Published:Updated:

``அவையில் ஆளுநரை வைத்துக்கொண்டு முதல்வர் செய்தது அநாகரிகமானது..!" - எடப்பாடி பழனிசாமி தாக்கு

எடப்பாடி பழனிசாமி

``சென்ற ஆண்டு போலவே இந்தாண்டும் ஆளுநர் உரையில் புதிய, பெரிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை." - எடப்பாடி பழனிசாமி

``அவையில் ஆளுநரை வைத்துக்கொண்டு முதல்வர் செய்தது அநாகரிகமானது..!" - எடப்பாடி பழனிசாமி தாக்கு

``சென்ற ஆண்டு போலவே இந்தாண்டும் ஆளுநர் உரையில் புதிய, பெரிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை." - எடப்பாடி பழனிசாமி

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி

இந்தாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. எப்போதும் அரசு தயார் செய்துகொடுக்கும் உரையைத்தான் சட்டமன்றத்தில் ஆளுநர் வாசிப்பார். ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தன் சட்டமன்ற உரையில், அரசு குறிப்பிட்டிருந்த `திராவிட மாடல்' என்ற வார்த்தையையும் `பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கருணாநிதி' ஆகியோர்களின் பெயர்களை வாசிக்காமல் தவிர்த்துவிட்டார்.

சட்டமன்றத்திலிருந்து பாதியில் வெளியேறிய  ஆளுநர் ஆர்.என்.ரவி
சட்டமன்றத்திலிருந்து பாதியில் வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி

இது மட்டுமல்லாமல், சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியில் கிளம்பிவிட்டார்.

இந்த விவகாரத்தில் தி.மு.க-வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ``ஆளுநரை அமர வைத்துக்கொண்டு ஒரு முதலமைச்சர் இப்படி பேசுவது மரபுக்கு எதிரானது" என விமர்சித்திருக்கிறார்.

பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிசாமி
பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிசாமி

சட்டமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ``ஆளுநர் உரை என்பது ஒவ்வோர் ஆண்டும் அரசு செயல்படுத்தவிருக்கும் திட்டங்களையும், கொள்கை முடிவுகளையும் சட்டப்பேரவையில் சம்பிரதாயமாக அறிவிக்கும் உரை. ஆனால், சென்ற ஆண்டு போலவே இந்தாண்டும் ஆளுநர் உரையில் புதிய, பெரிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. இந்த அரசும், முதலமைச்சரும் தற்புகழ்ச்சியோடு தங்கள் முதுகை தாங்களே தட்டிக் கொள்கிறார்கள் என்ற பொதுமக்களின் குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையில், இன்றைய தினம் சற்று வித்தியாசமாக ஆளுநர் உரையின் மூலம் தங்கள் முதுகைத் தட்டி சபாஷ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மக்களுக்கு இந்த ஆளுநர் உரையில் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. இந்த ஆளுநர் உரை வெற்று உரையாக இருக்கிறது. அதில் எது இடம் பெற்றிருக்கிறது, எது இல்லை என்பது எங்களுக்குத் தெரியாது. நாங்கள் ஆளுநர் உரையைத்தான் கேட்க வந்திருக்கிறோம், முதலமைச்சர் உரையைக் கேட்க அல்ல. ஆளுநரை அமர வைத்துக்கொண்டு ஒரு முதலமைச்சர் இப்படி பேசுவது மரபுக்கு எதிரானது, அநாகரிகமானது" எனக் கூறினார்.