Published:Updated:

ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு முறையில் மாற்றம் - அதிமுக செயற்குழுத் தீர்மானங்கள் ஹைலைட்ஸ்!

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்
News
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

அவைத்தலைவர் தேர்வைத் தொடர்ந்து, செயற்குழுக் கூட்டத்தில், 11 தீர்மானங்கள், ஒரு சிறப்புத் தீர்மானம், ஒரு இரங்கல் தீர்மானம் ஆகியவை நிறைவேற்றப்பட்டன.

அ.தி.மு.க-வின் செயற்குழுக் கூட்டம் இன்று காலை சென்னை ராயப்பேட்டையிலிருக்கும் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் தலைமையில் தொடங்கியது. அந்தக் கூட்டத்தில், அ.தி.மு.க அவைத்தலைவராகச் செயல்பட்டுவந்த மதுசூதனன் அண்மையில் மறைந்ததைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டார்.

அவைத் தலைவர் தேர்வைத் தொடர்ந்து செயற்குழுக் கூட்டத்தில், 11 தீர்மானங்கள், ஒரு சிறப்புத் தீர்மானம், ஓர் இரங்கல் தீர்மானம் ஆகியவை நிறைவேற்றப்பட்டன. அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்துப் பார்க்கலாம்...

தீர்மானம்-1

பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர், இதயதெய்வம், டாக்டர் எம்.ஜி.ஆர் கண்ட மகத்தான மக்கள் இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன்விழா கொண்டாட்டங்களை நாடு, நகரமெங்கும், பட்டி தொட்டியெங்கும் எழுச்சியுடன் கொண்டாட கழக உடன்பிறப்புகளுக்கு அன்பு அழைப்பு!

தீர்மானம்-2

நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 66 இடங்களையும், கழகக் கூட்டணிக் கட்சிகள் ஒன்பது இடங்களையும், ஆக மொத்தம் 75 இடங்களில் வெற்றிபெறும் வகையில் உழைத்திட்ட கழக முன்னணியினர், கழக உடன்பிறப்புகளுக்குப் பாராட்டுகள். கழகத்தோடு இணைந்து தேர்தல் பணியாற்றிய கூட்டணிக் கட்சியினருக்கும், தோழமைக் கட்சியினருக்கும், இயன்ற வகைகளிலெல்லாம் உடன் உழைத்து உதவிய பல்வேறு இயக்கங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

தீர்மானம்-3

நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் பல்வேறு போலியான வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு அளித்து, ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கும் தி.மு.க-வின் நேர்மையற்ற பிரசார முறைகளுக்குக் கண்டனம்!

செயற்குழுக் கூட்டம்
செயற்குழுக் கூட்டம்

தீர்மானம்-4

ஏழை, எளிய உழைக்கும் மக்கள், பெண்கள், மாணவர்கள் நலன் குறித்த வாக்குறுதிகளை உறுதியாக நிறைவேற்றுவதாகக் கூறிய தி.மு.க., அந்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றவும், அந்த வாக்குறுதிகள் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்பதைக் கால அட்டவணை மூலம் உடனடியாகத் தெரிவிக்க வலியுறுத்தியும், அப்படித் தெரிவிக்காவிட்டால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை!

தீர்மானம்-5

தி.மு.க ஆட்சிக்கு வந்த நாள் முதல் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவரும் குற்றச் செயல்கள், கொலை, கொள்ளைகள், வழிப்பறிச் சம்பவங்கள், போலீஸாருக்கே பாதுகாப்பற்ற நிலை, வணிகர்கள் மீது தாக்குதல்கள், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் உள்ளிட்ட அச்சமூட்டும் அடாவடிச் செயல்களை அறவே ஒழிக்க தி.மு.க அரசு முன்வர வேண்டும். சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதில் தோல்வி அடைந்திருக்கும் தி.மு.க அரசுக்குக் கண்டனம்!

தீர்மானம்-6

வடகிழக்குப் பருவமழையால் தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதன் காரணமாகவும், வாழை, மரவள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம், கம்பு உள்ளிட்ட பிற பயிர் வகைகளும் பெருமளவு பாதிக்கப்பட்டிருப்பதன் காரணமாகவும், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் விவசாயிகளுக்கும், மழை வெள்ளத்தால் சேதமடைந்திருக்கும் வீடுகள் மற்றும் உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கும் உரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கிட தி.மு.க அரசை வலியுறுத்தி மழைவெள்ள பாதிப்புகளை முன்னேற்பாடுகள் மூலம் தடுக்கத் தவறிய தி.மு.க அரசுக்குக் கண்டனம்!

தீர்மானம்-7

மழைவெள்ள நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொண்டு மக்களின் துயர்துடைக்க தி.மு.க அரசு விரைந்து செயல்பட வலியுறுத்தல்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தீர்மானம்-8

மழைவெள்ள நிவாரணப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட கழக உடன்பிறப்புகளுக்கு அன்பு வேண்டுகோள்!

தீர்மானம்-9

நடந்து முடிந்த ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிடும் பல்வேறு முறைகேடுகளை அரங்கேற்றி, வெற்றிபெற்றிருக்கும் தி.மு.க-வுக்குக் கண்டனம்!

தீர்மானம்-10

விரைவில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகள் கடுமையாக உழைக்கவும், முறைகேடுகளைத் தடுக்க தேவையான முன்னேற்பாடுகளைச் செய்யவும் அறிவுறுத்தல்!

தீர்மானம்-11

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கட்டிக்காத்து, ஒற்றுமை பேணி, எதிர்காலத் தேர்தல்களில் மாபெரும் வெற்றிபெற கழக முன்னோடிகளின் கரங்களை வலுப்படுத்துவோம்!

செயற்குழுக் கூட்டம்
செயற்குழுக் கூட்டம்

சிறப்புத் தீர்மானம்:-

விதி 20 பிரிவு 2 சட்டத் திருத்தம்:

இதுவரை கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுவந்தனர். ஆனால், இனிவரும் காலங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டத் திருத்த விதிமுறைகளின்படி கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேற்படி கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரையும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை வாக்கின் மூலம் இணைந்தே தேர்வு செய்வார்கள்.

விதி 43 சட்டத் திருத்தம்:

இதுவரை கழக சட்ட விதிகளை இயற்றவும், திருத்தவும், நீக்கவும், பொதுக்குழு அதிகாரம் படைத்திருந்தது. இனிமேல் கழக சட்டதிட்ட விதிகளை இயற்றவும், திருத்தவும், நீக்கவும், பொதுக்குழு அதிகாரம் படைத்ததாகும். ஆனால், இந்தச் சட்டதிட்டங்களின் அடிப்படை உணர்வாக உருவாக்கப்பட்டிருக்கும் கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மட்டும் மாற்றுவதற்கும் திருத்துவதற்கும் முடியாது.

விதி 45 சட்டத் திருத்தம்:

இதுவரை கழக திட்ட விதிகளில் மாற்றம் மேற்கொள்வதற்கும், விலக்கு அளிப்பதற்கும், கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு அதிகாரம் உண்டு. ஆனால், இனிவரும் காலங்களில் இந்தச் சட்டதிட்டங்களின் அடிப்படை உணர்வாக உருவாக்கப்பட்டிருக்கும் கழக இணை ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மட்டும் விலக்கு அளிப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை.