Election bannerElection banner
Published:Updated:

மாஃபா பாண்டியராஜன் கோரிக்கை; `ஆசைப்படும் உரிமை அ.தி.மு.கவுக்கு இருக்கிறது’ - என்ன சொல்கிறது பா.ஜ.க?

அ.தி.மு.க செயற்குழு - இ.பி.எஸ்- ஓ.பி.எஸ்
அ.தி.மு.க செயற்குழு - இ.பி.எஸ்- ஓ.பி.எஸ்

மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க இடம் கேட்டால், ஓர் இடத்தை மட்டுமே பா.ஜ.க ஒதுக்கும். அந்த ஓர் இடத்துக்கு மூன்று பேர் போட்டியாளர்களாக வருவார்கள்.

``மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது அ.தி.மு.க இடம்பெறும் என்று எதிர்பார்க்கிறோம். அமைச்சரவையில் இடம்பெறும் தகுதி அ.தி.மு.க-வுக்கு இருக்கிறது” என்று அ.தி.மு.க-வின் ஆசையை மறைமுகமாக வெளிப்படுத்தியிருக்கிறார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். பாண்டியராஜனின் இந்தக் கருத்து தமிழக அரசியலில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற பிறகு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்ற நான்கு கட்சிகளுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளித்தது. ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே சிவசேனாவுக்கும் பா.ஜ.க-வுக்கும் ஏற்பட்ட உரசலால் சிவசேனா மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறியது. அதேபோல், சிரோன்மணி அகாளி தளம் கட்சியின் சார்பில் மத்திய அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கௌர் பாதல் மத்திய அரசின் வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து கடந்த வாரம் லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் மறைவால் அந்த இடமும் காலியானது. இதனால் பா.ஜ.க கூட்டணியிலுள்ள ஒரு கட்சி மட்டுமே மத்திய அமைச்சரவையில் தற்போது இடம்பெற்றிருக்கிறது.

அதேநேரம் பியூஷ் கோயல், நிதின் கட்கரி உள்ளிட்ட சில அமைச்சர்களிடம் கூடுதல் துறைகளைப் பொறுப்பாக, பிரதமர் மோடி கொடுத்திருக்கிறார். அதைச் சரிசெய்யவும், கூட்டணிக் கட்சிகளுக்கு மீண்டும் அமைச்சரவையில் வாய்ப்பு தரவும் பிரதமர் மோடி திட்டமிடுகிறார். இதனால், விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்படவிருக்கிறது. இந்தநிலையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க தமிழகத்தில் ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. தேர்தல் முடிந்தவுடனேயே அ.தி.மு.க-வுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தனது மகன் ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சரவையில் இடம் எதிர்பார்த்தார் பன்னீர். ஆனால், மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் வைத்திலிங்கத்தை ஒதுக்கிவைத்துவிட்டு ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்க முடியாது என்று எடப்பாடி தரப்பு மறுத்துவிட்டது. அதன் பிறகு அந்த விவகாரம் அமுங்கிக்கிடந்தது.

எடப்பாடி -  பன்னீர்
எடப்பாடி - பன்னீர்

இந்தநிலையில் இப்போது பாண்டியராஜன் அந்த விவகாரத்துக்கு மீண்டும் உயிர்கொடுத்திருக்கிறார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாண்டியராஜன் ``மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க இடம்பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். அதற்கான முழுத் தகுதியும் அ.தி.மு.கவு-க்கு இருக்கிறது. ஆனால், இதைக் கட்சியின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது. அ.தி.மு.க-வின் தொண்டனாக, என் கருத்தாகவே இதைப் பார்க்க வேண்டும்” என்றார். ``இது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று சொன்னாலும், ஏற்கெனவே அ.தி.மு.க-வில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சிலரின் ஆசையை பாண்டிய ராஜன் தனது வாயால் வெளிப்படுத்தியிருக்கிறார்'' என்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.

பாண்டியராஜன் ஏற்கெனவே பன்னீர் ஆதரவாளராக அறியப்பட்டவர். பன்னீர்செல்வம் தனது மகனுக்கு எப்படியும் அமைச்சரவையில் இடம் வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். ஆனால், அதற்கு அ.தி.மு.க-வுக்குள்ளே கடும் எதிர்ப்பு இருக்கிறது. அ.தி.மு.க-வின் துணை ஒருங்கிணைப்பாளர்களாக இருக்கும் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி இருவருமே மாநிலங்களவை உறுப்பினர்கள். அவர்களைத் தாண்டி ரவீந்திரநாத்துக்கு அமைச்சரவையில் இடம் கேட்டால், கட்சிக்குள் கலகம் வெடிக்கும் என்று பன்னீருக்கும் தெரியும். அதேநேரம் மகனின் பாசமும் கண்ணை மறைப்பதால், அவர்கள் இருவரையும் ஒரே நேரத்தில் எப்படிச் சரிக்கட்ட முடியும் என்று பன்னீர் யோசிக்கிறார். முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் எடப்பாடிக்கு எதிராக பன்னீர் நெருக்கடி கொடுத்ததற்குக் காரணமே, மத்திய அமைச்சரவையில் தன் மகனின் இடத்தை உறுதி செய்யத்தான் என்று எடப்பாடி தரப்பில் பேசப்பட்டது. அதனால் அமைச்சரவையில் தன் மகனுக்கு இப்போது இடம் கேட்க முடியாத நிலை பன்னீருக்கு இருக்கிறது. எனவே, பன்னீரின் ஆசையை பாண்டியராஜன் வாயால் வெளிப்படுத்தியிருக்கலாம் என்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.

மோடி- எடப்பாடி பழனிசாமி
மோடி- எடப்பாடி பழனிசாமி

மேலும், ``இன்னும் ஆறு மாதங்களில் தமிழகம் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறது. அப்போது அ.தி.மு.க கூட்டணியில் யார் அங்கம்வகிப்பார்கள் என்பதே இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. `அ.தி.மு.க கூட்டணியில் நாங்கள் இடம்பெறுவோம்’ என்று பா.ஜ.க தரப்பு சொல்லிவந்தாலும், பா.ஜ.க-வைத் துாக்கிச் சுமந்தால், தங்களது வாக்கும் பாதிக்கும் என்று அ.தி.மு.க தலைமை நினைக்கிறது. எனவே, கடைசி நேரத்தில் பா.ஜ.க-வைக் கழற்றிவிடவே எடப்பாடி உள்ளிட்ட பலரும் விரும்புகிறார்கள். இதனால் இப்போது அ.தி.மு.க-வுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கேட்க வாய்ப்பில்லை’’ என்கிறார்கள்.

எம்.பி ரவீந்திர நாத்
எம்.பி ரவீந்திர நாத்

பா.ஜ.க தரப்பில் கேட்டால் ``அமைச்சரவையில் அ.தி.மு.க-வுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் நினைத்திருந்தால் எப்போதோ கொடுத்திருப்பார். அமைச்சரவையில் இடம்கொடுத்துத்தான் அ.தி.மு.க-வை நாங்கள் கூட்டணிக்கு இணங்கவைக்க வேண்டும் என்கிற அவசியம் எங்களுக்கு இல்லை. தமிழகத்திலுள்ள ஒவ்வோர் அமைச்சரும் எப்படியெல்லாம் கல்லா கட்டியிருக்கிறார் என்று மத்திய அரசுக்கு நன்றாகத் தெரியும். இவர்களை மத்திய அமைச்சராக்கினால் அதுவே எங்களுக்குச் சிக்கல்தான். அ.தி.மு.க எங்களுடன் கூட்டணிவைத்தாலும், வைக்காவிட்டாலும் அமைச்சரவையில் அவர்களுக்கு இடமளிப்பதை ஒன்றுக்குப் பலமுறை யோசித்தே பிரதமர் முடிவு செய்வார். ஆசைப்படுவது அவரவர் உரிமை. அதில் நாங்கள் தலையிட முடியாது. கொடுப்பது எங்கள் உரிமை அதை அ.தி.மு.க-வும் கேட்க முடியாது’’ என்று சொல்கிறார்கள்.

மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க-வுக்கு இடம் கேட்டால், ஓர் இடத்தை மட்டுமே பா.ஜ.க ஒதுக்கும். அந்த ஓர் இடத்துக்கு மூன்று பேர் போட்டியாளர்களாக வருவார்கள். இதனால் அ.தி.மு.க-வுக்குள் அடுத்த பூசல் ஏற்பட வாய்ப்பாகிவிடும் என்பதால், தமிழக அமைச்சரவையே நமக்குப் போதும் என்று எடப்பாடி முடிவெடுத்திருக்கிறாராம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு