Published:Updated:

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு: என்ஜாய் மோடில் எடப்பாடி; பன்னீர் தரப்பின் அடுத்தகட்ட மூவ் என்ன?!

ஓபிஎஸ் - அதிமுக

அதிமுக `நீயா... நானா?' ஆட்டத்தில் இப்போது எடப்பாடியின் கை ஓங்கியிருக்கும் நிலையில், பின்னடைவைச் சந்தித்திருக்கும் ஓ.பி.எஸ்-ஸின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும்..?

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு: என்ஜாய் மோடில் எடப்பாடி; பன்னீர் தரப்பின் அடுத்தகட்ட மூவ் என்ன?!

அதிமுக `நீயா... நானா?' ஆட்டத்தில் இப்போது எடப்பாடியின் கை ஓங்கியிருக்கும் நிலையில், பின்னடைவைச் சந்தித்திருக்கும் ஓ.பி.எஸ்-ஸின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும்..?

Published:Updated:
ஓபிஎஸ் - அதிமுக

``அதிமுக-வில் ஜூன் 23-ம் தேதிக்கு முன்பிருந்த நிலையையே பின்பற்ற வேண்டும்'' என சென்னை உயர் நீதிமன்ற தனிநீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பு செல்லாது என நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம், அதிமுக `நீயா... நானா?' ஆட்டத்தில் இப்போது எடப்பாடியின் கை ஓங்கியிருக்கும் நிலையில், பின்னடைவைச் சந்தித்திருக்கும் ஓ.பி.எஸ்-ஸின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும்..?

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு

அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு... கடந்து வந்த பாதை!

அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராக பன்னீர் தொடுத்த வழக்கு ஜூலை, 11-ம் தேதி காலை தள்ளுபடி செய்யப்பட, அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக முடி சூட்டிக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில், ‘எங்கள் தரப்பு நியாயம் எதையுமே தனி நீதிபதி கருத்தில்கொள்ளவில்லை. ஒருங்கிணைப்பாளரின் அனுமதியின்றி இந்தப் பொதுக்குழு நடந்திருக்கிறது. எனவே, ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது, சட்டவிரோதமானது என்று அறிவித்து அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்துசெய்ய வேண்டும்’ என உச்ச நீதிமன்றத்தை நாடினார் பன்னீர். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் ஜூலை 29-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பையும் விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை `உயர் நீதிமன்றமே விசாரிக்கலாம். நகல் கிடைத்த இரண்டு வாரங்களுக்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர். அதையடுத்து இந்த வழக்கு ஆகஸ்ட் 4-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், ஓ.பி.எஸ் தரப்பிலிருந்து நீதிபதியை மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டது. நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியே, இது குறித்து தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியதன் மூலம், ஜெயச்சந்திரன் புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தொடர்ச்சியாக வழக்கு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், கடந்த 17-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், `அதிமுக-வில் கடந்த ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையையே பின்பற்ற வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடத்த வேண்டும்' என உத்தரவிடப்பட்டிருந்தது. இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வானது, இரு தரப்பும் நியமித்த புதிய பொறுப்புகள், பலரைக் கட்சியைவிட்டு நீக்கியது என எதுவுமே செல்லாது என்கிற நிலை ஏற்பட்டது.

அதிமுக புதிய நிர்வாகிகள்
அதிமுக புதிய நிர்வாகிகள்

தனிநீதிபதியின் உத்தரவுக்கு எதிராக, இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில், எடப்பாடி தரப்பால் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி தரப்புக்காக உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகிவந்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், அரிமா சுந்தரம், விஜய் நாராயண் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். ஓ.பி.எஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன் உள்ளிட்ட வழக்கறிஞர் ஆஜராகினர். தொடர்ந்து எழுத்துபூர்வமாக வாதங்களை முன்வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்த நிலையில், அண்மையில் இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், `பொதுக்குழு நடத்துவதற்கு 15 நாள்களுக்கு முன்பாக நோட்டீஸ் கொடுக்க வேண்டும்; ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழுவுக்கு அழைக்க முடியும்' என இரண்டு விஷயங்களைத்தான் ஓ.பி.எஸ் தரப்பு நீதிமன்றத்தில் அப்போது முன்வைத்தது.

ஆனால் அமர்வு நீதிபதிகளின் தீர்ப்பில் இதற்கான விளக்கமாக, `அடுத்த பொதுக்குழு ஜூலை 11-ம் தேதி நடக்கும் என ஜூன் 23-இல் பொதுக்குழுவில் அறிவித்ததே நோட்டீஸ்தான். அதனை முறையான நோட்டீஸாகத்தான் கருத வேண்டும். பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று நடத்தப்படும் சிறப்பு கூட்டங்களுக்கு இன்னொரு நோட்டீஸ் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை' என்றும் `ஒ.பன்னீர்செல்வம் இருந்தபோதுதான் ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுக்குழுக் கூட்டம் குறித்து தனக்கு தெரியாது என்று அவர் கூற முடியாது' என்று நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக தலைமை அலுவலகம்
’எம்.ஜி.ஆர் மாளிகை’
அதிமுக தலைமை அலுவலகம் ’எம்.ஜி.ஆர் மாளிகை’

மேலும், `பதவி காலி என்பதால் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை விட்டுவிட்டு, தலைமை நிலையச் செயலாளர் என்ற நிலையில் தேர்தல் ஆணையத்த்துக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இப்படியான ஒரு நிலையில் இருவரும் இணைந்துதான் பொதுக்குழு, செயற்குழுவைக் கூட்ட வேண்டுமென கூற முடியாது. எனவே ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு என்ற அறிவிப்பில் தடையில்லை என்றும் `பொதுக்குழு, செயற்குழு இருவரும் இணைந்துதான் கூட்ட வேண்டும் என்ற உத்தரவால் ஈடு செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கட்சி முடங்கும் நிலையில் உள்ளது. ஜூன் 23-ம் தேதி பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடராத நிலையில், அதற்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்க முடியாது. இருவரும் இணைந்து தான் கூட்டங்களை கூட்ட வேண்டுமென்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லாதது' என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை எடப்பாடி தரப்பினர் பட்டாசு வெடித்துக்கொண்டாடி வருகின்றனர். இதன்மூலம் எடப்பாடி தரப்பில் செய்யப்பட்ட புதிய நியமனங்கள் அனைத்தும் தொடர்கிறது. ஆனால், ஓ.பி.எஸ் தரப்புக்கு இந்தத் தீர்ப்பு பின்னடைவைக் கொடுத்துள்ளது. இந்த நிலையில் தீர்ப்பு நாளன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ், ``இன்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.

ஓ.பி.எஸ் பிரஸ்மீட்
ஓ.பி.எஸ் பிரஸ்மீட்

இந்த நிலையில், அவரின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தோம்..,

``இது இறுதியானது அல்ல. இன்னும் உச்ச நீதிமன்றம் இருக்கிறது. இதுவரையிலும், பொதுக்குழு தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்புகள் மாறி மாறிதான் வந்திருக்கின்றன. ‌‌அதனால் எங்களுக்கு இது பின்னடைவு என்று சொல்லமுடியாது. சட்ட வல்லுநர்களுடன் உரிய ஆலோசனைகளை நடத்தி உச்ச நீதிமன்றத்துக்குச் செல்வோம். இன்னும் சொல்லப்போனால், கட்சிரீதியான கட்டமைப்பை மீண்டும் வேகப்படுத்துவதற்கான வாய்ப்புதான் இது. காரணம், எங்கள் தரப்பில் மாநில, மாவட்ட நிர்வாகிகளை புதிதாக நியமனம் செய்திருந்தோம். ஆனால், தனிநீதிபதி கொடுத்த தீர்ப்பில் பழைய நிலையே தொடரும் என்று அறிவிக்கப்பட்டதால், அந்தப் பொறுப்புகள் நடைமுறையில் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், மீண்டும் தற்போது அந்த நிலை தொடரும் வகையில் தீர்ப்பு வந்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். ஆனால், இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சிப்பணிகளைத் தீவிரப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம். தினம் தினம் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் அண்ணன் ஓ.பி.எஸ்-ஸைச் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். நாளுக்கு நாள் ஆதரவு கூடிக்கொண்டே போகிறது. அதிமுக-வின் ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவும் புரட்சித் தலைவர், அம்மாவின் ஆசியும் அண்ணன் ஓ.பி.எஸ்-ஸுக்குத்தான் இருக்கிறது. தர்மம் மீண்டும் வெல்லும்'' என்கிறார்கள் நம்பிக்கையாக.