தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. அந்த வகையில் புதிதாக மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட கடலூருக்கும் தேர்தல் நடைபெற்றது. அந்த வாக்குப்பெட்டிகள் கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. இன்று காலை வாக்குகளை எண்ணுவதற்காக அதிகாரிகள் சென்றபோது வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறையின் சாவி மாயமாகியிருந்தது தெரியவந்தது. அதனால் அந்த அறையின் பூட்டை அறுத்து உள்ளே சென்று வாக்கு எண்ணும் பணியைத் தொடங்கினார்கள்.

தொடக்கம் முதலே தி.மு.க அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்றுக்கொண்டிருந்தது. இன்று மதியம் சுமார் 1 மணி அளவில் 38-வது வார்டின் வாக்குப்பெட்டி எண்ணப்பட்டது. அந்த வார்டு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க சார்பில் கவிதா ரகுராமன் என்பவரும், அ.தி.மு.க சார்பில் நிஷா கந்தன் என்பவரும் போட்டியிட்டிருந்தனர். அ.தி.மு.க வேட்பாளரான நிஷா கந்தன் 1,244 வாக்குகள் பெற்ற நிலையில், தி.மு.க வேட்பாளரான கவிதா ரகுராமன் 1,275 வாக்குகள் பெற்று 31 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அதிகாரிகள் வெற்றிபெற்ற தி.மு.க வேட்பாளர் குறித்த விவரத்தை அறிவித்தபோது, தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாத அ.தி.மு.க வேட்பாளர் நிஷா கந்தன் அங்கிருந்து அழுதபடியே வெளியேறினார்.
வாக்கு எண்ணும் மையத்தைவிட்டு வெளியேறியதும் சாலையில் அமர்ந்து கதறி அழுதார். தொடர்ந்து அவர் உறவினர்கள் அவரை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அதேபோல அவர் கணவர் கந்தனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறி அவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்கிடையில் அ.தி.மு.க வேட்பாளர் நிஷா கந்தனின் மகள் வீட்டிலிருந்த கண்ணாடித் துண்டுகளால் தன் கைகளை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். ஆனால், அங்கிருந்த உறவினர்கள் அந்த முயற்சியைத் தடுத்து நிறுத்தினர். அதையடுத்து அந்த வேட்பாளரின் வீட்டின் முன் குவிந்த ஆதரவாளர்கள், ``வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறையைத் திறந்து தி.மு.க-வினர் தங்களைத் தோல்வியடையச் செய்துவிட்டார்கள்.

அதனால் மறுதேர்தல் நடத்த வேண்டும்" என்று கோஷம் எழுப்பியதால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அங்கு கலவரம் ஏற்படும் சூழல் நிலவியதால் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அப்போது அவர்களைச் சமாதானப்படுத்த காவல்துறையினர் முயன்றதால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதையடுத்து இந்த விவகாரத்தை சட்டபூர்வமாக அணுகும்படி காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. ஆனாலும், அந்தப் பகுதியில் எப்போது வேண்டுமானாலும் கலவரம் ஏற்படும் சூழல் நிலவுவதால் காவல்துறையினர் குவித்துவைக்கப்பட்டிருக்கின்றனர்.