Published:Updated:

``வெள்ளை அறிக்கை வெளியிடுவதால் யாருக்கு என்ன பயன்?” - செங்கோட்டையன்

அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்

"சட்டமன்ற இடைத்தேர்தலில், அ.தி.மு.க வேட்பாளர்களின் வெற்றி உறுதி. ஆனால், எதிர்க்கட்சி வேட்பாளருக்கும் அ.தி.மு.க வேட்பாளருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம்தான் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை'' என்கிறார், அமைச்சர் செங்கோட்டையன்

`5-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும்', `அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில்தான் படிக்க வைத்திருக்கிறார்களா என்று கணக்கெடுக்கப்படும்' என்ற அதிரடி அறிவிப்புகளுக்கு மத்தியில், `தீபாவளிக்கு முந்தைய தினமும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்' என்று இனிப்பு தடவிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது, தமிழகப் பள்ளிக் கல்வித்துறை!

அ.தி.மு.க வேட்பாளர்கள்
அ.தி.மு.க வேட்பாளர்கள்

இந்நிலையில், இடைத்தேர்தல் பரப்புரையில் மிகவும் 'பிஸி'யாக இருந்துவரும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசத் தொடங்கினேன்.....

''நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில், அ.தி.மு.க வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?''

''முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆலோசனையின்பேரில், அமைச்சர்கள், சட்டமன்ற - நாடாளுமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் களத்தில் இறங்கி பரப்புரை செய்துவருகிறோம். எனவே, 2 தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றி என்பது நூற்றுக்கு நூறு உறுதியாக்கப்பட்ட ஒன்று. வாக்கு வித்தியாசம்தான் எவ்வளவு என்பதை நிர்ணயிக்க வேண்டியிருக்கிறது.''

அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்

''வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில், ஒட்டுமொத்த அ.தி.மு.க-வினர் களமிறங்கியும்கூட தோல்வியடைந்துவிட்டீர்களே?''

''வேலூர் தொகுதி நிலவரம் என்பதே வேறு. ஆனாலும்கூட லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்துவந்த தி.மு.க-வை வெறும் 8 ஆயிரம் வாக்கு வித்தியாசத்துக்குள்ளாகச் சுருங்கவைத்ததே எங்களுக்கு மாபெரும் வெற்றிதான். குறிப்பாக, 3 சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க-தான் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தது."

''கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வைக் கவனமாகத் தவிர்த்து வருகிறீர்களே... அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க அங்கம் வகிப்பது, கூட்டணிக்குப் பலமா; பலவீனமா?''

"அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தொடர்கிறது என்று முதல்வர் அறிவித்திருக்கிறார். பா.ஜ.க மேலிடமும், `அ.தி.மு.க உடனான தேர்தல் கூட்டணி தொடர்கிறது' என்றுதான் அறிவித்துள்ளது. தொடர்ந்து பிரசாரக் களங்களிலும் செயல்வீரர் கூட்டங்களிலும் அக்கட்சியின் தொண்டர்கள் எங்களோடு இணைந்து நிற்கிறார்கள். ஆக, தோழமைக் கட்சிகள் அனைத்துமே எங்களுக்குப் பலம்தான்!''

திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் சீனிவாசன்
"பின்லாந்து வேறு... தமிழகம் வேறு..." - செங்கோட்டையன் சிறப்பு 'லாஜிக்' பேட்டி

''வேலூரில் அ.தி.மு.க தோற்றதற்கு, கூட்டணிக் கட்சியான மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்திருந்த முத்தலாக் தடைச் சட்டம்தான் காரணம் என்கிறாரே, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்?''

''அது, அவருடைய கருத்து!''

''அண்மையில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வெளிநாட்டுக்குச் சென்றுவந்தது குறித்து 'வெள்ளை அறிக்கை' வெளியிட வேண்டும் என்கிற எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை நிறைவேற்றுவதில் அ.தி.மு.க அரசு தயங்குவது ஏன்?''

''தொழிற் வளர்ச்சி, கலை, பண்பாடு, மருத்துவம் எனப் பல்வேறு துறைகளிலும் வெளிநாடுகளின் வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்ப்பது, ஆராய்வது மற்றும் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பது ஆகியவைதான் இந்தப் பயணத்தின் அடிப்படை நோக்கம்.

இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவதால் யாருக்கு என்ன பயன்?''

மு.க.ஸ்டாலினுடன் தி.மு.க வேட்பாளர்
மு.க.ஸ்டாலினுடன் தி.மு.க வேட்பாளர்

"வெள்ளை அறிக்கை வெளியிட அ.தி.மு.க அரசு தயங்குவது, `அமைச்சர்கள் தங்களது சொந்தப் பணத்தை முதலீடு செய்வதற்காகத்தான் வெளிநாடு செல்கிறார்கள்' என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதுபோல் இருக்கிறதே?''

"தனி மனிதனோ அல்லது தொழிலதிபரோ... யாராக இருந்தாலும் தொழில் தொடங்குவதாக இருந்தால் அவர்களே நேரடியாக வெளிநாடு போய், செய்துவிட்டுப் போகிறார்கள்; அதை யாரும் தடை செய்துவிட முடியாது. அப்படியிருக்கும்போது, அமைச்சராகித்தான் தொழில் தொடங்க முடியும் என்று ஏதும் இருக்கிறதா? குற்றச்சாட்டைச் சொல்கிறவர்கள்தான் மேலை நாடுகளில் தொழில் நிறுவனங்களைத் தொடங்கியிருக்கிறார்கள். அதை எங்களால் சொல்லமுடியும்!''

''பள்ளிக் கல்வித் துறையின் பொதுத்தேர்வு அறிவிப்பு, குலக்கல்வியைத்தான் வளர்த்தெடுக்கும் என்கிறாரே மு.க.ஸ்டாலின்?''

''மத்திய பா.ஜ.க அரசின் 'புதிய கல்விக் கொள்கை'த் திட்டத்துக்கான முன்னோட்டமாகவே 'பொதுத்தேர்வு அறிவிப்பு' இருப்பது சந்தேகத்தை எழுப்புகிறதே?''

- இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான கேள்விகளுக்கு அமைச்சர் செங்கோட்டையனின் பதில்களைத் தெரிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கினை க்ளிக் செய்யுங்கள்....

 “எடப்பாடி பழனிசாமியின் தனிச்சிறப்புகள்...”
அடுத்த கட்டுரைக்கு