Published:Updated:

பா.ம.கவுக்கு முக்கியத்துவம், தே.மு.தி.க புறக்கணிப்பு! -அ.தி.மு.கவின் மாறுபட்ட கூட்டணி அணுகுமுறை ஏன்?

பா.ம.க - அ.தி.மு.க - தே.மு.தி.க

பா.ம.கவுக்குக் கொடுக்கும் மரியாதையை தே.மு.தி.கவுக்கு கிஞ்சித்தும் கொடுக்க மறுக்கிறது அ.தி.மு.க. அதற்கான காரணம் என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்

பா.ம.கவுக்கு முக்கியத்துவம், தே.மு.தி.க புறக்கணிப்பு! -அ.தி.மு.கவின் மாறுபட்ட கூட்டணி அணுகுமுறை ஏன்?

பா.ம.கவுக்குக் கொடுக்கும் மரியாதையை தே.மு.தி.கவுக்கு கிஞ்சித்தும் கொடுக்க மறுக்கிறது அ.தி.மு.க. அதற்கான காரணம் என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்

Published:Updated:
பா.ம.க - அ.தி.மு.க - தே.மு.தி.க

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் திருவிழா களைகட்ட ஆரம்பித்துவிட்டது. இருபெரும் திராவிடக் கட்சிகளிலும் விருப்பமனு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, தி.மு.கவில் விருப்பமனு விநியோகமும் தொடங்கிவிட்டது. தி.மு.க கூட்டணியில் கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டு வேலைகளையும் ஸ்டாலின் விரைவில் தொடங்கவிருக்கிறார் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுபுறம், அ.தி.மு.க கூட்டணியில், பா.ஜ.கவும்,. பா.ம.கவும் ஓரளவுக்கு செட்டில் ஆகிவிட்டதாகவே தெரிகிறது. ஆனால், தே.மு.தி.க சார்பில் அந்தக் கட்சியின் பொருளாளர், பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும், அ.தி.மு.க தரப்பில் இருந்து பெரிய ரியாக்‌ஷன் எதுவும் இல்லை. கூட்டணிப் பிரசாரத் தொடக்கவிழா கூட்டத்துக்கு, பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கு நேரடியாகச் சென்று அழைப்பு விடுத்த அமைச்சர்கள், தே.மு.தி.கவைக் கண்டுகொள்ளவே இல்லை. தொடர்ச்சியாக, தங்களை விட பா.ம.கவுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதால்தான், அந்தக் கட்சியை விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறார் பிரேமலதா என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

விஜயகாந்த்
விஜயகாந்த்

தே.மு.தி.க ஆரம்பிக்கப்பட்டு அந்தக் கட்சி சந்தித்த முதல் தேர்தலிலே 8 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றதால், 2009 நாடாளுமன்றத் தேர்தலிலேயே இரண்டு கட்சிகளில் இருந்தும் தே.மு.தி.கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அப்போதும் தனியாகப் போட்டியிட்டு 10 சதவிகித வாக்குகளை அள்ளியது தே.மு.தி.க. அப்போது, இரண்டு கட்சிகளும் இனி தே.மு.தி.கவின் கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் வெல்ல முடியாது என்கிற தோற்றம் உருவானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடர்ந்து, 2011 தேர்தலில் அ.தி.மு.க அழைக்க அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தார் விஜயகாந்த். தொடர்ந்து 2014, 2016 தேர்தல்களில் வெளிப்படையாகவே தி.மு.க தலைவர் கருணாநிதி தே.மு.திகவை கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார். கடந்த தேர்தலில் கூட தே.மு.தி.கவுக்கு ஓரளவுக்கு மவுசு இருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் சுத்தமாகக் கண்டுகொள்ளப்படாத கட்சியாக மாறிவிட்டது தே.மு.தி.க. தங்களின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான பா.ம.கவுக்குக் கொடுக்கும் மரியாதையை தே.மு.தி.கவுக்கு கிஞ்சித்தும் கொடுக்க மறுக்கிறது அ.தி.மு.க.

டாக்டர் ராமதாஸ்
டாக்டர் ராமதாஸ்

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க அரசை ராமதாஸ் மிகக் கடுமையாக ஒரு கட்டத்தில் விமர்சிக்க, ``மாற்றி மாற்றிப் பேசுகிறார் ராமதாஸ். திமுகவுடன் சேர்வதற்கும் பா.ம.க பேசிவருகிறது. நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ம.கவின் வாக்குகள் நமக்குப் பெரிதாக உதவவில்லை; அதனால் பா.ம.கவையும் கூட்டணியில் வைத்துக்கொள்ள வேண்டாம்'' என அ.தி.மு.க தரப்பில் முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில் பா.ம.கவின் தயவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிகம் எதிர்பார்க்கிறார் எனும் அரசியல் விமர்சகர்கள், அதற்கான காரணங்களையும் விளக்குகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''அ.ம.மு.கவுடன் இணைப்பு என்ற பேச்சுக்கு டெல்லிக்கு நேரில் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. தன்னை மட்டுமே நம்பி தேர்தல் களத்தில், தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகிறார். அ.ம.மு.க இந்தத் தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் தென் மாவட்டங்களில் நிச்சயமாக வாக்குகளைப் பிரிப்பார்கள். அதனால், தென் மாவட்டங்களை நிச்சயமாக இந்தத் தேர்தலில் நம்ப முடியாது. அதனால், வடக்கு, மேற்கு மாவட்டங்களில் பெரும்பான்மையான தொகுதிகளையும், டெல்டா பகுதிகளில் கணிசமான தொகுதிகளையும் மட்டுமே இந்தத் தேர்தலில் நம்புகிறார் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.கவுக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து வெற்றிபெற்றுவிடலாம். ஆனால், பா.ம.கவின் தயவில்லாமல் வட மாவட்டங்களில் வெல்ல முடியாது என நினைக்கிறார் எடப்பாடி. கே டூ கே அதாவது கிருஷ்ணகிரியில் இருந்து கரூர் வரை உள்ள நூறு தொகுதிகளே முதல்வரின் முதன்மை இலக்கு. ஒருவேளை, ஆட்சியைப் பிடிக்குமளவுக்கு இடங்களைப் பிடிக்கமுடியாவிட்டாலும் 60 தொகுதிகளைப் பிடித்து கௌரவமான எதிர்க்கட்சியாக அமர்ந்துவிட வேண்டும் என்பதே அவரின் திட்டம். அந்தத் தொகுதிகளும் தென்மாவட்டங்களில் இல்லாமல் இருப்பது கட்சியில் தன் அதிகாரத்தைத் தக்கவைக்க உதவும் எனவும் கணக்குப் போடுகிறார் அவர். கூடவே இடைத்தேர்தலில் 11 தொகுதிகளில் வெற்றிபெற்றபோது, அதில் கணிசமான தொகுதி பா.ம.க தயவில்தான் வெல்ல முடிந்தது எனவும் நினைக்கிறார். அதனால்தான் பா.ம.கவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுக்கின்றனர். அதேவேளை தே.மு.தி.கவுக்கு தற்போது பெரிய வாக்குவங்கி இல்லை. அதனால், கடைசி நேரத்தில் குறைந்த இடங்களையும் பணத்தையும் கொடுத்துச் சரிக்கட்டிக் கொள்ளலாம் என நினைக்கிறார் எடப்பாடி'' என்கிறார்கள்.

அதேவேளை, தே.மு.தி.கவை அ.தி.மு.க தலைமை கண்டுகொள்ளாமல் இருப்பதன் காரணம் குறித்துப் பேசும் அ.தி.மு.கவினர், '`அவர்களுக்கு வாக்குவங்கி இல்லாமல் இருப்பதுகூட பிரச்னை இல்லை. சட்டமன்றத் தேர்தலில் 1,000 வாக்குகள் கூட முக்கியத்துவம் வாய்ந்தவைதான். ஆனால், 'நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்கிறது' என முதல்வர் அறிவித்த பிறகும் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறார் பிரேமலதா. அதுமட்டுமல்ல, தொலைக்காட்சி விவாதங்களில் விஜயபிரபாகரன் நாங்கள் தி.மு.க, அ.தி.மு.க இரண்டு பக்கமும் பேசி வருகிறோம் என்கிறார். அதுமட்டுமல்ல, பிரேமலதா சம்பந்தமில்லாமல் சசிகலாவை உயர்த்தியும் முதல்வரைத் தாழ்த்தியும் பேசி வருகிறார். 234 தொகுதிகளிலும் நாங்கள் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெறுவோம் என்கிறார். அதனால்தான், அவர்களுடன் இணக்கமாகப் போக முடியவில்லை.

தே.மு.தி.க. 
தே.மு.தி.க. 

மருத்துவர் ஆரம்பத்தில் ஒரு மாதிரியாகப் பேசியிருந்தாலும் இப்போது எதுவும் பேசுவதில்லை. அவர் சசிகலா பக்கம், தி.மு.க பக்கம் போவதற்கான வாய்ப்பும் இல்லை. ஆனால், தே.மு.திகவை அப்படி நம்ப முடியாது. எங்கள் கூட்டணியில் பத்து, பதினைந்து சீட்டுவாங்கி போட்டியிடப் போகும் அவர்கள், ஏதோ ஆட்சி அமைக்கப் போவதுபோல் அவசரப்படுத்துகிறார்கள். அந்தத் தொகுதிகளிலும் நிற்குமளவுக்கு வேட்பாளர்கள் அந்தக் கட்சியில் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. எங்கள் தொண்டர்கள், அவர்கள் வேலை செய்யமாட்டார்கள், வேலை செய்ய நிர்வாகிகள் யாரும் இல்லை. எல்லோரும் தி.மு.க உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்குச் சென்றுவிட்டார்கள், அதனால் கூட்டணிக்கு அவர்கள் வேண்டாம் என்றுதான் சொல்கிறார்கள். அதனால், நாங்கள் இப்போது நிச்சயமாகக் கண்டுகொள்ள மாட்டோம். ஆனால், கடைசிவரை காத்திருந்தால் பத்திலிருந்து பதினைந்து இடங்கள் வரை கொடுப்போம். அதுவும் இனிவரும் காலங்களில் அவர்கள் நடந்துகொள்வதில்தான் இருக்கிறது'' என்கின்றனர் காட்டமாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism