Election bannerElection banner
Published:Updated:

காட்பாடி: `வாக்கு எண்ணிக்கையின்போது கலவரத்தைத் தூண்ட திட்டம்?’ - துரைமுருகன் மீது அதிமுக புகார்

துரைமுருகன்
துரைமுருகன்

காட்பாடி தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில், கலவரத்தைத் தூண்ட திட்டமிட்டிருப்பதாக அத்தொகுதியின் தி.மு.க வேட்பாளர் துரைமுருகன் மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க புகார் மனு அளித்திருக்கிறது.

வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான துரைமுருகன் மீண்டும் போட்டியிடுகிறார். துரைமுருகனை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் வி.ராமு என்பவர் களமிறங்கியிருக்கிறார். இந்தத் தொகுதியில் பதிவான வாக்குகள் காட்பாடியிலுள்ள சட்டக் கல்லூரியில் மே 2-ம் தேதி எண்ணப்படுகின்றன.

இந்தநிலையில், தி.மு.க வேட்பாளர் துரைமுருகனும், அவரின் மகன் கதிர் ஆனந்தும் சேர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலவரத்தைத் தூண்ட திட்டமிட்டிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க-வின் வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் புகார் மனு அளித்துள்ளார்.

புகார் மனு
புகார் மனு

புகார் மனுவில், ‘``காட்பாடி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளரின் வெற்றி மிகப் பிரகாசமாக இருக்கிறது. இதனால், வாக்கு எண்ணும் மையத்தில் கலவரத்தை ஏற்படுத்தி, வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் அல்லது வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சேதப்படுத்த வேண்டும் என்று தி.மு.க வேட்பாளர் துரைமுருகன் அவரின் மகனும், வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த் ஆகிய இருவரும் தங்கள் ஆதரவாளர்களிடம் பேசியிருப்பதாக உறுதிப்பட தகவல்கள் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது.

எந்தவிதமான அசம்பாதவிதமும் அங்கு நடந்துவிடக் கூடாது. அ.தி.மு.க வேட்பாளரின் வெற்றியை எக்காரணத்தைக் கொண்டும் தட்டிப்பறித்துவிடக் கூடாது. எனவே, மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்களைக் கூடுதலாக காட்பாடி தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்புப் பணியில் அமர்த்த வேண்டும்.

மகன் கதிர் ஆனந்துடன் துரைமுருகன்
மகன் கதிர் ஆனந்துடன் துரைமுருகன்

முகவர்கள் முழுவதுமாக சோதனை செய்யப்பட்ட பின்னரே மையத்துக்குள் அனுமதிக்கப்பட வேண்டும். இவை அனைத்தையும் மீறி வாக்கு எண்ணும் மையத்தில் கலவரத்தை ஏற்படுத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்கிற அறிவிப்பை தேர்தல் ஆணையம் உடனடியாக வெளியிட வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு