Published:Updated:

ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறனை ஸ்டாலின் கண்டிக்கவில்லை... ஆர்ப்பாட்டத்துக்கு காரணம் சொல்லும் அ.தி.மு.க

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

சொன்னபடியே நேற்று காலை தமிழகத்தின் பல பகுதிகளில், பதாகைகளை ஏந்தி, தி.மு.க-வுக்கு எதிராகக் கோஷமிட்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர் அ.தி.மு.க-வினர்.

``தமிழகத்தின் உயர் பதவிகளில் உள்ள பட்டியலின மக்களைத் தொடர்ந்து இழிவாகப் பேசி வரும் தி.மு.க நிர்வாகிகளைக் கண்டித்தும், தலைமைப் பொறுப்பில் இருந்துகொண்டு தி.மு.க-வினரின் பேச்சுக்களைக் கண்டிக்காத தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினைக் கண்டித்தும் அ.தி.மு.க-வின் சார்பில் ஜூன் 1-ம் தேதி காலை 10.30 -11 மணி வரை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என கடந்த 29-ம் தேதி அ.தி.மு.க தலைமைக் கழகத்தின் சார்பாக, ஒவ்வொரு மாவட்டச் செயலாளருக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. முழக்கமிடுபவர் பதாகைகளுடன் எப்படி நிற்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகளையும் எழுப்ப வேண்டிய முழக்கங்களையும் கூட அந்த அறிக்கையிலேயே குறிப்பிட்டிருந்தது அ.தி.மு.க தலைமைக் கழகம்.

அ.தி.முக தொண்டர்கள்
அ.தி.முக தொண்டர்கள்

இது குறித்து நாளிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் செய்திகளும் வெளியாகின. கொரோனா காலத்தில் இது தேவையற்ற வேலை என்றும், ஆளும் கட்சி எதிர்க்கட்சியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது கேலிக்கூத்தானது என்றும், இந்த ஆர்ப்பாட்டம் குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனாலும், சொன்னபடியே, நேற்று காலை தமிழகத்தின் பல பகுதிகளில், ஆர்ப்பாட்டம் நடத்தினர் அ.தி.மு.க-வினர்.

கொரோனா நெருக்கடி, ஊரடங்கு இதற்கு மத்தியிலும், தமிழகத்தின் பல இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்திருக்கிறது. முறையாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் முகக்கவசங்கள் அணியாமலும் பல இடங்களில் மக்கள் கூடியிருக்கிறார்கள். ஐந்து பேருக்கு மேல் ஒன்றாகக் கூடக்கூடாது என்கிற அறிவுறுத்தல்களை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு, பதாகையை ஏந்தியபடி காட்சியளிக்கிறார்கள் அ.தி.மு.க தொண்டர்கள். ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதியில்லை என ஆளும் அரசு வெளியிட்ட அரசாணையை ஆளும் கட்சியே மீறியிருக்கிறது.

வன்னியரசு
வன்னியரசு

இது ஒருபுறமிருக்க, `அ.தி.மு.க-வின் இந்த ஆர்ப்பாட்டம் அரசியல் தவிர வேறெதும் இல்லை' எனக் கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.

இதுகுறித்து, நம்மிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு,

``கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழகம் முழுவதும் 35 இடங்களில் பட்டியலின மக்களின் மீது வன்கொடுமை நடந்துள்ளது. மூன்று ஊராட்சிகளில், ஊராட்சி மன்றத் தலைவியாகப் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் பதவியேற்க முடியவில்லை. ஓமலூர், திருச்செந்தூர் ஆகிய இடங்களில் சாதியப் படுகொலைகளும் நடந்திருக்கின்றன. 28 மாவட்டங்கள் தீண்டாமை அதிகமாக இருக்கின்ற வன்கொடுமை மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. உண்மையாகவே பட்டியலினத்தவர்களின் மீது தமிழக முதல்வருக்கு அக்கறை இருந்தால், இதுபோன்ற அவலங்கள் நடைபெறாமல் தடுத்திருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, பட்டியலின மக்களுக்கு எதிராக நடந்துகொள்ளும் பா.ம.க-வை, பா.ஜ.க-வை கூட்டணியில் வைத்துக்கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களின் மீது கரிசனமாக நடந்துகொள்வதாகக் காட்டிக்கொள்வது ஏமாற்றுவேலை. தாழ்த்தப்பட்ட மக்களின் மீது வன்கொடுமையைக் கட்டவிழ்த்து விடுகிறவர்களைக் கைது செய்யும் அதிகாரம் முதல்வரிடம் இருக்கிறது. ஆனால், அவர் அதைச் செய்யவில்லை. மூன்று ஆண்டுகளாகப் பட்டியலின மக்களுக்கு ஆதரவாக நடக்கக்கூடிய கண்காணிப்புக் குழுவையும் முதல்வர் கூட்டவில்லை. இதற்காகவே அவர் மீது வழக்கு தொடர முடியும்'' என்கிறார் வன்னியரசு.

