Published:Updated:

`பட்னாவிஸின் ரகசிய சந்திப்பு; ஸ்விட்ச் ஆஃப் ஆன அஜித் பவார் போன்!- மகாராஷ்டிரா அரசியல் மாறிய பின்னணி

அஜித்பவார்
அஜித்பவார்

மகாராஷ்டிரா அரசியலில் நிலவிவரும் குழப்பங்களுக்கு நடுவே சரத்பவாரின் உறவினரும் தற்போதைய துணை முதல்வருமான அஜித்பவார் அதிகம் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் கடந்த ஒரு மாதமாக நடந்துவந்த அரசியல் குழப்பங்கள், சர்ச்சை, திடீர் திருப்பம் ஆகியவை அனைவரும் அறிந்ததே. இன்று காலை முதல் நடந்துவரும், அரசியல் திருப்பங்கள்தான் மகாராஷ்டிரா உட்படத் தேசிய அரசியலில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. நேற்று மாலை வரை உத்தவ் தாக்கரேதான் மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சத்தமில்லாமல் பா.ஜ.க-வின் தேவேந்திர பட்னாவிஸ் பதவியே ஏற்றுக்கொண்டுவிட்டார்.

பதவியேற்பு
பதவியேற்பு

என்.சி.பியை வைத்து பா.ஜ.க ஆடியுள்ள இந்த ஆட்டம் சிவசேனா, காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று மாலை சிவசேனா- காங்கிரஸ்- என்.சி.பி ஆகிய மூன்று கட்சித் தலைவர்களும் ஆலோசனையில் ஈடுபட்ட பிறகு, தாக்கரேதான் அடுத்த முதல்வர் என சரத்பவாரே அறிவித்திருந்தார் அதற்குப் பிறகே இந்த திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

`என்.சி.பி, பா.ஜ.க-வுடன் இணைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அஜித்பவாரின் தனிப்பட்ட முடிவு. இதற்கும் தேசியவாத காங்கிரஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறோம்’ எனத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

சரத்பவார்
சரத்பவார்

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமையும் என மிகவும் நம்பிக்கையாக இருந்து அதற்காகக் கடுமையாக உழைத்தவர் அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், இன்று நடந்துள்ள அரசியல் மாற்றம் பற்றிப் பேசியுள்ள அவர், ``மகாராஷ்டிராவில் வானிலை சட்டென்று மாறிவிட்டது. இதற்கும் சரத்பவாருக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது என நினைக்கிறேன்.

நேற்று மாலை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அஜித்பவாரும் இருந்தார். அப்போதே அவரது செய்கையில் சில மாற்றங்கள் தெரிந்தன. கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே விரைவாக வெளியேறிவிட்டார். கேட்டதற்கு தன் வழக்கறிஞரைச் சந்திக்க வேண்டும் எனக் கூறினார். அதன்பின் அஜித்தின் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டது. இப்போதுதான் தெரிகிறது, அஜித் எந்த வழக்கறிஞரைச் சந்திக்கச் சென்றார் என்று. அஜித்பவார் மகாராஷ்டிரா மக்களின் முதுகில் குத்திவிட்டார். அஜித்பவார் மீது அமலாக்கத்துறை வழக்கு உள்ளது, அதைச் சொல்லி அவரை மிரட்டி பா.ஜ.க தங்கள் வழிக்குக் கொண்டுவந்திருக்க வேண்டும்” என மிகவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

மகாராஷ்டிரா அரசியலில் பல சர்ச்சைகள் நடந்தாலும் யார் விமர்சித்தாலும் இன்று அதிகம் கவனம் ஈர்த்தவர் அஜித்பவார்தான். இவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் அண்ணன் மகன், 1959-ம் ஆண்டு அஹமதுநகர் மாவட்டத்தில் பிறந்தவர். இவர் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாகத் தந்தை இறந்ததால், படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு, தன் குடும்பத்தைக் கவனிக்கத் தொடங்கிவிட்டார். பின்னர் சரத்பவார், அரசியலில் பெரும் புள்ளியாக உருவான பிறகு அவர் உதவியால் தன் மேல்நிலை படிப்பை மும்பையில் தொடர்ந்தார் அஜித்.

1982-ம் ஆண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தலைவராக அஜித் நியமிக்கப்பட்டார். அப்போதுதான் முதல்முறையாக அரசியலிலும் அடியெடுத்து வைத்தார். பின்னர் தன் சித்தப்பாவின் உதவியால் நாடாளுமன்ற உறுப்பினர், மகாராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினர் எனப் பல பதவிகளை வகித்துவந்தார். இதையடுத்து, மகராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று சரத்பவார் தலைமையிலான ஆட்சி நடைபெற்றது. அப்போது அஜித்பவார் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் சரத்பவார் தனியாகக் கட்சி தொடங்கிய பிறகு அவருக்கு மிகவும் நெருக்கமாகி அவரின் ஆலோசகராக, வலது கையாக மாறினார் அஜித்பவார்.

பவார்
பவார்

சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் முக்கியப் புள்ளியாக மாறிய அஜித்பவார் மீது, நதிநீர் ஊழல், அணை கட்டுவதில் முறைகேடு போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், தற்போது மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் திருப்பத்துக்குப் பா.ஜ.க இவரைப் பகடைக் காயாய் பயன்படுத்திக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித்பவாருக்கு 22 என்.சி.பி எம்.எல்.ஏ-க்கள் மற்றும் சில சிவசேனா எம்.எல்.ஏ-க்களின் முழு ஆதரவு இருப்பதை அறிந்த பா.ஜ.க, அவரிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி அஜித்தை தங்கள் வழிக்குக் கொண்டுவந்துள்ளனர்.

இதற்கிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேசினார் சரத்பவார். அப்போதே மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் பற்றிப் பேசப்பட்டதாகவும், பா.ஜ.க, சரத்பவாருக்கு குடியரசுத் தலைவர் பதவி வழங்குவதாகக் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. என்.சி.பியில் சரத்பவாருக்குத் தெரியாமல் எதுவும் நடக்க வாய்ப்பில்லை, எனவே, அவர் மோடியை சந்தித்தபோதே இதற்கு அடித்தளம் அமைத்திருக்க வேண்டும் என மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

அஜித்பவார்
அஜித்பவார்

மேலும் நேற்று சிவசேனா- காங்கிரஸ், என்.சி.பி கட்சிகளின் கூட்டணி முடிந்த பிறகு, தேவேந்திர பட்னாவிஸ், ரகசியமாக அம்மாநில ஆளுநரைச் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும், ஆட்சியமைக்க உரிமை கோரியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்து துணை முதல்வர் பதவியேற்றுள்ள அஜித்பவார், தேசியவாத கட்சியிலிருந்து நீக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

``மகாராஷ்டிராவில் நடக்கும் குழப்பத்தால் குடும்பமும் கட்சியும் உடைந்துவிட்டதாக சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே கருத்து தெரிவித்துள்ளார். மேலும், ``என் வாழ்க்கையில் நான் யாரை நம்புவது, இதுவரை நான் யாராலும் இந்த அளவுக்கு ஏமாற்றப்படவில்லை, நான் அவருக்காக நின்றேன் அவரை மிகவும் நேசித்தேன். இறுதியாக எனக்கு என்ன கிடைத்துள்ளது எனப் பாருங்கள்” என மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார் சுப்ரியா. ஆனால் அதில் அவர் யாரையும் அவர் குறிப்பிடவில்லை.

அடுத்த கட்டுரைக்கு