Election bannerElection banner
Published:Updated:

``அம்மா இருந்தா விடுவாரா?’’ தலைநகரில் தத்தளிக்கும் அதிமுக... காரணம் என்ன?! TNElection2021


அ.தி.மு.க தலைமை அலுவலகம்
அ.தி.மு.க தலைமை அலுவலகம்

அ.தி.மு.க நிர்வாகிகளே, ``சென்னையில் இந்தமுறை அ.தி.மு.க மண்ணைக் கவ்வும்'' என்கிறார்கள். கூடவே அதற்கான காரணத்தையும் மிக விரிவாக விளக்கினார்கள்.

``ஒரு சுவருக்கெல்லாமா இவ்வளவு பெரிய பிரச்னை நடக்கும்?'' இயக்குநர் ரஞ்சித் நடிப்பில் வெளியான `மெட்ராஸ்’ படத்தைப் பார்த்த சென்னை அல்லாத பிற மாவட்ட மக்களின் மனநிலை இப்படித்தான் இருந்தது. வெளிப்படையாக அது குறித்த பல உரையாடல்களையும் சமூக வலைதளங்களில் காண முடிந்தது. காரணம், மற்ற மாவட்டங்களில் அரசியல் களேபரங்கள் என்பது தேர்தல் காலத்தில் மட்டுமே நடக்கும். அதுவும் வெற்றி, தோல்விக்கான போராட்டங்களாக மட்டுமே அவை இருக்கும். மற்ற நாள்களில் மிகவும் சுமுகமாகவே அவர்களின் அரசியல் செயல்பாடுகள் இருக்கும். ஊருக்குள் பத்து பெரிய சுவர்கள் இருந்தால், விளம்பரம் செய்ய ஆளுக்கு ஐந்து என கட்சிக்காரர்கள் பிரித்துக்கொள்வார்கள். வேறு வேறு கட்சிகளில் இருந்தாலும் பெரும்பாலும் அரசியலில் அதிகாரம் செலுத்துபவர்கள் குறிப்பிட்ட சமூகத்தினர் அல்லது உறவுக்காரர்களாகத்தான் இருப்பார்கள்.

கருணாநிதி - ஜெயலலிதா
கருணாநிதி - ஜெயலலிதா

அதனால் பெரிய அளவில் பிரச்னைகள் எதுவும் உருவாவதில்லை. ஆனால், சென்னையில் அப்படியல்ல. சென்னையில் அரசியல் செய்வதும் சாதாரணமல்ல. தன் கட்சியின் போஸ்டரை ஒட்டிய சில மணி நேரத்தில் எதிர்க்கட்சியினர் கிழித்தெறிய, நள்ளிரவு ஒரு மணிக்கு அந்த இடத்துக்கு வந்த ஆளும்கட்சி பெண் எம்.எல்.ஏ-வைப் பார்த்திருக்கிறேன். `புதுப்பேட்டை’ திரைப்படத்தில், தனுஷ் போஸ்டர் ஒட்ட எதிர்க்கட்சியினரின் ஏரியாவுக்குள் சென்று மாட்டிக்கொள்ளும் காட்சியில் நடக்கும் சம்பவம் அளவுக்கு இல்லாவிட்டாலும், அதைவிடக் காரம் குறைந்த பல சம்பவங்கள் சென்னையில் நடந்தேறியது உண்டு. மற்ற நாள்களிலேயே இப்படியென்றால் தேர்தல் காலங்களில் சொல்லவே வேண்டாம். களத்தில் அனல் பறக்கும். மாநிலத்தின் தலைநகரில் சட்டமன்ற உறுப்பினராக அரசியல்வாதிகள் கடும் பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். தமிழகம் முழுவதும் பெரும்பான்மையாக வெற்றிபெற்று ஆளும்கட்சியாக வந்தாலும், சென்னையில் அதிக இடங்களைப் பிடிக்க வேண்டும் என்பது மறைந்த தலைவர்கள் ஜெயலலிதா, கருணாநிதி இருவருக்கும் கௌரவப் பிரசனையாகவே கடந்த காலங்களில் இருந்துவந்திருக்கிறது.

தி.மு.க-வின் கோட்டை!

தி.மு.க தொடங்கப்பட்ட காலம் முதலாக சென்னை தி.மு.க-வின் கோட்டையாகவே இருந்துவந்திருக்கிறது. உதாரணமாக, எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கி போட்டியிட்ட முதல் பொதுத் தேர்தலிலேயே,144 இடங்களை வென்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தாலும், சென்னையிலிருந்த 14 இடங்களில் ஒரு இடத்தில் மட்டுமே அவரால் வெற்றிபெற முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற 1980 (11), 1984 (9) தேர்தல்களிலும் தி.மு.க-வே பெருவாரியான இடங்களைக் கைப்பற்றியது. 1989-ல் நடந்த தேர்தலில் அனைத்து இடங்களையும் தி.மு.க தலைமையிலான கூட்டணியே கைப்பற்றியது.

தி.மு.க - அறிவாலயம்
தி.மு.க - அறிவாலயம்

முதன்முறையாக, 1991-ல் நடந்த தேர்தலில், ராஜீவ் காந்தி மரணத்தால் ஏற்பட்ட அனுதாபத்தின் காரணமாக, சென்னையில் அ.தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி 12 இடங்களைக் கைப்பற்றியது. தொடர்ந்து 1996-ல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் பழையபடி தி.மு.க-வின் கோட்டையாக மாறியது சென்னை. போட்டியிட்ட 14 இடங்களிலும் வெற்றிபெற்றதோடு, தமிழக ஆட்சிக் கட்டிலிலும் அமர்ந்தது தி.மு.க. தொடர்ந்து, 2001-ல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், தமிழகம் முழுவதும் அ.தி.மு.க வெற்றிக்கொடி நாட்டியிருந்தாலும், சென்னையில் மொத்தமுள்ள 14 தொகுதிகளில் பத்து தொகுதிகளை வென்றெடுத்தது தி.மு.க. அந்தத் தேர்தலில், தி.மு.க கூட்டணி ஒட்டுமொத்தமாக ஜெயித்ததே 37 இடங்கள்தான். அதன் பிறகுதான் சென்னைக்கென தனிக்கவனம் செலுத்தத் தொடங்கினார் ஜெயலலிதா. 2006 தேர்தலில் ஆட்சியை இழந்தபோதும் சென்னையில் ஒட்டுமொத்தமாக இருந்த 14 இடங்களில் ஏழு இடங்களில் அ.தி.மு.க வெற்றிபெற்றது. ஜெயலலிதா வழங்கிய வெள்ள நிவாரணம் உள்ளிட்ட சில விஷயங்கள் அதற்கான காரணமாகப் பார்க்கப்படுகின்றன.

மாற்றிய ஜெயலலிதா!

தொடர்ந்து, 2006-ல் தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றியபோதும், சென்னையின் சரிபாதி இடங்களைத் தக்கவைத்தது அ.தி.மு.க. தொடர்ந்து, 2011 தேர்தலில், தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியதோடு, சென்னையில் மொத்தமிருந்த 16 இடங்களில் 14 இடங்களை அ.தி.மு.க கூட்டணி கைப்பற்றி சென்னையை அ.தி.மு.க-வின் கோட்டையாகவே மாற்றிக் காட்டினார் ஜெயலலிதா. தொடர்ந்து, 2016 தேர்தலிலும் ஆறு இடங்களைக் கைப்பற்றி கௌரவமான வெற்றியை, தலைநகரில் பதிவு செய்தது அ.தி.மு.க. ஆனால், தற்போது நடைபெறவிருக்கும் தேர்தலில், சென்னையில் ஒட்டுமொத்தமாகவே அ.தி.மு.க 2- 4 இடங்களே வெல்வதற்கு வாய்ப்பிருப்பதாகக் கருத்துக்கணிப்புகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. மட்டுமல்லாது, அ.தி.மு.க-வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளே, ``சென்னையில் இந்தமுறை அ.தி.மு.க மண்ணைக் கவ்வும்'' என்கிறார்கள். கூடவே அதற்கான காரணத்தையும் விளக்கினார்கள்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

``ஒருகாலத்தில் தி.மு.க-வின் கோட்டையாக இருந்த சென்னையை, தனது கடின உழைப்பின் மூலம் அ.தி.மு.க-வின் கோட்டையாக மாற்றினார் ஜெயலலிதா. ஆனால், இந்தத் தேர்தலில் ஓரிடத்தில் ஜெயிப்பதுகூட இழுபறியாகத்தான் இருக்கிறது. சென்னையைக் கண்காணிக்கச் சரியான தலைமை இல்லாமல் போனதுதான் அதற்குக் காரணம். சென்னை முழுவதும் அ.தி.மு.க-வினர் தேர்தல் வேலை செய்வதிலேயே சுணக்கம் இருக்கிறது. `நீ... நான்...' எனப் போட்டி போட்டிக்கொண்டு தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் நிற்கும் தொகுதிகளில் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். அம்மா இருக்கும்போது இப்படியெல்லாம் செய்ய முடியாது. எவ்வளவு பேர் சீட்டுக் கேட்டு விண்ணப்பித்திருந்தாலும் ஒருவருக்கு ஒதுக்கப்பட்டுவிட்டால் அனைவரும் வேலை செய்துதான் ஆக வேண்டும்.

பா.ஜ.க-வின் 'தொலைநோக்கு'த் திட்டம்... பதறும் அ.தி.மு.க!

அதேபோல, அம்மா உயிரோடு இருக்கும்போது, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனியாக ஒரு பொறுப்பாளரை நியமித்துவிடுவார். அவர்கள் தொகுதியை முழுமையாகச் சுற்றிவந்து, கள நிலவரத்தை ரிப்போர்ட்டாக அம்மாவிடம் அளிப்பார்கள். தொகுதியில் ஏதேனும் தொய்வு தெரிந்தால் உடனடியாக நிர்வாகிகளை அழைத்துப் பேசி சரிசெய்துவிடுவார். ஆனால், தற்போது சென்னையில் யார் என்ன செய்கிறார்கள் எனக் கேட்பதற்கு ஆள் இல்லை. என்ன நடக்கிறது என்பது கட்சி நிர்வாகிகளுக்கும் தெரியவில்லை. குழப்பம் மட்டுமே நிலவிவருகிறது. மற்றவர்களை விடுங்கள், ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியிலேயே கட்சி நிர்வாகிகளின் ஒத்துழைப்பு வேட்பாளருக்கு இல்லை. அம்மா உயிரோடு இருக்கும்போது இப்படி நடக்க விடுவாரா... ஜெயிப்பது கடினம் எனத் தெரிந்தாலும்கூட டஃப் கொடுப்பார். உதாரணமாக ஸ்டாலின் 2006, 2011 நடந்த இரண்டு தேர்தல்களிலும் இரண்டாயிரம், மூன்றாயிரம் வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றிபெற்றார். அந்த அளவுக்குக் கடுமையான நெருக்கடியை எதிர்க்கட்சிகளுக்குக் கொடுப்பார் அம்மா.

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஆனால், தற்போது கட்சியில் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லை. மற்ற மாவட்டங்களில்கூட அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் அவர்கள் தொகுதிக்குள் முடங்கிவிட்டாலும், குறைந்த அளவிலாவது மற்ற இடங்களையும் கண்காணிக்கிறார்கள். ஆனால், சென்னையில் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்பதே உண்மை. அதனால் ஒன்றிரண்டு இடங்களில் ஜெயிப்பதே கஷ்டமாக மாறியிருக்கிறது'' என்கிறார்கள் வருத்தத்தோடு.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு