Published:Updated:

"மன உளைச்சலுடன் என்னால் வாழ முடியாது" - யூனியன் கூட்டத்தில் தீக்குளிக்க முயன்ற கவுன்சிலரால் பரபரப்பு

தீக்குளிக்க முயன்ற கவுன்சிலர் அன்பரசு

மூன்று ஆண்டுகளாகத் தன்னுடைய தொகுதிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு பலமுறை கோரிக்கைவைத்தும், நிறைவேற்றித் தராமல் அலைக்கழிப்பதாகக் கூறி அ.தி.மு.க கவுன்சிலர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

"மன உளைச்சலுடன் என்னால் வாழ முடியாது" - யூனியன் கூட்டத்தில் தீக்குளிக்க முயன்ற கவுன்சிலரால் பரபரப்பு

மூன்று ஆண்டுகளாகத் தன்னுடைய தொகுதிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு பலமுறை கோரிக்கைவைத்தும், நிறைவேற்றித் தராமல் அலைக்கழிப்பதாகக் கூறி அ.தி.மு.க கவுன்சிலர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Published:Updated:
தீக்குளிக்க முயன்ற கவுன்சிலர் அன்பரசு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியக் கூட்டம், ஒன்றியக்குழுத் தலைவர் தமிழ்செல்வி போஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேரையூர் அ.தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் அன்பரசு பேசும்போது, "கடந்த மூன்று ஆண்டுகளாக பேரையூர் ஊராட்சிக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தராமல் அதிகாரிகளும், ஒன்றியப் பெருந்தலைவரும் அலைக்கழிக்கின்றனர். கொடுத்த மனுவுக்கு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை" என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மேலும், ``இதனால் எனக்கு வாக்களித்த மக்களுக்கு எவ்வித நன்மையும் செய்யாமலும், அவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமலும் திணறிவருகிறேன். இந்த மன உளைச்சலுடன் என்னால் உயிரோடு வாழ முடியாது" எனக் கூறியவர்... திடீரென உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு, ``எனது சாவுக்கு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்தான் காரணம்" எனக் கூறிவிட்டு தற்கொலைக்கு முயன்றதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரிடமிருந்து மண்ணெண்ணெய் கேனைப் பறித்து அன்பரசுவைத் தடுத்து நிறுத்திய கவுன்சிலர்கள், ``கூட்டத்தில் இப்படியா நடந்துகொள்வது?" எனச் சத்தம்போட்டனர்.

தர்ணாவில் ஈடுபட்ட கவுன்சிலர் அன்பரசு
தர்ணாவில் ஈடுபட்ட கவுன்சிலர் அன்பரசு

அன்பரசு, பின்னர் கூட்டத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து மற்ற கவுன்சிலர்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்ததன்பேரில் அங்கு வந்த போலீஸார் கவுன்சிலர் அன்பரசுவை அழைத்துச் சென்றனர்.

அதைத் தொடர்ந்து கூட்டத்தில் ஒன்றியக் குழு தலைவர் தமிழ்செல்வி போஸ் பேசும்போது, ``பேரையூர் ஊராட்சிக்குட்பட்ட மேட்டுப்பட்டி, பீட்டர்புரம், சாமிப்பட்டி, சேர்ந்தக்கோட்டை, செங்கோட்டைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ரூ.1.51 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 2020-21 நிதியாண்டில் ரூ.94.71 லட்சம் மதிப்பீட்டிலும், 2021-22 நிதியாண்டில் ரூ.59.62 லட்சம் மதிப்பீட்டிலும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. நடப்பு நிதியாண்டில் கோயிலுக்கு சாலை அமைக்கவும், பேரையூர் பள்ளிவாசல் தெருவில் பேவர் பிளாக் சாலைப் பணிகளுக்கும் ரூ.16 லட்சம் ஒதுக்கப்பட்டது. அரசியல் ஆதாயத்துக்காகவும், விளம்பரத்துக்காகவும் அன்பரசு தற்கொலை நாடகமாடுகிறார்" எனக் கூறினார்.