மோடி!

அப்போது மக்கள் போராடவில்லை. மன்னிப்பு கேட்பதற்கு அரசியல் நிர்ப்பந்தங்களும் இல்லை, என்றாலும் மோடி மன்னிப்பு கேட்டார். ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்று பல விஷயங்களுக்காக பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றன. எதையும் அவர் காதில் வாங்கியதில்லை.

காங்கிரஸோ, ஆக்ரோஷமான தலைவரான மம்தா பானர்ஜியோ கொடுக்காத நெருக்கடியை மோடிக்கு விவசாயிகள் கொடுத்தனர். போராட்டத்தைக் கண்டுகொள்ளாமலே விட்டால், விவசாயிகள் களைத்துப்போய் ஊர் திரும்பிவிடுவார்கள் என்று நினைத்தார் மோடி. சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டங்கள் ஒரு கட்டத்துக்குப் பிறகு அப்படித்தான் நீர்த்துப் போயின. ஆனால், விவசாயிகள் வேறுவிதமான யுக்திகளைக் கையாண்டனர்.

குறிப்பாக, பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத், ‘‘மோடியின் ஈகோவையும் பிடிவாதத்தையும் எதிர்த்தே நாங்கள் போராடுகிறோம்'' என்றார். வட மாநிலங்களில் செல்வாக்கான ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர் இவர். உத்தரப்பிரதேசம், ஹரியானா மாநிலங்களில் கிசான் மகா பஞ்சாயத்துகளை நடத்தி ஆயிரக்கணக்கான விவசாயிகளைத் திரட்டி மோடி அரசுக்கு எதிராக முழங்கினார் இவர். ஹரியானாவின் எல்லனாபாத் தொகுதியில் கடந்த மாதம் இடைத்தேர்தல் வந்தது. ‘பா.ஜ.க-வுக்கு வாக்களிக்காதீர்கள்' என்று அங்கு போய் பிரசாரம் செய்தார் ராகேஷ் திகைத். அந்தத் தேர்தலில் பா.ஜ.க தோற்றுவிட்டது. அதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம். ‘கடந்த முறை தாமரைக்கு வாக்களித்தது எங்கள் தவறு. இம்முறை அதைச் செய்ய மாட்டோம்' என அங்கு அவர் செய்துவரும் பிரசாரம், பா.ஜ.க-வுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

துணிந்த விவசாயிகள்... பணிந்த மோடி!

இப்படிப்பட்ட அரசியல் சூழ்நிலையில்தான் மோடி பின்வாங்கியதும் அவர் மன்னிப்பு கோரியதும் முக்கியத்துவம் பெறுகிறது. ‘இந்த தேசத்துக்கு ஒரு வலிமையான தலைவர் தேவை' என்று சொல்லியே பா.ஜ.க-வினர் மோடியின் இமேஜைக் கட்டமைத்தனர். மன்மோகன் சிங்கை பலவீனமான பிரதமராகக் காட்டி, பிராண்ட் மோடியை உருவாக்கினர். தேசத்தின் நலனுக்காகத் தியாகம் செய்பவர், குறுகிய அரசியல் லாபங்களுக்காக வளைந்துகொடுக்காத உறுதியான தலைவர் என்றெல்லாம் அந்த இமேஜ் கட்டமைக்கப்பட்டது. காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து தரும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்தபோது, ‘‘56 இன்ச் மார்பளவு கொண்ட உறுதியான தலைவர் மோடி. எந்தப் பிரதமருக்கும் இதைச் செய்ய துணிச்சல் இருந்ததில்லை'' என்று அமித் ஷா புகழ்ந்தார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்னும் ஒருபடி மேலே போய், ‘‘மோடியின் மார்பளவு 56 இன்ச் இல்லை, 65 இன்ச்'' என்று வீரப்பிரதாபத்தை இன்னும் உயர்த்தினார்.

இப்படி இரும்பு மனிதராகக் கட்டமைக்கப்பட்ட மோடி, யு டர்ன் அடித்துப் பணிந்தது, அவரின் ஆதரவாளர்களுக்கே ஏமாற்றம் தந்திருக்கும். துணிந்து போராடி விவசாயிகள் பெற்ற வெற்றி, எதிர்க்கட்சிகளுக்குப் புது உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. சி.ஏ.ஏ சட்டத்தை வாபஸ் வாங்குமாறு கேட்கிறார்கள், காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து தரக் கேட்கிறார்கள். ஓய்ந்துபோன இன்னும் பல கோரிக்கைகள் புத்துயிர் பெற்றிருக்கின்றன.

