Published:Updated:

கந்த சஷ்டி விவகாரம்: வெடி வைத்த வேலுமணி... அ.தி.மு.க - தி.மு.க-வின் ஆடுபுலி ஆட்டம்!

வேலுமணி
வேலுமணி

கந்த சஷ்டி கவசத்தைக் `கறுப்பர் கூட்டம்' என்கிற யூடியூப் சேனல் விமர்சித்தது தொடர்பான விவகாரம் அரசியல் அரிதாரம் பூசி புது ரூட்டில் பயணிக்கிறது. முதல் வெடியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கிள்ளி எறியவும், விவகாரம் தி.மு.க - அ.தி.மு.க மோதலாக உருவெடுத்துள்ளது.

கந்த சஷ்டி கவசத்தை விமர்சிக்கும் விதமாக, கறுப்பர் கூட்டம் என்கிற யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். இதைக் கண்டித்து தமிழகமெங்கும் இந்து அமைப்புகளின் சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. கண்டனத்தைத் தெரிவிக்கும் முகமாக, வீட்டு வாசலில் கந்த சஷ்டி கவசம் பாடும் போராட்டத்தையும் பி.ஜே.பி நடத்தியது. இந்நிலையில், சர்ச்சைக்குரிய வீடியோவை பதிவு செய்த குற்றச்சாட்டில் கறுப்பர் கூட்டம் நிர்வாகி வேளச்சேரி செந்தில்வாசன் என்பவர் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இ-பாஸ் இல்லாமலேயே சென்னை போரூரில் இருந்து புதுச்சேரி வரை பயணித்த மற்றொரு நிர்வாகியான சுரேந்தர் நடராஜன் என்பவர், புதுச்சேரி அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் சரணடைந்தார். கைது செய்யப்பட்ட செந்தில்வாசனும் சுரேந்தர் நடராஜனும் கடந்த தேர்தல்களில் தி.மு.க-வுக்காகத் தேர்தல் பணியாற்றியது ஆதாரங்களுடன் சமூக வலைதளங்களில் வைரலானது.

கறுப்பர் கூட்டம்
கறுப்பர் கூட்டம்

இந்தப் பிரச்சனை வெடித்துக்கொண்டிருக்கும்போதே, கோவையில் பெரியார் சிலையின் மீது காவி பெயின்ட் ஊற்றப்பட்டு பிரச்னை புதுவடிவம் எடுத்தது. பாரத்சேனா அமைப்பின் நிர்வாகி அருண் கிருஷ்ணன் என்பவர் காவி பெயின்ட்டை தான் ஊற்றியதாக சரணடைந்தார். பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக பலகட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக, கந்த சஷ்டி கவச விவகாரத்தில் அமைதி காத்த தி.மு.க, பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக உடனடியாக ரியாக்ட் செய்தது. அதுவரையில் அமைதிகாத்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முதல் வெடியை கொளுத்திப் போட்டார்.

``தமிழர்களின் கடவுளான மருதமலை வேலவன் முருகனை இழிவுபடுத்தி நம்பிக்கையோடு வழிபடுவோரின் மனதை புண்படுத்தியிருப்பது வருத்தமளிக்கிறது. அனைவரது உணர்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் மரியாதை அளிப்பதே மதச்சார்பின்மை. இதை நிலைகுலைக்கச் செய்வோர் யாராக இருந்தாலும் கண்டிக்கத்தக்கவர்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டித்திருந்தார். இந்த கண்டனம் வெளிவந்த சில மணிநேரத்திலேயே பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாகவும் வேலுமணியிடம் இருந்து கண்டனம் வந்தது. வேலுமணியின் முருகன் ட்விட்டைத் தொடர்ந்து, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் இருந்தும் கண்டன ட்விட் வந்தது. ``முருகனை அவமதித்தவர்கள் மீது இந்து அறநிலையத்துறையின் சார்பில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என அத்துறையின் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் சார்பில் அறிக்கையும் வெளியானது.

அமைச்சர் வேலுமணி
அமைச்சர் வேலுமணி

வழக்கமாக இதுபோன்ற இந்து மத விவகாரங்கள் கிளம்பும் பொழுதெல்லாம் ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுப்பதும், அவரை பி.ஜே.பி ஆதரவாளராக முத்திரை குத்தி சமூக வலைதளவாசிகள் அழுத்தி வைப்பதும் தொடர்கதைதான். ஆனால், இந்த முறை அமைச்சர் வேலுமணியிடம் இருந்து கண்டனம் வெளியானதை தி.மு.க எதிர்பார்க்கவில்லை. அடுத்தடுத்து இரண்டு அமைச்சர்கள் இந்த விவகாரத்தில் ரியாக்ட் செய்தவுடன், தங்களை இந்துமத விரோதியாகக் காட்ட முயற்சி நடைபெறுகிறதோ என அறிவாலயத்தில் பதற்றம் தொற்றிக்கொண்டது. இதன் வெளிப்பாடாகத்தான், ஜூலை 18-ம் தேதி, ``தி.மு.க-வில் இருப்பவர்களில் ஒரு கோடி பேர் இந்துக்கள். கறுப்பர் கூட்டத்துக்குத் தலைவர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்திருப்பதாக தவறான பிரசாரம் செய்கிறார்கள். முருகனை இழித்துப் பேசிய கறுப்பர் கூட்டத்தின் வீடியோவை தி.மு.க வன்மையாகக் கண்டிக்கிறது” என்று ஆர்.எஸ்.பாரதி பேட்டியளித்தார்.

அ.தி.மு.க. ஐவர் குழுவைச் சேர்ந்த சீனியர் தலைவர் ஒருவரிடம் பேசினோம். ``அ.தி.மு.க-வின் வாக்குவங்கி எப்போதுமே மிதநிலை இந்துக்களின் வாக்குகள்தான். மூகாம்பிகை கோவிலுக்குச் சென்று தன் பக்தியை வெளிப்படுத்திய எம்.ஜி.ஆர், திருப்போரூர் முருகன் மீது அளவு கடந்த பக்தி வைத்திருந்த ஜெயலலிதா என திராவிடக் கட்சியான அ.தி.மு.க-வின் தலைவர்களே இந்துமதத்தின் மீது வெளிப்படையான நம்பிக்கையைக் கொண்டிருந்தனர். கந்த சஷ்டி விவகாரத்தை பொறுத்தவரையில், கறுப்பர் கூட்டம் அமைப்புக்கும் தி.மு.க.வுக்குமான தொடர்பு அம்பலமாகும் வரையில் பொறுமையாக இருந்தோம். அதன்பிறகுதான் அடுத்தடுத்த தாக்குதலை ஆரம்பித்திருக்கிறோம். இந்த விவகாரத்தில் தி.மு.க.வின் இந்துவிரோத முகம் வெளிச்சமாகிவிட்டது. தேர்தல் நேரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார்.

மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

அவர் கூறியது போலவே, இந்த விவகாரத்தில் தி.மு.க.வை சிக்க வைப்பதற்கு அடுத்தடுத்த காய்களை அ.தி.மு.க நகர்த்துகிறது. வேலுமணிக்கு பதிலடி தரும்விதமாக, கோவையில் மூன்று கோவில்கள் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கோரியிருந்தார். இதற்கும் பதிலடி கொடுத்துள்ள வேலுமணி, ``சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக கடவுள் முருகர் பெயரை தன்னுடைய வாயால் உச்சரித்து, நிந்தனை செய்வோரை மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். ``கறுப்பர் கூட்டத்தை மு.க.ஸ்டாலின் ஏன் கண்டிக்கவில்லை?” என அமைச்சர் சி.வி.சண்முகமும் வரிந்து கட்டிக்கொண்டு கோதாவில் குதித்திருப்பது தி.மு.க.வுக்கு கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

தி.மு.க-வின் டெல்டா மாவட்ட மூத்த தலைவர் ஒருவரிடம் பேசினோம், ``இந்து மத எதிர்ப்பு என ஒரு மாய வலையை உருவாக்கி தி.மு.க.வை சிக்க வைக்க முயல்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. `ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என அறிஞர் அண்ணா கூறியபோதே, நாத்திகக் கொள்கையை தி.மு.க உதறிவிட்டது என்றுதானே அர்த்தம். தி.மு.க.வில் இருக்கும் தலைவர்களில் இன்று கோவிலுக்குப் போகாதவர்கள் யார்? இவர்களின் நம்பிக்கையை தி.மு.க என்றுமே கேள்விக்கு உள்ளாக்கியது இல்லையே. அனைத்து சமூக மக்களும் வாக்களித்துதான், தி.மு.க இன்று இந்த அளவுக்கு சக்திவாய்ந்த இயக்கமாக உருவெடுத்துள்ளது. மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, தேங்கியிருக்கும் தொழில் வளர்ச்சி போன்ற மக்களின் வாழ்வாதார பிரச்னைகளில் இருந்து திசை திருப்ப, இந்து விரோதக் குற்றச்சாட்டை அ.தி.மு.க.வினர் கையில் எடுத்திருக்கிறார்கள். அவர்களின் சூழ்ச்சி ஒருபோதும் வெற்றியடையாது” என்றார் தெளிவாக.

அறிவாலயம்
அறிவாலயம்

கந்த சஷ்டி விவகாரத்தை வைத்து தி.மு.க.வை வளைக்க அ.தி.மு.க சுத்து போடுகிறது. வலைக்குள் சிக்காமல் நழுவிவிட தி.மு.க முயல்கிறது. இந்த ஆடுபுலி ஆட்டத்தில் எந்த காய் வெட்டப்படுகிறது, தப்பிக்கிறது என்பது போகப் போகத் தெரிந்துவிடும்.

அடுத்த கட்டுரைக்கு