Published:Updated:

எடப்பாடி பழனிசாமி Vs ஆர்.எஸ்.பாரதி... எம்.எல்.ஏ-க்களை வசப்படுத்தும் யுத்தத்தில் அதிமுக, திமுக?

ஸ்டாலின், எடப்பாடி

எந்த அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி இப்படியொரு கருத்தைத் தெரிவித்தார் என்பது குறித்து, அதிமுக-வின் செய்தித் தொடர்பாளர் சிவசங்கரியிடம் பேசினோம்...

எடப்பாடி பழனிசாமி Vs ஆர்.எஸ்.பாரதி... எம்.எல்.ஏ-க்களை வசப்படுத்தும் யுத்தத்தில் அதிமுக, திமுக?

எந்த அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி இப்படியொரு கருத்தைத் தெரிவித்தார் என்பது குறித்து, அதிமுக-வின் செய்தித் தொடர்பாளர் சிவசங்கரியிடம் பேசினோம்...

Published:Updated:
ஸ்டாலின், எடப்பாடி

``தி.மு.க-வைச் சேர்ந்த பத்து எம்.எல்.ஏ-க்கள் எங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள்'' என அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளளர் எடப்பாடி பழனிசாமி ஒரு திரியைக் கொளுத்திப்போட, ``அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஐம்பது எம்.எல்.ஏ-க்கள் எங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள்'' என திமுக அமைப்புச் செயலாளர், ஆர்.எஸ்.பாரதி அதற்கு பதிலடி கொடுக்க அதிரி புதிரியாகியிருக்கிறது தமிழக அரசியல் களம்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் நடந்த அ.தி.மு.க பிரமுகர் இல்ல காதணிவிழாவில் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``தி.மு.க ஒரு குடும்பக் கட்சி, கார்ப்பரேட் கம்பெனி. ஆனால் அதிமுக, தொண்டர்கள் ஆளுகின்ற கட்சி. தொண்டர்கள்தான் இப்போது அதிமுக-வை ஆண்டுகொண்டிருக்கிறார்கள். தொண்டர்களால் நடத்தப்படும் அதிமுக-வில் தலைவர்களுக்கு இடமில்லை. திமுக-வின் பத்து சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள்'' என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்.

தொடர்ந்து, இது தொடர்பாக தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்

``அதிமுக-வின் 50 எம்.எல்.ஏ-க்கள், இரண்டு எம்.பி-க்கள் மற்றும் 30 மாவட்டச் செயலாளர்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி திமுக எம்.எல்.ஏ-க்களின் பட்டியலை வெளியிட்டால், நானும் அதிமுக எம்.எல்.ஏ-க்களின் பட்டியலை வெளியிடத் தயாராக இருக்கிறோம். திமுக-தான் உண்மையான திராவிட இயக்கம். இதுதான் திராவிட இயக்கத்தின் தாய்க் கழகம். அதிமுக-விலிருந்த பலரும், திமுக-வில் இணைந்து பல்வேறு பொறுப்புகளில் இருக்கிறார்கள். அதிமுக-விலுள்ள அனைவருமே இங்கே வந்து திமுக-வில் இணைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.''
ஆர்.எஸ்.பாரதி, அமைப்புச் செயலாளர், திமுக
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2017 காலகட்டத்தில் அதிமுக இரண்டு அணியாக இருந்தபோது, எடப்பாடி அணியில் என்னுடைய ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள் எனத் தொடர்ச்சியாகக் கருத்து தெரிவித்துவந்தார், டி.டி.வி.தினகரன். சில மாதங்களுக்கு முன்பாக திமுக-வின் கொள்கை பரப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் பாஜக-வில் இணைந்ததை அந்தக் கட்சியினர் கொண்டாடித் தீர்த்தனர். அந்த நேரத்தில், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில், ``திமுக-வில் எந்தப் பதவியிலும் இல்லாத ஒருவர், உங்கள் கட்சியில் இணைவதைக் கொண்டாடும் தமிழக பாஜக உங்களுக்கு ஒரு தகவல். உங்கள் கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் எங்கள் தொடர்பில் உள்ளார்கள். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் துக்கிவிடுவோம்'' எனத் தெரிவித்த கருத்து அரசியல் அரங்கில் சிறு பரபரப்பைப் பற்றவைத்தது. தற்போது, ஆளுங்கட்சிக்கும், பிரதான எதிர்க்கட்சிக்கும் இடையில் இப்படியொரு விவாதம் உண்டாகியிருக்கிறது.

சிவசங்கரி
சிவசங்கரி

இந்த நிலையில், எந்த அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி இப்படியொரு கருத்தைத் தெரிவித்தார் என்பது குறித்து, அதிமுக-வின் செய்தித் தொடர்பாளர் சிவசங்கரியிடம் பேசினோம்...

``மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஓர் அரசாக திமுக அரசாங்கம் இருந்தாலும் முதல்வர் ஸ்டாலின், அவரின் மகன் உதயநிதி ஸ்டாலின், அவரின் மருமகன் சபரீசன் என அங்கே அதிகார மையம் என்பது மூன்றாக இருக்கிறது. ஒவ்வொருவரும் அவரவருக்குப் பிடித்தமானவர்களுக்குப் பொறுப்பு கொடுப்பது, கான்ட்ராக்ட் கொடுப்பது, மந்திரிசபையில் இடம் கொடுப்பது என அதிகாரம் செலுத்திவருகிறார்கள். இப்படியிருக்கும்போது, திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு யாரிடம் செல்வது என்கிற சோர்வைக் கொடுத்துவிடுகிறது. பத்து வருடங்கள் தொடர்ந்து ஆட்சியில் இல்லாதபோது, கட்சிக்காகப் பணம் செலவழித்தவர்கள் நிர்வாகிகள்தான். ஆனால், அவர்கள் ஒரு வேலைக்காகப் போனால் தலைமையில் இருப்பவர்கள் செய்து கொடுப்பதில்லை, ஒரு கான்ட்ராக்ட்டுக்காகப் போனால் கண்டுகொள்வதில்லை, கட்சி நிகழ்ச்சிக்குப் பணம் கேட்டால் கொடுப்பதில்லை எனும்போது இயல்பாகவே அவர்களுக்கு ஒரு விரக்தி உண்டாகிவிடுகிறது.

அதனால்தான், அவர்கள் குடும்ப அரசியல் இல்லாத, ஜனநாயகமான இயக்கமான அதிமுக-வுக்கு வர விரும்புகிறார்கள். அதைத்தான் எடப்பாடியார் கூறியிருக்கிறார். ஆனால், ஆர்.எஸ்.பாரதி ஏதாவது பதில் சொல்ல வேண்டும் என்பதற்காகவே ஒரு பதிலைச் சொல்லியிருக்கிறார். எங்கள் கட்சியைவிட்டு, குடும்ப அரசியல் நிறைந்த திமுக-வுக்குப் போகிறார்கள் என்பது வேடிக்கையாக இருக்கிறது. ஆர்.எஸ்.பாரதி சொல்வது பொய் என்பது எங்களுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கே நன்றாகத் தெரியும். அதனால், அது குறித்து பதில் சொல்ல ஒன்றுமில்லை'' என்கிறார் அவர்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இது குறித்து, திமுக-வின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம்.

``நூற்றுக்கு நூறு பொய்யான ஒரு தகவலை அதிமுக-வினர் பரப்பிவருகிறார்கள். அடிப்படை ஆதாரமற்ற கருத்துகள் இவை. ஒருவேளை அவர்கள் சொல்வதைப்போல பத்து எம்.எல்.ஏ-க்கள் இங்கிருந்து அங்கே செல்கிறார்கள் என்று ஒரு வாதத்துக்கு வைத்துக்கொண்டாலும் என்ன விளைவுகள் உண்டாகிவிடும்... சொல்லும் விஷயங்களில் ஓர் அடிப்படை லாஜிக் வேண்டாமா... சம்பாதிக்க வழியில்லாமல்தான் அதிமுக-வுக்குப் போகிறார்கள் என அவர்கள் சொல்வதன் மூலம் கடந்த ஆட்சியில் நன்றாகச் சம்பாதித்துக்கொண்டிருந்தோம் என ஒரு ஸ்டேட்மென்ட்டை அவர்களே தானாக முன்வந்து ஒப்புக்கொள்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி அடிப்படையில்லாத ஒரு கருத்தைச் சொல்லும்போது, அதை நக்கலடிக்கும் விதமாகத்தான் அண்ணன் ஆர்.எஸ்.பாரதி பதிலுக்கு எங்களிடம் எம்.எல்.ஏ-க்கள் பேசிவருகிறார்கள் என்கிற கருத்தைச் சொல்கிறார்.

ஓ.பி.எஸ்... இ.பி.எஸ்!
ஓ.பி.எஸ்... இ.பி.எஸ்!

முதலில் அவர்கள் கட்சி விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்தட்டும். ஒரு முறை அவரும், ஒரு முறை இவரும் மாறி மாறி குதிரை ஏறிக்கொண்டிருக்கிறார்கள். குரங்கு பங்கு வைக்கும் கதையாக, பாஜக இருவரிடம் விளையாட்டுக் காட்டிக்கொண்டிருகிறது. கடைசியில், இருவருமே அப்பமில்லாமல்தான் போகப் போகிறார்கள். அதை மறைப்பதற்காக, திமுக-வில் இருப்பவர்களே என்னை மதிக்கிறார்கள் எனக் காட்டிக்கொள்வதற்காக இப்படிப் பேசிவருகிறார் எடப்பாடி. திமுக ஆட்சியும் கட்சியும் எந்தவித சிறு பிசிறும் இல்லாமல் ஜனநாயக வழியில் இயங்கிக்கொண்டிருக்கிறது. அரசியல் அறிவே இல்லாதவர்கள்கூட எடப்பாடியின் இந்தக் கருத்தை ஏற்க மாட்டார்கள்'' என்கிறார் கடுமையாக.