Published:Updated:

அதிமுக: பொதுக்குழு வழக்கு தீர்ப்பு... இபிஎஸ், ஓபிஎஸ் அணியின் அடுத்தகட்ட மூவ் என்ன?!

அதிமுக - ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

இந்தத் தீர்ப்புக்குப் பிறகு இரண்டு அணிகளின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கின்றன என்பது குறித்து கட்சி வட்டாரத்தில் பேசினோம்...

அதிமுக: பொதுக்குழு வழக்கு தீர்ப்பு... இபிஎஸ், ஓபிஎஸ் அணியின் அடுத்தகட்ட மூவ் என்ன?!

இந்தத் தீர்ப்புக்குப் பிறகு இரண்டு அணிகளின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கின்றன என்பது குறித்து கட்சி வட்டாரத்தில் பேசினோம்...

Published:Updated:
அதிமுக - ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

``அதிமுக-வில் கடந்த ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையையே பின்பற்ற வேண்டும்'' என சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இலைக் கட்சி வட்டாரத்தில் பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது. அதாவது, `எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டது செல்லாது. ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் அப்படியே தொடரும்' என்பதுதான் இந்தத் தீர்ப்பின் சாராம்சம். இந்த நிலையில், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் முகாம்களில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மிகத் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டுவருகிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஜூன் 23-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வுசெய்யப்பட்டதை எதிர்த்தும், ஜூலை 11-ம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்ட பொதுக்குழுவுக்குத் தடை கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஓ.பி.எஸ். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஜூலை 11-ம் தேதி காலை பொதுக்குழு கூடுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு, ஓபிஎஸ்-ஸின் மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, அதிமுக பொதுக்குழு நடத்தப்பட்டு, அதில் கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டார். ஓ.பி.எஸ் உள்ளிட்ட பலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட உரிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியே உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், எங்கள் தரப்பு நியாயம் எதையுமே தனி நீதிபதி கருத்தில்கொள்ளவில்லை. ஒருங்கிணைப்பாளரின் அனுமதியின்றி இந்தப் பொதுக்குழு நடந்திருக்கிறது. எனவே, ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது, சட்டவிரோதமானது என்று அறிவித்து அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்துசெய்ய வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார். இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் ஜூலை 29-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பையும் விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை `உயர் நீதிமன்றமே விசாரிக்கலாம். நகல் கிடைத்த இரண்டு வாரங்களுக்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.

பொதுக்குழு
பொதுக்குழு

இந்த வழக்கு ஆகஸ்ட் 4-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து ஓ.பி.எஸ் தரப்பிலிருந்து நீதிபதியை மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டது. பிறகு அதற்கு மன்னிப்புக் கேட்கப்பட்டது. ஆனால், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியே, இது குறித்து தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியதன் மூலம், ஜெயச்சந்திரன் புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தொடர்ச்சியாக வழக்கு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி, "அதிமுக-வில் கடந்த ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையையே பின்பற்ற வேண்டும். அதிமுக-வின் பொதுக்குழு கூட்டம், செயற்குழுக் கூட்டம் தனித்தனியே நடத்தப்படக் கூடாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடத்த வேண்டும். பொதுக்குழுவைக் கூட்ட ஒரு சட்ட ஆணையரைக் கட்சி நியமிக்க வேண்டும். அதேபோல, கட்சி சார்ந்து தனிக்கூட்டம் நடத்தக் கூடாது" எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வானது, இரு தரப்பும் நியமித்த புதிய பொறுப்புகள், பலரைக் கட்சியைவிட்டு நீக்கியது என எதுவுமே செல்லாது என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இந்தத் தீர்ப்பு மிகப்பெரிய பின்னடவை உண்டாக்கியிருக்கிறது. அதேவேளையில், பன்னீர் தரப்பில் இந்தத் தீர்ப்பை பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். `அதிமுக-வின் கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும்' என அறிக்கை ஒன்றை வெளியிட்டார் பன்னீர். தொடர்ந்து ஜெயலலிதா சமாதிக்குச் சென்றவர், ``இந்தத் தீர்ப்பை ஒன்றைரைக் கோடி தொண்டர்களுக்குக் காணிக்கையாக அளிக்கிறோம். யார் இந்த இயக்கத்தைப் பிளவுபடுத்த நினைத்தாலும் அது நடக்காது'' என உற்சாகம் பொங்க பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவித்தார். அதேவேளையில், எடப்பாடி வீட்டில், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சி.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன் செங்கோட்டையன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்.சி.சம்பத், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், காமராஜ், ஜெயக்குமார் உள்ளிட்ட பலருடன் அவர் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார். இந்த நிலையில், இந்தத் தீர்ப்புக்குப் பிறகு இரண்டு அணிகளின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கின்றன என்பது குறித்து கட்சி வட்டாரத்தில் பேசினோம்...

ஓ.பி.எஸ் பத்திரிகையாளர் சந்திப்பு
ஓ.பி.எஸ் பத்திரிகையாளர் சந்திப்பு

``கடந்த திங்கள்கிழமை காலையிலிருந்தே வழக்கறிஞர்கள், கட்சியின் வழக்கறிஞர்கள் அணியைச் சேர்ந்தவர்கள், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எனத் தொடர்சியாகப் பலரை எடப்பாடி சந்தித்து ஆலோசனை செய்துவந்தார். உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலுடன்தான் பொதுக்குழுவை நடத்தியிருக்கிறோம். அதனால், கண்டிப்பாகத் தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாகத்தான் வரும் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால், தீர்ப்பு வேறு மாதிரியாக வந்திருக்கிறது. அடுத்தகட்டமாக இரண்டுபேர் கொண்ட அமர்வுக்கு மேல்முறையீடு செய்வோம். அதிமுக-வின் லீகல் விங்குடன் அது குறித்து எடப்பாடி ஆலோசனை நடத்தவிருக்கிறார். தவிர, அதிமுக தலைமைக் கழகம் தொடர்பான வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதில் கிடைக்கும் தீர்ப்பின் மூலம் இந்த வழக்கில் எங்களுக்குச் சாதகமாகச் சில விஷயங்கள் நடக்கும். கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகளின் ஆதரவு எங்களுக்குத்தான் இருக்கிறது. அதனால் கட்சி எங்கள் கையைவிட்டுப் போகாது'' என்பதே எடப்பாடி தரப்பின் கருத்தாக இருக்கிறது.

பத்திரிகையாளர் சந்திப்பு
பத்திரிகையாளர் சந்திப்பு

ஓ.பி.எஸ் தரப்பிலோ, ``நாங்கள் நினைத்ததைச் சாதித்துவிட்டோம். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன்தான் என்பது சட்டபூர்மாக நிரூபணமாகியிருக்கிறது. தலைமைக் கழக சாவி எடப்பாடி தரப்புக்கு ஒப்படைக்கப்பட்டது தொடர்பான வழக்குக்கும், தேர்தல் ஆணையத்திலும் எங்களுக்குச் சாதகமாக நடக்க இந்தத் தீர்ப்பு ஒன்றே போதும். பழைய நிலையே தொடரும் பட்சத்தில் இணக்கமாகச் செல்லலாம் என்றுதான் அண்ணன் ஓ.பி.எஸ் நினைக்கிறார். அதையேதான் அவர் பிரஸ் மீட்டிலும் வெளிப்படுத்தினார். ஆனால், கடந்த காலங்களில் இருந்ததுபோல விட்டுக் கொடுத்துக்கொண்டே இருக்க மாட்டார். தனக்கான நியாயமான பதவிகளைக் கேட்டு வாங்குவார். அண்ணன் தயவு இல்லாமல் கட்சி நடத்த முடியாது என்கிற நிலை உருவாகியுள்ளது. இது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி. அவர்கள் மேல்முறையீட்டுக்குச் சென்றாலும் இந்தத் தீர்ப்பில் மாற்றம் இருக்காது'' என்கிறார்கள் நம்பிக்கையோடு.