வன்னியரசின் கருத்து இப்படியிருக்க, ``போராட்டம் நடத்துவதற்கான கூறு, தி.மு.க-வினரின் பேச்சில் இருந்தது உண்மைதான். ஆனால், போராட்டம் நடத்துவதற்கான நேரம் இதுவல்ல என்கிறார்'' என்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ்.

``ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான வழக்கும் நீதிமன்றத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டிய அவசியமில்லை. தயாநிதி மாறனின் பேச்சையும், ஆர்.எஸ்.பாரதியின் பேச்சையும் தி.மு.க-வின் கொள்கையாகப் பார்க்க முடியாது. நம் சமூகத்தில் பல ஆண்டுகளாகப் புரையோடிப் போயிருக்கும் சாதிய மனவோட்டத்ததின் வெளிப்பாடுதான் அது. ஜெ.அன்பழகன், பழனிவேல் தியாகராஜன் பேச்சும் அத்தகையதே. இது போன்ற பேச்சுக்களை ஸ்டாலின் கடுமையாகக் கண்டிக்க வேண்டும். ஆனால், அவர் அதைச் செய்யத் தவறிவிட்டார். ஆனால், பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடக் கூடாது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என மக்களை வலியுறுத்தி வரும் வேளையில், ஆளும்கட்சியே இத்தகைய போராட்டம் நடத்துவதென்பது சமூகத்தை தவறான வழிநடத்தும் செயலே. கொரோனா விஷயத்தை திசைதிருப்பவே அ.தி.மு.க இதைக் கையில் எடுத்திருக்கிறது என்பதே எங்கள் கருத்து'' என்கிறார் முரளி அப்பாஸ்.

முரளி அப்பாஸ்
முரளி அப்பாஸ்

``ஆளும்கட்சி எதிர்க்கட்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது என்பது பா.ஜ.க-வின் வழிமுறை. தற்போது அ.தி.மு.க-வும் அதைக் கையில் எடுத்திருக்கிறது. இது ஜனநாயகக் கேலிக்கூத்து'' என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ராதாகிருஷ்ணன்.

``144 தடை உத்தரவு அமலில் இருக்கும் இடங்களில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. ஆனால், மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்யும் இரண்டு கட்சிகளுக்குமே அவர்கள் வைத்ததுதான் சட்டம். ஹெச்.ராஜா என்ன வேண்டுமானாலும் பேசலாம், அமைச்சர்கள் என்ன வேண்டுமாலும் பேசலாம், திண்டுக்கல் சீனிவாசன் ஒரு சிறுவனை செருப்பு மாட்டிவிடச் சொல்லலாம். ஆனால், அவர்கள் மீதெல்லாம் எந்த நடவடிக்கையும் பாயாது. அதே, ஆர்.எஸ்.பாரதி பேசினால் வழக்கு பாயும்... கடுமையான நடவடிக்கைகள் பாயும். இவர்கள் குறிப்பிட்ட மக்களுக்காகப் போராடுகிறார்கள் என்றால் அதை யாரும் நம்பமாட்டார்கள்.

மக்களுக்காக இவர்கள் ஆட்சி செய்கிறார்கள் என்றால் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அதைக் காட்டியிருப்பார்கள். சென்னை மாநகராட்சியை எடுத்துக்கொண்டால்கூட சுகாதாரத்துறை, காவல்துறை, மாநகராட்சி நிர்வாகத்தை ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்கத் தவறிய இவர்கள், மக்களுக்காகப் போராடுகிறார்கள் என்பது வேடிக்கையாக இருக்கிறது. அதுவும், எதிர்க்கட்சியினரை எதிர்த்துப் போராட்டம் நடத்துகிறார்கள். தான் செய்வது அனைத்தும் சரி எனும் பா.ஜ.க-வினரின் வழிமுறைதான் இது. இதனால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது'' என்கிறார் அவர்.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

ஸ்டாலின் கண்டிக்கத் தவறியதுதான் இந்தப் போராட்டத்துக்கான காரணமா?

எழும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க-வின் சட்டத்துறை இணைச் செயலாளருமான ரவிச்சந்திரனிடம் பேசினோம்,

``ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன் போன்றோரின் கருத்துகள் பேச்சு வாக்கில் வந்ததே தவிர அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. தவிர ஆர்.எஸ்.பாரதி சொன்ன கருத்துகள் உண்மையும்கூட. தி.மு.க-வால்தான் இன்று பட்டியலின மக்கள் முன்னேறியிருக்கிறோம். அதனால், ஆர்.எஸ்.பாரதியின் பேச்சை பெரிதுபடுத்தத் தேவையில்லை. எங்கள் தலைவர் ஸ்டாலின், அதைக் கண்டிக்க வேண்டிய அவசியமே எழவில்லை. இருந்தபோதும் எங்கள் தலைவர், `பொதுவெளியில் பேசும்போது கவனமாகப் பேசுங்கள்' என அறிவுறுத்தினார். எங்கள் தலைவர் கண்டிக்கவில்லை என அ.தி.மு.க-வினருக்கு எப்படித் தெரியும்? வி.பி.துரைசாமி தனது திறமையின்மையை மறைப்பதற்காக ஜாதியைக் கையிலெடுக்கிறார். அதைவிடுங்கள், பட்டியலின மக்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தும் தகுதி அ.தி.மு.க-வினருக்கு இருக்கிறதா? பட்டியலினத்துக்காக அ.தி.மு.க என்ன செய்திருக்கிறது? ஆடு நனையுதே என்று ஓணான் அழுத கதையாகத்தான் இந்த ஆர்ப்பாட்டம் இருக்கிறது. `ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம் எங்கள் தலைவருக்குக் கிடைத்திருக்கும் நற்பெயரைக் கெடுப்பதற்காகவே, இது போன்ற செயலில் ஈடுபடுகின்றனர்'' என்கிறார் ரவிச்சந்திரன்.