இன்னொரு பக்கம், மோடியின் இமேஜை வேறுவிதமாகக் கட்டமைக்க பா.ஜ.க பிரயத்தனம் எடுக்கிறது. ‘மக்கள் நலனே அவருக்கு முக்கியம். அதற்காக எப்படிப்பட்ட முடிவையும் எடுக்கத் தயங்க மாட்டார்' என்பதான ‘கனிவான மக்கள் காவலன்' இமேஜ்தான் அது. வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக மோடி அறிவித்ததும், வரிசையாக பா.ஜ.க தலைவர்கள் பலர் அவரைப் புகழ்ந்தது இதற்காகத்தான். அடுத்து வர உள்ள தேர்தல்களை இந்த இமேஜுடன் மோடி சந்திப்பார்.

துணிந்த விவசாயிகள்... பணிந்த மோடி!

உண்மையில் வேளாண் சட்டங்கள் அளவுக்கு பா.ஜ.க-வுக்குப் பின்னடைவைக் கொடுத்த விஷயம் வேறு எதுவும் இல்லை. ராஜஸ்தானில் கூட்டணியில் இருந்த ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியது. ஹரியானாவில் ஜன்நாயக் ஜனதா கட்சி கூட்டணியுடன்தான் பா.ஜ.க ஆட்சியில் இருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவர் துஷ்யந்த் சௌதாலாவை சமூக விலக்கம் செய்துவிட்டார்கள் விவசாயிகள். ‘‘வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்காவிட்டால் மாநிலத்தில் நாம் அரசியலே செய்ய முடியாது'' என்று டெல்லிக்கு நடையாய் நடந்து முறையிட்டு அலுத்துப்போனார் அவர்.

இந்த மாநிலங்களிலாவது இப்போதைக்குத் தேர்தல் இல்லை. ஆனால், வரும் பிப்ரவரி தொடங்கி ஏப்ரல் மாதத்துக்குள் தேர்தல் நடக்கவுள்ள உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலங்களில் பெரும் அரசியல் குழப்பங்கள். குறிப்பாக உத்தரப்பிரதேசத் தேர்தலில் ஏதேனும் பின்னடைவு ஏற்பட்டால், அது அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியைக் காவு வாங்கிவிடும் ஆபத்து இருக்கிறது. எனவே, உ.பி தேர்தலை தனது கௌரவப் பிரச்னையாக நினைக்கிறார் மோடி.

கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில் 312 தொகுதிகளைப் பிடித்து அசுரத்தனமான பெரும்பான்மையுடன் ஆட்சி செய்துவருகிறது பா.ஜ.க. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் இதேபோன்ற வெற்றி தொடர்ந்தது. அங்கு சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகிய மூன்றுமே தனித்தனியாக நிற்கும்போது, நான்கு முனைப் போட்டியில் பா.ஜ.க-வின் வெற்றி சுலபம்தான். சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்புகளும் இதையே பிரதிபலித்தன.

ஆனால், உண்மை நிலவரம் அப்படி இல்லை. என்னதான் பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேசத்தைச் சுற்றிச் சுற்றி வந்தாலும், காங்கிரஸின் நிலையில் பெரிய முன்னேற்றம் இல்லை. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் மோசமான சரிவில் இருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளும் விட்ட இடங்களில் சமாஜ்வாடி கட்சி பெரிதாக ஸ்கோர் செய்திருக்கிறது. மற்ற கட்சிகளில் இருக்கும் செல்வாக்கான தலைவர்கள் பலரைத் தன் பக்கம் தொடர்ச்சியாக இழுத்துவருகிறார் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ். சமீப நாள்களில் அவரின் பேரணிகளுக்குப் பெருங்கூட்டம் வருகிறது.

