Published:Updated:

எய்ம்ஸ் மருத்துவக்குழுவின் ரிப்போர்ட்... முடிவுக்கு வருகிறதா ஜெயலலிதா மரண வழக்கு?!

ஜெயலலிதா | அதிமுக

எய்ம்ஸ் மருத்துவக்குழுவில் இடம்பெற்றிருந்த மருத்துவர்கள் சிலர் வெளிநாடு சென்றிருந்ததால், மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய தாமதமானது. இந்நிலையில், மருத்துவக்குழு தனது அறிக்கையை ஆணையத்திடம் சமர்ப்பித்திருக்கிறது.

எய்ம்ஸ் மருத்துவக்குழுவின் ரிப்போர்ட்... முடிவுக்கு வருகிறதா ஜெயலலிதா மரண வழக்கு?!

எய்ம்ஸ் மருத்துவக்குழுவில் இடம்பெற்றிருந்த மருத்துவர்கள் சிலர் வெளிநாடு சென்றிருந்ததால், மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய தாமதமானது. இந்நிலையில், மருத்துவக்குழு தனது அறிக்கையை ஆணையத்திடம் சமர்ப்பித்திருக்கிறது.

Published:Updated:
ஜெயலலிதா | அதிமுக

2016-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரின் மரணம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், கட்சிக்குள் பிளவுக்கும் வழிவகுத்தது. சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ் ‘ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது’ எனப் பெரிய குண்டைத் தூக்கிப்போட்டார்.

ஜெயலலிதா மரணம்
ஜெயலலிதா மரணம்

மேலும், மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று எடப்பாடியுடன் இணைப்புக்கு கோரிக்கை ஒன்றையும் வைத்தார். அதன்படி, அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, 'ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனி ஆணையம்' ஒன்றை 2017-ம் ஆண்டு, செப்டம்பர் 25-ம் தேதி அமைத்தார். இதைத் தொடர்ந்து பன்னீர்- பழனிசாமி தரப்பு இணைந்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், ஆறுமுகசாமி ஆணையம் ஆமை வேகத்திலேயே செயல்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மருத்துவமனை நிர்வாகம் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று ஆணையம் குற்றச்சாட்டை முன்வைத்தது. மேலும், ஆணையத்தின் விசாரணைக்கு மருத்துவமனை தடை உத்தரவு பெற்றது மட்டுமல்லாமல், ஆணையத்துக்கு உதவியாக எய்ம்ஸ் மருத்துவக்குழு ஒன்றையும் அமைக்க உச்ச நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கியது.

ஆறுமுகசாமி
ஆறுமுகசாமி

அதன்படி, இதயவியல்துறை பேராசிரியர் மருத்துவர் சந்தீப் சேத் தலைமையில் நுரையீரல் சிகிச்சை நிபுணர் அனந்த் மோகன், மயக்கவியல் நிபுணர் விமி ரெவாரி, எண்டோக்ரைனாலஜி நிபுணர் ராஜேஷ் காட்காவத், தடயவியல் மருத்துவமனை மருத்துவர் அனந்த் நவீன் ரெட்டி உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

கிட்டதட்ட ஐந்து ஆண்டுகளில் 12 முறை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் ஏற்படுத்திய ஓ.பி.எஸ்., கட்சியின் மூத்த தலைவர் தம்பிதுரை, அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர், துறைச் செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன், மருத்துவமனை நிர்வாகம், சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் என 150-க்கும் மேற்பட்ட நபர்களிடம் ஆணையம் விசாரணை நடத்தி, அறிக்கையை இறுதிசெய்தது.

எய்ம்ஸ் மருத்துவமனை
எய்ம்ஸ் மருத்துவமனை

ஆனால், எய்ம்ஸ் மருத்துவக்குழுவில் இடம்பெற்றியிருந்த மருத்துவர்கள் சிலர் வெளிநாடு சென்றிருந்ததால், மருத்துவ அறிக்கை தாக்கல் தாமதமானது.

இந்நிலையில், மருத்துவக்குழு தனது அறிக்கையை ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. அதில், "ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அப்போலோ மருத்துவமனை எவ்வித குறையும் வைக்கவில்லை. அங்கு அளிக்கப்பட்ட அனைத்து சிகிச்சைகளுமே முறையான மருத்துவ நடைமுறைகளுக்கு உட்பட்டே இருந்துள்ளன" என்று தெரிவித்திருக்கிறது.

ஜெயலலிதா
ஜெயலலிதா

மேலும், "ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பாதிப்பை ஏற்படுத்திய நோய்களைப் பரிசோதனைகள் மூலம் சரியாகக் கண்டறிந்து சிகிச்சை அளித்துள்ளனர். ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது ஒவ்வொரு நாளும் அவர் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் தேதிவாரியாக, சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட பல்வேறு உடல் உபாதைகள்தான் அவரின் உயிரைப் பறித்துள்ளன" என்று அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

இது தொடர்பாக ஆணைய வட்டாரத்தில் விசாரித்தபோது, "ஆணையம் அமைக்கப்பட்டதற்கான செயலைச் செய்வதற்கு பல இடையூறுகள் இருந்தன. இருந்தபோதிலும், ஆணையம் சிறப்பாகச் செயல்பட்டது. எய்ம்ஸ் மருத்துவக்குழு தனது அறிக்கையை ஆகஸ்ட் 4-ம் தேதியே கொடுத்துவிட்டது. அதிலுள்ள தகவலை இணைத்து விரிவாக அறிக்கையை ஆணையம் தயார் செய்திருக்கிறது. ஆணைய காலம் ஆகஸ்ட் 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, விரைவில் அறிக்கை அரசிடம் சமர்பிக்கப்படும்" என்றனர்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது "தி.மு.க ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதா மரணத்திலுள்ள சதியை விசாரித்து, மர்மக் குற்றவாளிகளின் முகத்திரையை விலக்கி, அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று உறுதி கூறுகிறேன்" என்று தேர்தல் வாக்குறுதியை கொடுத்திருந்தார். அதன்படி, விசாரணை ஆணையத்தின் அறிக்கையைச் சமர்ப்பிக்கப்பட்டதும், நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.