50:50... வீட்டுக்கு வீடு ஸ்கூட்டி... அ.தி.மு.க-வின் தேர்தல் அஜெண்டா! #TNElection2021
ஒரு இடத்தில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கு சட்டப்படி அனுமதி இல்லை. சட்டத்தை மீறித்தான் தற்போது ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்பதன் வெளிப்பாடுதான் இது. அ.தி.முக அரசின் இந்தச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
வழக்கறிஞர் புகழேந்தி.

மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்து, அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர், கோவை செல்வராஜிடம் பேசினோம்,

``முதலில் நான் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அ.தி.மு.க இந்தப் போராட்டத்தை நடத்தவில்லை. தமிழகம் முழுவதும் உள்ள பட்டியலின மக்கள்தான் பஞ்சாயத்து அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் முன்பாக தி.மு.க-வினரைக் கண்டித்து ஆர்ப்பார்ட்டம் நடத்துகிறார்கள். முறையான அனுமதியுடன்தான் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. அ.தி.மு.க-வுக்கும் இந்தப் போராட்டத்துக்கும் எந்தச் சம்பந்தமில்லை'' என்றவரிடம், அ.தி.மு.கவின் தலைமைக் கழக அறிக்கை குறித்துக் கேட்க, '' முதலில் அப்படியொரு அறிக்கை அனுப்பியது உண்மைதான். பிறகு கொரோனா நேரத்தில் தேவையில்லை என கட்சித் தொண்டர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டோம். தற்போது ஆர்ப்பாட்டம் நடத்தியது முழுக்க முழுக்க மக்கள்தான்'' என்றவரிடம், சரி மக்களாகவே இருந்தாலும்,அவர்களுக்கு பொது இடங்களில் ஒன்றுகூட அனுமதி அளித்தது யார் என்று கேட்க,

``சில இடங்களில் காவல்துறையினரிடம் கடிதம் கொடுத்திருக்கிறார்கள். சில இடங்களில் அனுமதி வாங்கவில்லை'' என்றவர் தொடர்ந்து மற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார்,

``பாட்டாளி மக்கள் கட்சி, ஜாதியின் பெயரால் கட்சி நடத்தவில்லை. அதனால், அவர்களோடு கூட்டணி வைத்திருப்பது குறித்த விமர்சனம் என்பது அர்த்தமற்றது. ஜாதிக்கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசியல் செய்வது தி.மு.க-தானே தவிர அ.தி.மு.க அல்ல.

கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ்

தமிழகத்தில், கடந்த சில மாதங்களாகப் பட்டியலின மக்கள் அதிகமாக வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பது தவறான தகவல். தனிப்பட்ட முறையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அந்தச் செயல்களில் ஈடுபட்டவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இனிவரும் காலங்களிலும் அது தொடரும்.

பட்டியலின மக்கள் அ.தி.மு.க-வுக்கு வாக்களிப்பது பொறுக்க முடியாமல் தி.மு.க-வினர் அவர்களைத் தொடர்ந்து இழிவாகப் பேசிவருகிறார்கள். பட்டியலின மக்களைத் தரக்குறைவாகப் பேசிய கட்சி நிர்வாகிகளை ஸ்டாலின் கண்டிக்காமல் இருக்கிறார். கண்டிப்பது என்றால் வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும். பகிரங்கமாகத் தன் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். அதுதான் ஜனநாயகம். அவர்களை எதிர்க்கும் தைரியம் ஸ்டாலினுக்குக் கிடையாது. அதனால்தான் அமைதியாக இருக்கிறார். பட்டியலின மக்களுக்கு முழு பாதுகாப்பாக இருப்பது அ.தி.மு.க-தான்.'' என்கிறார் கோவை செல்வராஜ்.

ஆளும் அரசு கொண்டு வந்த ஒரு நடைமுறையை அரசியலுக்காக ஆளும்கட்சியே மீறுவது என்பது தவறான முன்னுதாரணமாகும். என்ன காரணம் சொன்னாலும், மக்களின் மீது அக்கறையுள்ள எந்தவொரு அரசும் நிச்சயமாக இப்படி நடந்துகொள்ளாது என்பதே நிதர்சனம்.

அடுத்த கட்டுரைக்கு