விவசாயிகள் போராட்டத்தால் உ.பி-யில் பெரிய அளவில் லாபமடைந்தது ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி. விவசாயிகள் தலைவராக இருந்து பிரதமர் பதவி வரை உயர்ந்த சரண் சிங்கின் பேரன் ஜெயந்த் சௌத்ரி நடத்தும் கட்சி இது. மேற்கு உத்தரப்பிரதேசத்தில் ஜாட் சமூகத்தினர் கணிசமாக இருக்கிறார்கள். டெல்லி போராட்டத்துக்கு அதிக விவசாயிகள் இங்கிருந்தே வந்தனர். கடந்த தேர்தல்களில் கண்ணை மூடிக்கொண்டு பா.ஜ.க-வை ஆதரித்தவர்கள் இவர்கள். இந்தப் பகுதியில் இருக்கும் 80 தொகுதிகளில் பா.ஜ.க சிரமமின்றி ஜெயிக்கும். வேளாண் சட்டத்தால் இவர்கள் கோபமடைந்து, தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஜெயந்த் சௌத்ரி கட்சியை ஆதரிக்கிறார்கள். ஜெயந்த் இம்முறை சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார். யாதவ்கள், ஜாட்டுகள், இஸ்லாமியர்கள் என்று மூன்று சமூகத்தினர் ஆதரவும் சேரும்போது இது வலுவான கூட்டணியாக மாறிவிடும். வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கினால் ஜாட்டுகளின் கோபம் தணியும் என்று நினைக்கிறார் மோடி.

பஞ்சாப்பில் கடந்த 96-ம் ஆண்டு முதல் பா.ஜ.க கூட்டணியில் இருந்தது சிரோமணி அகாலி தளம். கிட்டத்தட்ட தொப்புள்கொடி உறவுபோல இருந்த கட்சி. வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அது கூட்டணியிலிருந்து விலகியது. இப்போது வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்ற பிறகும் ‘இதற்காக பா.ஜ.க கூட்டணியில் சேர முடியாது' என்று சொல்லிவிட்டது. பஞ்சாப் விவசாயிகளுக்கு பா.ஜ.க மீது இருக்கும் கோபமானது, வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கியதால் மட்டுமே தணிந்துவிடாது என்று கருதுகிறது அந்தக் கட்சி.

துணிந்த விவசாயிகள்... பணிந்த மோடி!

காங்கிரஸிலிருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்துள்ள முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங்குடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கலாம் என்று கணக்குப் போடுகிறது பா.ஜ.க. ‘‘வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்க வேண்டும் என்று நான் பிரதமரிடமும் அமித் ஷாவிடமும் பேசினேன்'' என்று இந்த வெற்றியில் பங்கு கொண்டாடுகிறார் அமரிந்தர் சிங். அவரின் ஆதரவாளர்களும் இதை அமரிந்தர் சிங்கின் வெற்றியாகக் கொண்டாடுகிறார்கள். சிரோமணி அகாலி தளம் தலைவர் பாதல் குடும்பத்துடன் இணக்கமான உறவில்தான் அமரிந்தர் சிங் இருக்கிறார். ஏற்கெனவே ஒருமுறை தனிக்கட்சி நடத்தியபோது, அகாலி தள அரசில் அமைச்சராக இருந்தவர் அமரிந்தர் சிங். எனவே, சிரோமணி அகாலி தளம், பா.ஜ.க., அமரிந்தரின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து வலுவான கூட்டணி அமைக்கலாம். அதற்குத்தான் பா.ஜ.க முயற்சி எடுத்துவருகிறது.

உத்தரகாண்டில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க மீது கடுமையான அதிருப்தி இருக்கிறது. வெறும் 70 தொகுதிகள் கொண்ட சிறிய மாநிலமான அங்கு சில தொகுதிகளில் காற்று திசை மாறி அடித்தாலும், ஆட்சி மாறிவிடும். அங்கு சுமார் 10 தொகுதிகளில் முடிவைத் தீர்மானிப்பவர்களாக சீக்கியர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பலரும் டெல்லி போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள். உத்தரகாண்டில் பா.ஜ.க-வுக்குக் கடும் சவாலைக் கொடுக்கும் அளவுக்கு காங்கிரஸ் வலுவாக இருக்கிறது.

வேளாண் சட்டங்களும், அவற்றை வாபஸ் பெற்றதும் இந்த மாநிலங்களில் தேர்தல் களத்தை சுவாரசியமானதாக மாற்றியுள்ளன.

தேர்தல் இல்லாத காலங்களில் இரும்பு மனிதராகவும், தேர்தல் களத்தில் கனிவான மக்கள் காவலராகவும் பா.ஜ.க-வுக்கு மோடி தேவைப்படுகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு