Published:Updated:

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியைச் சந்தித்த அதிமுக! - காரணம் என்ன?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி - அதிமுக
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி - அதிமுக

உள்ளாட்சித் தேர்தல் நடந்த ஒன்பது மாவட்டங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் கணிசமான வாக்குகளை வாங்கியிருந்தது. ஆனால், இந்த உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருக்கிறது. அதற்கான காரணம் என்ன?

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களின் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. இந்தத் தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் ஆகிய இரு பதவிகளிலும் தி.மு.க மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. மொத்தம் தேர்தல் நடந்த 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க 138 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. அ.தி.மு.க-வுக்கு இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அதாவது செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஓரிடத்தில் அ.தி.மு.க வென்றுள்ளது. மற்ற கட்சிகளுக்கு ஓரிடம்கூடக் கிடைக்கவில்லை.

ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்த 1,381 இடங்களில் தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 1,021 இடங்களையும், அ.தி.மு.க 215 இடங்களையும், பா.ம.க 45 இடங்களையும், அ.ம.மு.க ஐந்து இடங்களையும், தே.மு.தி.க ஒரு இடத்தையும் கைப்பற்றியிருக்கின்றன. சுயேச்சைகளும் இதர கட்சிகளும் 96 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் ஆகிய இரு பதவிகளையும் சேர்த்து 95 சதவிகித இடங்களை தி.மு.க கைப்பற்றியுள்ளது. பா.ம.க-கூட ஓரளவுக்கு இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க மிகக் குறைந்த இடங்களிலேயே வெற்றிபெற்றிருக்கிறது. மற்ற கட்சிகள் அனைத்தும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கின்றன.

தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தல்
தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தல்

2019-ம் ஆண்டு டிசம்பரில் நடந்த 27 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க பெரிய வெற்றியைப் பெற்றிருந்தாலும் இந்த அளவுக்கு மிக அதிக இடங்களைக் கைப்பற்றவில்லை. ஆறு மாதங்களுக்கு முன்பு இந்த மாவட்டங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் கணிசமான வாக்குகளை வாங்கியிருந்தது. ஆனால், இந்த உள்ளாட்சித் தேர்தல் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கிறது. அதற்கான காரணம் என்ன..?

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்: 169 இடங்களில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், 77 இடங்களில் வெற்றி! - காலை நிலவரம்

உள்ளாட்சித் தேர்தல் தொடங்கியது முதல் பல்வேறு விஷயங்களில் அ.தி.மு.க சறுக்கியிருக்கிறது. கூட்டணியிலிருந்து பா.ம.க தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்ததில் தொடங்கியது இந்தச் சறுக்கல். வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர்களின் வாக்குகள் இதனால் அ.தி.மு.க-வுக்குக் கிடைக்காமல் போனது. மேலும் எடப்பாடி அறிவித்த வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான அரசாணையை வெளியிட்டு அதற்காகக் கிடைக்கும் வாக்குகளையும் தி.மு.க தனதாக்கிக்கொண்டதும் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு கடைசி வரை நடந்த கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையும், அதில் எந்த முடிவும் இறுதிவரை எட்டப்படாததால் தேர்தலில் போட்டியிடலாமா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே தொண்டர்களை வைத்திருந்தது.

அந்தக் குழப்பம் தேர்தலிலும் எதிரொலித்திருக்கிறது. இந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இரண்டு அமைச்சர்கள் எனப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டார்கள். ஒன்றிய கவுன்சிலர், மாவட்டக் கவுன்சிலர் என ஒவ்வொரு பதவிக்கும் செலவு செய்திருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன. ஆனால், அ.தி.மு.க தரப்பிலிருந்து வேட்பாளருக்குக் கட்சி சார்பில் கொடுக்கப்படும் 50 ஆயிரம் ரூபாய்கூட கொடுக்கவில்லை எனத் தொண்டர்கள் புலம்புகிறார்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் தலைவர்கள் வெற்றிபெறப் போராடிய தொண்டர்கள் போட்டியிடும் உள்ளாட்சித் தேர்தலுக்குச் செலவு செய்யப் பணம் தரவில்லை என்ற வெறுப்பில் பலரும் தி.மு.க-வில் சேர்ந்ததோடு, தேர்தலிலும் அவர்களுக்காக வேலை செய்திருக்கிறார்கள் என்ற தகவலும் வந்தது.

எடப்பாடி - ஓ.பி.எஸ்
எடப்பாடி - ஓ.பி.எஸ்

அ.தி.மு.க-வில் இருக்கும் இரட்டைத் தலைமைமீதான அதிருப்தியும் இந்தத் தேர்தலில் எதிரொலித்திருக்கிறது என்கிறார்கள். எடப்பாடியாவது ஓரளவு பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆனால், ஓ.பி.எஸ் கடைசி இரண்டு நாள்கள் பெயரளவுக்கு மட்டுமே பிரசாரத்தில் ஈடுபட்டார் என்கின்றனர் கட்சி நிர்வாகிகள். `தொண்டர்களே ஒன்றாக இருங்கள்’ என்று சொன்ன காலம் போய், தொண்டர்கள் இப்போது `தலைவர்களே ஒன்றாக இருங்கள்’ என்று சொன்னதும் இந்தத் தோல்விக்கு மிகப்பெரிய காரணம் என்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்தியது ஆளும் தி.மு.க-வுக்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்துவிட்டது. மேலும், இந்த நான்கு மாதகால தி.மு.க ஆட்சியின் மீது மக்களுக்குப் பெரிய அளவில் குறைகள் ஏதுமில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. ஏழை, எளிய மக்களைச் சந்திக்கிறார். பத்திரிகைகளில் வரும் பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண்கிறார் எனப் பல்வேறு விஷயங்களில் முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் நல்ல பேர் எடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல, அதிகார பலம், பண பலமும் தி.மு.க-வுக்குப் பெரிய அளவில் கை கொடுத்திருக்கிறது என்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல்களில் ஸ்டாலின் Vs இதர கட்சிகள் என்றுதான் நடந்தது. இந்தத் தேர்தலும் அதேபோலத்தான் நடந்து முடிந்திருக்கிறது என்கிறார்கள். அதனால்தான் உள்ளாட்சித் தேர்தலில் இந்த மிகப்பெரிய வெற்றி தி.மு.க-வுக்குச் சாத்தியமாகியிருக்கிறது. நாம் தமிழர் உள்ளிட்ட சில கட்சியினர் வெற்றிபெறவில்லை என்றாலும் கணிசமான வாக்குகளைப் பிரித்திருக்கிறார்கள்.

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க இதுவும் காரணமாகச் சொல்லப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் இந்தத் தோல்வி அதிலும் எதிரொலிக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். இவற்றையெல்லாம் சரிசெய்து அடுத்தடுத்த தேர்தலில் வெற்றியைக் குவிக்குமா அ.தி.மு.க என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு