திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் திராவிடர் கழகம் சார்பில் `திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம்’ நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ``பொம்மலாட்டத்தின் பொம்மைகள்போல அ.தி.மு.க-வும், அதை ஆட்டுவிக்கும் கயிறாக பா.ஜ.க-வும் இருக்கிறது. அண்ணாவின் பெயரால் தொடங்கப்பட்ட அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் எங்கள் தோழர்கள். அவர்கள் இப்போது நான்கு பிரிவாக இருக்கிறார்கள். ஒருவர், இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பேன். வேட்பாளரின் பெயரைக் கூற மாட்டேன் என்பதெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது.

அண்ணன், தம்பி இருவர் சொத்துப் பிரச்னைக்காக வழக்கறிஞரை நாடியிருக்கின்றனர். அவரும் இருதரப்பையும் விசாரித்திருக்கிறார். பிறகு அண்ணன் வழக்கறிஞரிடம் கேட்டிருக்கிறார், `சொத்து எனக்கு கிடைத்துவிடுமா?’ என்று... அதற்கு வழக்கறிஞர், `கிடைக்காது’ என்று கூறியிருக்கிறார். அப்போது, `தம்பிக்கு கிடைத்துவிடுமா?’ எனக் கேட்டதற்கு, `அவருக்கும் கிடைக்காது. வழக்கை நடத்தும் எனக்குதான் கிடைக்கும்’ என்றாராம். அதுபோல அ.தி.மு.க-வில் பஞ்சாயத்து தீர்க்கிறேன் என இறங்கியிருக்கிற பா.ஜ.க அந்தக் கட்சியை நீர்த்துப்போகச் செய்துவிடும்.
அண்ணா தி.மு.க தற்போது அடமான தி.மு.க என்று ஆகிவிட்டது. பா.ஜ.க-விடம் அடமானமாக உள்ள அ.தி.மு.க ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றிபெறப் போவதில்லை. ஈரோட்டில் தி.மு.க கூட்டணியின் வெற்றி, வரும் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியின் முன்னோட்டமாக இருக்கும்” என்றார்.

நிலக்கோட்டை திராவிடர் கழக ஒன்றியச் செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திராவிட கழக நிர்வாகிகள், தி.மு.க., அதன் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.