Published:Updated:

`நான் பேசியதை மட்டும் பதிவு செய்தார்கள்!’-போலீஸை மிரட்டியதுகுறித்து ஆற்காடு அ.தி.மு.க நகரச் செயலாளர்

ஆற்காட்டில், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த காரை எடுக்குமாறு கூறிய காவல்துறையினருக்கு, அ.தி.மு.க நகரச் செயலாளர் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அ.தி.மு.க நகரச் செயலாளர் ‘ஜிம்’ சங்கர்
அ.தி.மு.க நகரச் செயலாளர் ‘ஜிம்’ சங்கர்

வேலூர் மாவட்டம் ஆற்காடு நகரின் அ.தி.மு.க செயலாளராக இருப்பவர், ‘ஜிம்’ சங்கர். இவர், ஆற்காடு பேருந்து நிலையம் அருகில் நேற்று காரை நிறுத்திவிட்டு யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். இவரின் கார், பாதையை மறித்திருந்ததால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் நெரிசலில் சிக்கிக்கொண்டன. 'கார் யாருடையது, பாதையிலிருந்து உடனே எடுங்கள்’ என்று ஒரு அரசுப்பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர், பயணிகள் சிலரும் சத்தம்போட்டுத் திட்டியுள்ளனர். 

‘ஜிம்’ சங்கர்
‘ஜிம்’ சங்கர்

இதில் ஆத்திரமடைந்த நகரச் செயலாளர் சங்கர் பேருந்தை மறித்து, ‘‘நான் யார் தெரியுமா? அது, என்னுடைய கார். தைரியம் இருந்தால் மோதிப்பாருங்கள். அப்போது புரியும்’’ என்று வாக்குவாதம் செய்ததாகச் சொல்கிறார்கள். அந்த நேரத்தில் அங்கு போக்குவரத்தை சரிசெய்துகொண்டிருந்த காவலர்கள் நான்கு பேர், ‘‘சார் நீங்க யாராக வேணாலும் இருங்க; ரோட்டுல நிறுத்தியிருக்கிற காரை முதலில் எடுங்க’' என்றனர். 

அ.தி.மு.க நகரச் செயலாளர் சங்கர், காவல்துறையினரைப் பார்த்து, ‘‘யூனிஃபார்மில் இருக்கிற தைரியமா... என்னப் பார்த்து வாடா போடானு பேசுகிறீர்களா... நாளைக்கு உங்களை என்ன பண்றேன்னு பாருங்க’’ என்று மிரட்டும் தொனியில் பேசும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இதுபற்றி, காவல்துறை உயரதிகாரிகளிடம் அந்தக் காவலர்கள் புகார் சொல்லியிருக்கிறார்கள்.

என்னைப் பார்த்து, ஒரு இளம் காவலர் ஆபாசமாகவும் ஒருமையிலும் பேசினார். பதிலுக்கு நானும் திட்டினேன்.
அ.தி.மு.க நகரச் செயலாளர் ‘ஜிம்’ சங்கர்

அதிகாரிகள், நகரச் செயலாளருக்கு ஆதரவாகப் பேசி காவலர்களைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதுபற்றி, ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தனிடம் கேட்டதற்கு, ‘‘நீங்க சொல்ற மாதிரியான வீடியோ என் செல்போனுக்கும் வரல, காவலர்களும் என்னுடைய கவனத்துக்குக் கொண்டு வரல’’ என்றார்.

சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க நகரச் செயலாளர் ‘ஜிம்’ சங்கரிடமே பேசினோம். ‘‘பள்ளிக் குழந்தைகள் சென்று கொண்டிருந்தார்கள். அதனால், நான் மெதுவாகச் சென்றேன். என் பின்னால் வந்த அரசுப் பேருந்தில் இருந்த ஒரு பயணியும், ஓட்டுநரும் ஒருமையில் என்னை மிக ஆபாசமான வார்த்தைகளால் திட்டி, `மாட்டுவண்டி ஓட்டுறியாடா’ என்று கேட்டனர். எனக்குக் கோபம் வந்தது. பதிலுக்கு நானும் திட்டினேன்.

அ.தி.மு.க நகரச் செயலாளர் ‘ஜிம்’ சங்கர்
அ.தி.மு.க நகரச் செயலாளர் ‘ஜிம்’ சங்கர்

அங்கு வந்த காவலர்களில் ஒருவருக்கு 22 வயதுதான் இருக்கும். யூனிஃபார்ம் போட்டால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா... என்னைப் பார்த்து, அந்த இளம் காவலர் ஆபாசமாகவும் ஒருமையிலும் பேசுகிறார். யாருக்குமே கோபம் வரும். அவர்கள் பேசியது, செய்ததையெல்லாம் செல்போனில் ரெக்கார்ட் செய்யாமல், நான் பேசியதை மட்டும் பதிவுசெய்து சமூக வலைதளங்களில் எனக்கு எதிராகப் பரப்பிவிட்டுள்ளனர்’’ என்றார்.